tamilnadu

img

கருத்தை திரும்பப் பெறுக- டேக்ட்

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், தினசரி நாளிதழ் ஒன்றில் பில் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக தொழில் செய்பவர்கள்தான் ஜிஎஸ்டியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பேட்டி தொழில் முனைவோர்களான எங்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் 50 ஆயிரம் தொழில்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மூடப்பட்டு ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை சார்ந்தவர்களுக்கு ஜாப் ஆர்ட்ர்களாகவோ, உதிரி பாகங்களாகவோ, செய்து கொடுத்து அதற்கான பில் தொகை பெறுவதற்கு 3 மாதம் முதல் ஆறுமாதம் வரை ஆகிறது.

ஆனால் ஜிஎஸ்டி பிரதிமாதம் 20 ஆம்தேதிக்குள் செலுத்த தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 50 வீதம் அபராத வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனால் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பிறகு சுமார் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் அபராதத் தொகையை ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர்கள் செலுத்தி உள்ளனர். இது சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாதிப்பாக தெரியவில்லையா. மேலும், இந்தியாவில் வரிவிதிப்பு கொள்கை அமல்படுத்திய காலத்தில் இருந்து ஜாப் ஆர்டர்களுக்கு இதுவரை வரி இருந்ததில்லை. ஜிஎஸ்டி வரும் வரைக்கும் எந்தவிதமான வரிவிதிப்பும் எந்த அரசும் கொண்டு வந்ததில்லை. ஆனால், ஜிஎஸ்டி-யில் 18 சதவீதம் விதித்து சாதாரண குறுந்தொழில் முனைவோர்களை ஆயிரக்கணக்கில் அவர்களுடைய அடையாளங்களை இழக்க செய்து உள்ளது. இது சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெரியவில்லையா. எங்கள் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் பெருமக்களிடமும், அதிகாரிகளிடமும் தொடர்ந்து சொல்வி வந்தது அவருக்கு தெரியவில்லையா. மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள சிறு குறு தொழில் முனைவோர்களை சட்டத்திற்கு புறம்பாக தொழில் செய்பவர்கள்தான் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்ற சி.பி.ராதாகிருஷ்ணனின் பேட்டி உண்மையில் எங்களைப் போன்ற தொழில்முனைவோர்களை பெரும் வேதனையடையச் செய்துள்ளது. இந்த கருத்தை உடனடியாக அவர் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சிறு குறுந்தொழில் முனைவேர்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

;