tamilnadu

img

கோவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்பேன் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்குறுதி

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக நொடிந்து போயிருக்கும் சிறு,குறு தொழில்களை புணரமைக்கவும், கோவையின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக நிற்பேன் என சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் தேர்தல் பரப்புரையில் வாக்குறுதியளித்தார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவர் புதனன்று கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் தனது வாக்காளர் சந்திப்பு பயணத்தை துவங்கி, சிங்காநல்லூர் சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளான வியாழனன்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பரப்புரை பயணத்தை துவங்கினார். கோவை நெசவாளர் காலனியில் திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது.


இதில் மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், காங்கிரஸ் கட்சியின் கணபதி சிவக்குமார், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், கொமதேக ஆர்.எஸ்.தன

பால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன், ஐஜேகே மணிமாறன், முஸ்லிம் லீக் முகமது பசீர்மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதி பணிக்குழு நிர்வாகிகள் பி.நாச்சிமுத்து, சிவிசி.குருசாமி, யு.கே.சிவஞானம், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.ராதிகா, பி.கே.சுகுமாறன், ஆர்.சற்குணம், கே.ரவிச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.  இப்பிரச்சார இயக்கம், பாரதி பார்க், ராமலிங்கம் காலனி, வடகோவை காமராஜபுரம், தெப்பக்குளம், ம.ந.க.வீதி, இடையர்வீதி, வெறைட்டிஹால் ரோடு, ஐந்து முக்கு உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. முன்னதாக வாக்காளர் சந்திப்பின்போது வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் எட்டு புதிய ரயில்கள், ஐந்து மேம்பாலங்கள், கோவை ரயில்நிலையத்தை ஆதார் நிலையமாக தரம் உயர்த்தியதுடன், நாடாளுமன்ற தொகுதிக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து நிதிகளையும் முறையாக மக்களின் பயன்பாட்டிற்கு செலவு செய்தவன்.


நடைபெற இருப்பது நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்திலும் வெற்றிபெறும். நீங்கள் அளிக்கும் ஒரே ஒரு வாக்கு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்க உள்ளது. மத்தியமோடி அரசு கார்ப்பரேட்டுகளின் நலனுக்கான திட்டங்களை வகுத்து இந்திய நாட்டின் சிறு,குறு தொழில்கள் அனைத்தையும் முடமாக்கிவிட்டது. கோவையில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளித்து வந்த இத்தொழில் நிறுவனங்கள் மூடுவிழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆகவே, மத்திய அரசின் தவறான கொள்கையாலும், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நமது மாவட்ட சிறு,குறு தொழில்களை மீட்டெடுப்போம். நான் வெற்றி பெற்றால் கோவையின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள சிறு,குறு தொழிலை புனரமைத்து மீட்டுடெடுப்பேன். அதேபோல் அமைதி இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும். கோவையின் அமைதியை வலியுறுத்தும் அமைதிக்கானவேட்பாளரான என்னை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார்.

;