tamilnadu

img

வன விலங்குகளின் தாகம் தணிக்க காப்புக்காடுகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்....

ஓசூர்:
ஓசூர் வனச்சரகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்காரணமாக, காப்புக்காடுகளில் வாழும் வனவிலங்குகளின் தாகம் தணிக்கும் வகையில் மூன்றாவது கட்டமாக சானமாவு காப்புக்காட்டில் 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவுஉள்ள இரண்டு தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர் வனச்சரகத்தில் சானமாவு காப்புக் காடு,செட்டிப்பள்ளி காப்புக்காடு, கும்பளம்-1 காப்புக்காடு, கும்பளம்-2 காப்புக்காடு, குலு காப்புக்காடு, சானமாவுவிரிவாக்கம் காப்புக்காடு உட்பட 12 காப்புக்காடுகள் அமைந்துள்ளன.இந்த காப்புக்காடுகளில் வாழும் யானை, சிறுத்தை, காட்டெருமை, புள்ளிமான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகளின் குடிநீர்த் தேவைக்காக, கோடைக்காலத்தில் ஆரம்ப நிலையில் முதல்கட்டமாக வனத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள இரண்டு பெரிய தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து வனப்பகுதிகளில் சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக, வன விலங்குகளின் தாகம் தணிக்கும் வகையில் 3வது கட்டமாகத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளை வனத்துறையினர் மேற் கொண்டுள்ளனர்.இதுகுறித்து ஓசூர் வனச்சரகர் ரவி கூறும்போது,“நடப்பாண்டில் ஓசூர் வனச்சரகத்தில் கடும் வெயில் காரணமாக நீர்நிலைகள் வற்றி வறட்சி ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கோடை மழையும் நீர் நிலைகளை நிரப்பும் அளவுக்குப் போதுமானதாக இல்லை.
இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனத்தை விட்டுவெளியே செல்வதைத் தடுக்கும் வகையில் மூன்றாம்கட்டமாகச் சானமாவு காப்புக்காட்டில் உள்ள சுமார் 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 பெரிய தொட்டிகளில் டிராக்டர் மூலமாகத் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.வனவிலங்குகளின் தாகம் தணிக்க, கோடைக் காலம் முடியும் வரை அனைத்து காப்புக்காடுகளில் உள்ளதொட்டிகளிலும் தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.

;