சென்னை:
நியூஸ் 18 தமிழ்நாடு டி.வி.சேனல் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது, சமூக விரோதிகள், காவல் துறை முன்னிலையில் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கும் அதைதடுத்து நிறுத்தக்கோரி,உதவிகேட்ட பின்பும்உதவிடாமல் வேடிக்கை பார்த்த காவல்துறையினருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (T.U.J.) கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி..புருஷோத்தமன் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருமங்கலம் தொழிலதிபர் ரமேஷ் மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை கடத்திச்சென்று சொத்துக்களை எழுதி வாங்கியதாக, அனைத்திந்திய இந்துமஹா சபா கட்சியின் தலைவர் ஸ்ரீனிவாசராவ், அரசு அதிகாரிகள் மற்றும் 10 நபர்கள்மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்புக்கு அழைத்து வந்தனர்.இந்த தகவல் அறிந்து, எழும்பூர்,நீதிபதிகள் குடியிருப்புக்கு செய்தி சேகரிக்க நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர் அன்பரசன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். பின்பு அன்பரசன் தனது செல்போன் மூலம் புகைப்படங்கள் எடுத்துள்ளார். அப்போது அன்பரசனின் மொபைல் போனை பறித்த ஶ்ரீயின் அடியாட்கள் , அநாகரிகமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து தாக்கி உ ள்ளனர். மேலும், ஒளிப்பதிவாளர் வைத்திருந்த கேமிராவை கீழே தள்ளிவிட்டு அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
வேறு சில வழக்குகளுக்காக அங்கு வந்திருந்த காவல்துறையினரிடம், நியூஸ் 18தமிழ்நாடு செய்தியாளர் தங்களின் உடமைகளுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு கொடுங்கள் என கெஞ்சி கேட்டபோது; போலீசார் கூலாக “சாரி சார் இது எங்க லிமிட் இல்லை” என்று கூறிவிட்டு,தாக்குதல் சம்பவத்தை வேடிக்கை பார்த்தபடியே நின்றுள்ளனர். இதன் பின்னர், தகவல் அறிந்து, நீதிபதிகள் குடியிருப்புக்கு விரைந்து வந்தஎழும்பூர் காவல் நிலைய காவலர்கள்,சமூக விரோதிகளிடமிருந்து, செய்தியாளர் அன்பரசன், ஒளிப்பதிவாளர் இருவரையும் பாதுகாத்து,செல்போன் மற்றும் ஒளிப்பதிவு கேமிரா மற்றும் கருவிகளை மீட்டுக் கொடுத்துள்ளனர்.சட்டவிரோதமாக நீதிபதிகளின் குடியிருப்புக்குள் புகுந்து, செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் விடுத்து, தாக்கி கேமிராவையும், கைபேசியைசேதப்படுத்திய சமூக விரோதிகள் யார் என்று அறிய, உடனடியாக, தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின், இச்சம்பவம் குறித்து உண்மை நிலையை அறிய மாவட்ட வருவாய் துறை அதிகாரி மட்டத்திலான அதிகாரியை கொண்ட விசாரணை அதிகாரியை நியமித்து, விசாரிக்க வேண்டும். நீதிபதிகள் குடியிருப்புகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும்.சம்பவங்களை நேரில் பார்த்தும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த காவல்துறைஅதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களில் கொண்டுவரப்பட்டதை போன்று பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.