tamilnadu

img

தண்ணீருக்காக அலை மோதும் யானை கூட்டங்கள்

மேட்டுப்பாளையம், ஏப்.12-கோவை வனகோட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தண்ணீரை தேடி காட்டு யானை கூட்டங்கள் அலைமோதி வருகின்றன. யானை, புலி, சிறுத்தை, கரடி,மான், கட்டெருதுகள் என எண்ணற்றவன உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது மேற்கு தொடர்ச்சி மலைகாடுகளை ஒட்டியுள்ள கோவை வனக்கோட்டம். இப்பகுதியில் கடந்தாண்டு பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்துப்போன காரணத்தினால் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை வனச்சரகங்களில் கடும் வறட்சிநிலவி வருகிறது. கடந்த சில தினங்களாக கோடை கால வெப்பம் அதிகரித்தபடி உள்ளதால் இதுவரை வன உயிரினங்களின் தாகம் தீர்க்க உதவிய வனக்குட்டைகள், நீரோடைகள் என அனைத்து நீராதாரங்களும் காட்டினுள் வறண்டு வருகின்றன. இதனால் தாகம் தீர்க்க வழியின்றி காட்டுயிர்கள் பரிதவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, காட்டில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மிகப்பெரிய காட்டுயிரான யானைகளே பெரிதும் பாதிக்கப்படுகின்றன. யானைகள் உயிர் வாழ நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 200 லிட்டர்தண்ணீர் தேவைப்படுவதால் அவைகூட்டம்கூட்டமாக நீரை தேடி அலைகின்றன. யானைகள் தனது நுகர்வு திறனால் சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள நீராதாரத்தை கண்டறியும் திறன் பெற்றது என்பதால் அவை தாகம் தீர்க்க காட்டின் ஒவ்வொரு மூலைக்கும் அலைந்து திரிகின்றன. மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார காடுகளில் இன்னமும் முழுமையாக வறண்டு விடாத வனக்குட்டையைதேடி யானைகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றன. தற்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் வழியில் கல்லார் காட்டின் அருகே உள்ள வனக்குட்டையில் இன்னமும் தண்ணீர் உள்ளதால், தாகம் தீர்க்கவும், உடல் வெப்பத்தை தணித்து கொள்ளவும் ஏராளமான யானைகள் வந்தபடி உள்ளன. இங்குள்ள குட்டையில் வழக்கத்தை விட கால் பங்கு அளவே தண்ணீர் இருந்தாலும் இதனை தேடி யானைகள் வருகின்றன. உயிர் வாழ நீரை தேடி அலையும் யானைகள் இங்குள்ள தண்ணீரை கண்டதும் பாய்ந்தோடி வந்து தாகம் தீர்ப்பதோடு ஆனந்தமாய் குளித்தும், உற்சாகமாய் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மகிழ்கின்றன. நீரை தேடி யானைகள் செல்லும் வழித்தடத்தில் பயணிக்கும் மான்கள், காட்டெருதுகள் போன்ற விலங்கினங்களும் இங்கு வந்து நீர் அருந்தி செல்கின்றன. அதேநேரம், மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார வனப்பகுதியில் வழக்கமாய் பொழியும் கோடை மழை விரைவில் பெய்தால்மட்டுமே வனத்தினுள் நிலவும் வறட்சிமறையும் என தெரிவிக்கும் வனத்துறையினர், வன உயிரினங்களின் தாகம் தீர்க்க வன எல்லைகளில் தண்ணீர் தொட்டிகள் மற்றும் செயற்கை குட்டைகள் அமைத்து அவற்றில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

;