tamilnadu

img

கிறிஸ்துவ தேவாலயத்துக்குள் புகுந்து தாக்குதல்

அன்னூர், மே 8- அன்னூர் அடுத்த கஞ்சப் பள்ளியில் இந்து முன்னணியை சேர்ந்த சிலர் கிறிஸ்துவ தேவாலயத்திற்குள் புகுந்து வெறித்தனமான தாக்குதல்நடத்தியுள்ளனர். இளைஞர் மற்றும்முதியோர்களை ஜெபம் செய்யக்கூடாது என்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஆறு பேர் படுகாயமடைந்தனர். கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சப்பள்ளி பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் 15 வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. இந்த தேவாலயம் அரசு அங்கீகாரத்துடன் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் ஜெபம் செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில்ஜெபம் செய்து கொண்டிருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் தேவாலயத்திற்குள் புகுந்து ஜெபம் செய்யக்கூடாது என்று மிரட்டி தாக்க முற்பட்டுள்ளனர். அப்பொழுதே தேவாலய நிர்வாகிகள் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த மே 3 ஆம்தேதியன்று கிறிஸ்தவ ஆலயத்தில் அய்யனார், அங்கம்மாள், கிட்டான் மூப்பன், மருத்தாள், ரங்கசாமி ஆகியோர் ஜெபம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த தங்கராஜ் (எ)பிரகாஷ், கனகராஜ்,சந்தோஷ் குமார்,கோகுல் பிரசாத், தனசேகர், மணிகண்டன் ஆகியோர் கிறிஸ்துவ தேவாலயத்திற்குள் நுழைந்து இரும்புக் கம்பியால் முதியோர்கள், இளைஞர்களைகடுமையாக தாக்கியுள்ளனர். மேலும்அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு இனி ஜெபம் செய்யக்கூடாது மீறிசெய்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

 இதைத்தொடர்ந்து கிறிஸ்துவ தேவாலய நிர்வாகி ரங்கசாமி அன்னூர் காவல் நிலையத்தில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள்மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்துஅன்னூர் காவல்துறையினர் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்து முன்னணி அமைப்பைசேர்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து தேவாலய நிர்வாகி கூறுகையில், எங்கள் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவ மதத்தினருக்கு இதுபோல் மீண்டும் பிரச்சனைகள் நடைபெறாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம்

தேவாலயத்திற்குள் புகுந்து இந்து முன்னணியினர் நடத்திய தாக்குதல்சம்பவத்திற்கு தமிழ்நாடு சிறுபான்மைமக்கள் நலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், திட்டமிட்டு நடைபெறும் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடும் அமைப்பினர்மீது காவல்துறை சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வதே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதற்கு காரணம். மதக்கலவரம் உருவாக வேண்டும் என்கிற சூழ்ச்சியோடு நடந்து கொள்கின்ற இதுபோன்ற அமைப்பினர் மீது கடுமையான பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் தொடராது என தெரிவித்தனர்.முன்னதாக, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் கோவை மாவட்ட தலைவர் முகமதுமுசீர் தலைமையிலான நிர்வாகிகள் இந்து முன்னணியினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.


;