tamilnadu

மோடியின் ஆட்சியை தூக்கி எறிவோம் இன்ஜினியரிங் தொழில் முனைவோர் ஆவேசம்

குண்டூசி முதல் பம்ப் செட், வெட்கிரைண்டர், ராணுவ தளவாட உதிரிபாகங்கள், கார், லாரி, பஸ், படகு, கப்பலுக்கு தேவையான ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் வரை 

கோவையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக பம்ப் செட் உற்பத்தியில் இந்தியாவின் 70 விழுக்காடு தேவையை கோவையே பூர்த்தி செய்கிறது. இத்தொழிலில் ரூ.25 லட்சம் வரைமுதலீடு செய்த குறு தொழில், ரூ.5கோடி வரை முதலீடு செய்துள்ள சிறுதொழில் முனைவோர் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் முனைவோர் ஈடுபட்டுள்ள

னர். இந்த சிறு, குறு தொழில்களில் மட்டும் 5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் 20 ஆயிரம் பேரும், ஜாப் ஆர்டர் என்ற பெயரில் கூலிக்கு உற்பத்தி செய்து தரும் பணியில் 30 ஆயிரம் பேரும் அடங்குவர். இதில் லேத் மற்றும் சிஎன்சி வகைஇயந்திரங்களைக் கொண்டு ஜாப் ஒர்க் எனும் இன்ஜினியரிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்குஇயந்திரங்கள் வாங்க அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் ரூ.5 கோடி வரையிலான கடனும், 15 விழுக்காடு மானியமும் வழங்கி வந்தன. ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பிறகு இக்கடனுக்கான மானியத்தையும் ரத்து செய்துள்ளது. இதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஒரே வரி என்ற பெயரில் ஜிஎஸ்டி வரி விதித்தது மோடி அரசு. இந்த வரிவிதிப்பில் ஆண்டிற்கு ரூ.20 லட்சம் வரையிலான தொழிலுக்கு வரி விலக்கு என கூறப்பட்டாலும், மாதத்திற்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை வரவு-செலவு செய்யும் சிறு, குறு இன்ஜினியரிங் தொழிற்கூடங்களை நடத்துவோர் கூட இவ்வரி விதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை.


ஜாப் ஒர்க் வழங்கும் பெரு நிறுவனங்கள் 6 முதல் 8 விழுக்காடு வரி செலுத்தினால் போதும், இவர்கள் மாதந்தோறும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியதில்லை. ஆனால், திரும்ப பெற முடியாத இந்த வரியை பெரு நிறுவனங்கள் செலுத்த மறுப்பதால் ஜாப் ஆர்டர் வாங்கும் சிறு, குறு தொழில் செய்வோரே ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் வங்கியில் கடன்பெற்று தொழில் தொடங்கி கிடைக்கும் கூலியில் மூலப்பொருள்கள், இடத்திற்கான வாடகை, மின் கட்டணம், ஆள் கூலி மற்றும் இயந்திர தேய்மானம் போன்ற செலவுகளை கழித்தால் சொற்பமே மிஞ்சும். இதைக்கொண்டு வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். இந்நிலையில் மத்திய அரசு விதித்த 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி என்பது இவர்களுக்கு பேரிடியாகும். அதுவும் செய்த வேலைக்கு ஆர்டர் வழங்கிய நிறுவனங்களிடமிருந்து கூலி பெறவே நான்கு, ஐந்து மாதங்களாகும். எனவே மாதந்தோறும் வரி செலுத்துவது இயலாத காரியமாகும். ஆனால் உரிய தேதியில் வரி செலுத்த தவறினால் நாளொன்றுக்கு ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும். இதனால் வரி செலுத்தும் போது அபராதத் தொகையாக ரூ.9 ஆயிரம் வரை கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. இதையும் சேர்த்தால் 27 விழுக்காடு வரியாகிறது. பாஜக அரசின் இந்த தொழில் கொள்கையானது குதிரையை கீழே தள்ளியது மட்டுமின்றி, குழியும் பறித்த கதையாகத்தான் உள்ளது என தொழில் முனைவோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


இதுதொடர்பாக சிறு தொழில் செய்து வரும் ஜேம்ஸ் என்பவர் கூறும்போது, ரூ.30 லட்சம் வங்கி கடன் பெற்று ரூ.50 லட்சம் முதலீட்டில் தொழில் தொடங்கினேன். 15 பேர் என்னிடம் வேலை செய்து வந்தனர். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் பாதி தொழில் அழிந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் மீதிதொழிலும் நலிந்து விட்டது. மாதந்தோறும் ஆடிட்டர் வைத்து வரி செலுத்த முடியவில்லை. நான் செய்யும் தொழிலுக்கு கூலி பெற 4, 5 மாதங்கள் ஆகும். அதற்கு மேல் 18 விழுக்காடு ஜிஎஸ்டியுடன், அபராதம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.9ஆ யிரம் வரை கூடுதலாக செலுத்த வேண்டியதாகி விடுகிறது. ஒவ்வொரு மாதமும் இதே நிலை தான். இதனால் கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளில் மேலும் கூடுதலாக ரூ.10 லட்சம் வரை கடன்காரனாகி விட்டேன். 15பேர் வேலை செய்து வந்த இடத்தில் இன்று 5 பேர் தான் வேலை செய்கிறோம். பெரு நிறுவனங்களும் உற்பத்தி செய்து ஸ்டாக் வைத்த நிலை மாறி இன்று ஆர்டருக்கு உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் தொடர்ந்து வேலை கிடைப்பதில்லை. தொடர் வேலையின்மையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும் தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். இவ்வாறு உற்பத்தி துறை பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. உற்பத்தி துறையில் ஏற்படும் பாதிப்பு வெளிநாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலையை உருவாக்கும். இது மிகப் பெரிய ஆபத்தாகும். எனவே, கோவையின் தொழில் துறையை குறிப்பாக மோட்டார், இன்ஜினியரிங் தொழிலை சீரழித்த பாஜக அரசை தூக்கி எறிய வேண்டும். மத்தியில் அமையும் புதிய அரசு ஜிஎஸ்டியிலிருந்து இன்ஜினியரிங் தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அரசு தொழிற்பேட்டை அமைத்துக் கொடுக்க வேண்டும். சிலாப் முறையில் மின் கட்டணம் வசூல் செய்வதை கைவிட்டு, தொழிற்கூடத்திற்கு ஒரு மின் இணைப்பு வழங்குவதோடு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் வெளியில் கொடுக்கும் ஆர்டர்களில் எங்களுக்கு 30 விழுக்காடு ஜாப் ஆர்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்.


- (ந,நி)