tamilnadu

img

யுத்த களம்

வியர்வை ராஜீவை குளிப்பாட்டியிருந்தது. வேகுவேகுவென்று வந்து கொண்டிருந்தான். அவன் வந்த வேகத்தைப் பார்த்து அடிகுழாயில் நீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்களும். அரசமரத்தின் அடியே உட்கார்ந்திருந்த வயதான ஆண்களும். அவனை நோக்கி வந்தனர். முதியவரான இருளப்பன், “என்னப்பா சேதி” என நடுங்கும் குரலில் கேட்டார். ஒரு நிமிடம் கனத்த மவுனம் நிலவியது, மூச்சு வாங்கியதில் ராஜீவால் உடனே பேச முடியவில்லை. வியர்வையோடு வழிந்த கண்ணீரை மறைத்து துடைத்துக் கொண்டான். பிறகு, “பனிரெண்டு மணிக்கு மேல, நம்ம வீடுகள இடிக்க அதிகாரிக வர்றாங்களாம்” என்று விட்டு விட்டு அவன் கூறியதும் அதைக் கேட்டவர்களின் தலையில் இடி விழுந்தது போலிருந்தது.நூற்றுக்கும் மேலிருந்த குடிசை வீடுகள், இருந்த அப்பகுதி அங்கே குடியிருந்த எளிய மக்களால், “வெண் மணி நகர்” என அழைக்கப்பட்டது. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக் கும் அந்த இடம் கோவில் புறம்போக்கு இடம் என அடங்கலில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். ஆனால் அங்கே குடிசை மக்கள் கும்பிட வைத்துள்ள கருப்பணசாமியை தவிர வேறு கோவில் எதுவும் இல்லை. இதுநாள் வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. சமீபத்தில் ஷாப்பிங் மால் அருகில் வந்த பிறகு தான், போலீஸ், தாசில்தார், அறநிலையத்துறை அதிகாரிகள் என அடிக்கடி வந்தனர். குடிசைகளை அகற்றிவிட்டால் ஷாப்பிங் மால் எடுப்பாகத் தெரியும். மாலுக்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு வசதியாக இருக்கும்.


மதியம் பனிரெண்டு மணிக்கு முன்பே மூன்று ஜே.சி.பி. ராட்சச வாகனங்கள் வந்து நின்றன. அடுத்த ஐந்து நிமிடங்களில் டி.எஸ்.பி.தலைமையில் காவல்துறைப் பட்டாளமும், தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் முகாமிட்டனர். அவர்கள் உள்ளே நுழையும் வழியை அடைத்து முதலில் பெண்கள் குழந்தைகளுடனும், அதற்குப்பிறகு வயதான ஆண்களும் அணிவகுத்து ஒரு கோட்டை போல் நின்றனர்.தாசில்தார், “உடனடியாக தட்டுமுட்டு சாமான்கள் எடுத்துகிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க, இல்லையின்னா அத்தனை பேரையும் கைது பண்ணி ஜெயில்ல அடைக்க வேண்டி வரும்” என மிரட்டினார். மக்கள் ஒரே குரலில், குடிசையையும் காலி செய்ய முடியாது, ஜெயிலுக்கும் போக முடியாது என ஆராவரித்தனர். தாசில்தார், டி.எஸ்.பி.யுடன் கலந்து கொண்டு, ஜே.சி.பி. வண்டியை முன்னேறச் சொன்னார். ஜே.சி.பி. வண்டி நகர்ந்த அடுத்த நொடி இன்னும் பெயர் கூட வைக்கப்படாத பெண் குழந்தையை அதன் தாய் கன்னியம்மாள், வண்டியின் சக்கரத்தின் அருகே தரையில் வைத்தாள், ஜே.சி.பி. வண்டியின் சக்கரத்தின் அடியே இருந்த அந்த குழந்தை விறிட்டு அழுதது. இதைச் சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் திகைத்துப் போய் பின்வாங்கினர். அவர்கள் முற்றிலுமாக இடத்தை விட்டு வெளியேறும் வரை, குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தது.

;