tamilnadu

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு:  பினராய் விஜயன்

திருவனந்தபுரம், மார்ச் 31-

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களை எந்தக் காரணம் கொண்டும் அவமரியாதையாக நடத்தக்கூடாது என கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களை எந்தக் காரணம் கொண்டும் அவமரியாதையாக நடத்தக்கூடாது. வெறுப்புடனும் பார்க்கக்கூடாது. தற்போது நம்முடைய நாட்டில் கொரோனா நோய் பரவி வரும் சூழ்நிலையில் சிலர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்புகின்றனர்.  இந்த நோய் வருவதற்கு குறிப்பிட்ட யாரும் காரணமல்ல. யாரையும் குற்றப்படுத்த முடியாது. இந்த நோய் உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் நம்முடைய சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் பாலைவனத்தில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் தான் நாம் சாப்பிடுகிறோம். அதை யாரும் மறக்கக்கூடாது. நோய் பரவிய சமயத்தில் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த பெரும்பாலானோரும் தேவையான அனைத்து நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தனர். தற்போது வெளிநாடுகளில்  வசிப்பவர்களுக்கு தங்களது குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள் என்ற கவலை இருக்கும். அவர்கள் எந்த காரணம் கொண்டும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அங்கு பாதுகாப்பாக இருங்கள் . இங்கு உங்களது குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். இந்த நாடு உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும். இது உறுதி. 

முதல்வரின் நிவாரண நிதிக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைத்து இருக்கிறது. கேரள நர்சிங் கவுன்சில் ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளனர். அரசு ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். இதற்கு முன்பு கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது அரசு ஊழியர்கள் சிறப்பாக உதவினர். இந்த மாதம் 20 ஆம் தேதியுடன் நிறைவடைந்த அரசு தேர்வாணைய ரேங்க் பட்டியல் ஜூன் 20ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தற்காலிக ஊழியர்கள் சம்பளம் வாங்க செல்வதற்கு அனுமதி உண்டு. இவ்வாறு செல்பவர்கள் சமூக விலகலை கடைப்பிடித்து தேவையான ஆவணங்களை உடன் கொண்டு செல்ல வேண்டும். 

இம்மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் தங்களது பொறுப்பை ஒப்படைக்க முடியாவிட்டாலும் அவர்கள் ஓய்வு பெற்றவராக கருதப்படுவார்கள். அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளுக்கு இணையதள கண்காணிப்பு முறை ஏற்படுத்தப்படும். சில தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஸ்டாப் நர்சுகளை 3 நாள் தொடர்ந்து வேலை வாங்கிய பின்னர் 4 நாட்களுக்கு சம்பளம் இல்லாமல் விடுமுறை கொடுப்பதாக தகவல் வந்துள்ளது.இது முறையல்ல . இது தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  21 முதல் 60 வயதுக்கு  உட்பட்டவர்களுக்கு வெளியே செல்ல பாஸ் வழங்குவது தொடர்பாக போலீசார் செல்போன் மூலம் பரிசோதனை நடத்த வேண்டி வரும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மருத்துவமனைகளுக்கு அருகிலேயே தங்குவதற்கு வீடு கிடைக்கா விட்டால் அவர்களுக்கு ஓட்டல்களில் தங்க வசதி ஏற்படுத்தப்படும். ஏடிஎம்களில் உடனுக்குடன் பணம் நிரப்பப்படும். வங்கி ஊழியர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்படும். 

மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆயுர்வேதத்தையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரபல ஆயுர்வேத மருத்துவர்களிடம் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் அறிவுரை வழங்குவார்கள். அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கு சில கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு தொடங்கி உள்ளதாக தகவல் வந்துள்ளது. இப்போதைக்கு அது தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 

;