tamilnadu

குடியரசைக் காக்க கேரளத்தில் கரம் கோர்த்த 70 லட்சம் பேர்

திருவனந்தபுரம், ஜன.26- இந்தியாவுக்காக கேரளத்தின் தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் கரம்கோர்த்தனர். வரலாற்றில் முதல் முறையாக சுமார் 70 லட்சம் பேர் நாட்டின் அரசமைப்பு சாசனத்தின் முகப்பை ஒரே நேரத்தில் உச்சரித்தனர். காசர்கோடு முதல் களியக்காவிளை வரை சாலையின் வலது பக்கத்தில் அமைக்கப்பட்ட சங்கிலியின் முதல் நபராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை காசர்கோடில் கரம்கோர்த்தார்.  கடைசி கண்ணியாக களியக்காவிளையில் மற்றொரு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி நின்றார். முதல்வர் பினராயி விஜயன், சிபிஐ மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன் உள்ளிட்ட எல்டிஎப் தலைவர்கள் திருவனந்தபுரம் பாளையத்தில் மனிச்சங்கிலியின் கண்ணிகள் ஆனார்கள். எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் கிள்ளிப்பாலத்தில் கரம் கோர்த்தார். சரியாக 4 மணிக்கு அரசமைப்பு சாசனத்தின் முகப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் கரங்களை நெஞ்சுக்கு நேராக நீட்டி உறுதிமொழி ஏற்றனர். அதன்பிறகு 250க்கும் மேற்பட்ட மையங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அமைச்சர்களும் எல்டிஎப் தலைவர்களும் சமூக- கலாச்சார- சமுதாய தலைவர்கள் பேசினர். முதல்வர் பினராயி விஜயனும், சிபிஐ மாநில  செயலாளர் கானம் ராஜேந்திரனும் பாளையத்தில் பேசினர். மலப்புறத்தில் நடந்த மனித மகாசங்கிலியில் காஷ்மீரின் போராளியும் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினரும் காஷ்மீர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகமது தாரிகாமி இணைந்து கொண்டார். திருவனந்தபுரத்தில் நடந்த மத்தியக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தாரிகாமி ஆயுர்வேத சிகிச்சை  பெற்று வருவதற்கிடையே மனிதச்சங்கிலியில் பங்கேற்றார். மத்தியக்குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி, அமைச்சர் கே.டி.ஜலீல் உள்ளிட்டோர் இங்கு கரம் கோர்த்தனர். களியக்காவிளையின் கேரளப் பகுதியான இஞ்சிவிளை யில் நடந்த விளக்க கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் சி.கே.ஹரீந்திரன் தலைமை வகித்தார். எம்.ஏ.பேபியுடன் சிபிஐ மாநில துணை செயலாளர் பிரகாஷ்பாபு, பிஷப் சுவாமி தாஸ், இமாம் ஹாரிப் மதனி உள்ளிட்டோர் பேசினர். முன்ன தாக தமிழக பகுதியான களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் சிபிஎம் குமரி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்ல சுவாமி தலைமையில் உறுதிமொழி ஏற்பும், மார்த்தாண்டம் வட்டார செயலாளர் அனந்தசேகர் தலைமையில் விளக்க கூட்ட மும் நடந்தது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ் உள்ளிட்டோர் பேசினர். பின்னர் ஊர்வலமாக சென்று மனிதச்சங்கிலியில் இணைந்தனர்.

;