tamilnadu

img

கோவிட் காலத்தில் ஆன்லைன் கல்வி... கேரளத்துக்கு இஸ்ரோ தலைவர் வாழ்த்து

திருவனந்தபுரம்:
ஊரடங்கு நீடிக்கும் சூழ்நிலையில் பொதுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாநில அரசு தொடங்கிய ஆன்லைன் வகுப்புகளுக்கு இஸ்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளது. கேரளாவின் பணிகள்முன்மாதிரியானவை என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் மற்றும் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய (வி.எஸ்.எஸ்.சி) இயக்குனர் எஸ்.சோம்நாத் தெரிவித்தனர். தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மாத இதழில் (ஜூன்) இவர்களது இரண்டு மதிப்பீடுகளும் பிரசுரமாகி உள்ளன.கோவிட்-19 க்கு எதிராக கேரளாவின் அசாதாரண நடவடிக்கையில் ஆன்லைன் வகுப்புகள் மிக முக்கியமான படியாகும் என்று இஸ்ரோ தலைவர் குறிப்பிட்டுள்ளார். கேரள மாதிரியின் ஒரு பகுதியாக எட்ஸாட் செயற்கைக் கோளைப் பயன்படுத்தி இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார். கல்வி நாட்களை இழந்துவிடாமல் விக்டேர்ஸ் தொலைக்காட்சி சானல் மூலம் ஆன்லைன் வகுப்புகளை துவக்கிய கேரளத்தின் முடிவு பொருத்தமானது.

ஆன்லைன் கற்றல் வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் தொலைதூர பழங்குடி கிராமங்களில் குழந்தைகளுக்கு வகுப்புகள் வழங்குவது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். கைட் விக்டேர்ஸ் சேனலுக்கும் இஸ்ரோவுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. மிகுந்த ஆர்வத்துடன் விக்டேர்ஸ் சேனலை இஸ்ரோ பின்தொடர்கிறது என்றும் எழுதியுள்ளார்.தரமான கல்வி பெற சமமான வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் கற்றல் மூலம் கிடைக்கும் என்று எஸ்.சோம்நாத் கூறியுள்ளார். நாட்டில் முதலாவது கோவிட் பாதிப்பு ஏற்பட்டதும் கேரளா, அபாயங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தது. ஆன்லைன் வகுப்புகள் மூலம், எட்சாட்டை எவ்வாறு வெற்றிகரமாகப் பயன்படுத்துவது என்பதை கேரளா நிரூபித்துள்ளது என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாத 2.5 லட்சம் மாணவர்களுக்கு இதை உறுதி செய்வது சிறிய விஷயமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

;