tamilnadu

img

வேளாண் விரோத அவசர சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு... ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தீவிரம்

வேளாண் விரோத அவசர சட்டங் களை முறியடிப்போம் என்ற அறைகூவலுடன் ஒரு கோடி  கையெழுத்துக்களை பெறும் இயக்கத்தை அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு எழுச்சியுடன் மேற்கொண்டுள் ளது. இந்திய வேளாண்மையை முழுக்க முழுக்க பன்னாட்டு, உள்நாட்டு, முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் வகையில்

1. அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்தச்சட்டம் 2020

2. வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் 2020

3.விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020

இவை மூன்றையும் அவசரச் சட்டமாக கொண்டு வந்துள்ளது, அடுத்து மின்சார திருத்தச் சட்டம் 2020 தற்போது வரைவு அறிக்கையாக உள்ளது. விரைவில் அவசரச் சட்டமாக அறிவிக்கப்படவுள்ளது.

மின்சார திருத்தச் சட்டம் 2020
மின்சார திருத்தச் சட்டம் 2020 தற்போது அறிமுக நிலையில் உள்ளது. விரைவில் அவசர சட்டமாக்கப்படும். அப்படி சட்டமாக்கப்பட்டால் எவருக்கும் மின்சார கட்டண சலுகையோ, இலவச மின்சாரமோ கிடைக்காது. குறிப்பாக மின் உற்பத்தி, மின்பகிர்மானம், மின் திட்ட முதலீடு உட்பட அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு, மின்கட்டணம் பல மடங்கு உயரும், மின் இணைப்பு பெற கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படும், மேலும் தமிழகத்தில் விவசாயிகள் போராடிபெற்ற இலவச மின்சாரம் உரிமையை இழப்பர்.குடிசை வீடுகளுக்கான ஒற்றை விளக்கு கூட இருக்காது, சிறு-குறு தொழில்கள், நெசவாளர்கள் மின் கட்டண சலுகை, வீடுகளுக்கு 100 யூனிட் வரை கிடைத்து வந்த இலவச மின்சாரம் கிடைக்காது. எனவே விவசாயிகள் போராடி பெற்ற இலவச மின்சார உரிமை இழப்பர். ஒரே நாடு, ஒரே மின்சார சட்டம் என்ற மத்திய அரசின்கொள்கை திணிப்பால் மாநிலங்களின் உரிமைமுற்றாகப் பறிக்கப்படும். இதுவரை அரசாங்கம் மின்துறையில் உருவாக்கியுள்ள கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும், தனியார் முதலாளிகள் பயன்படுத்தி கொள்ளை லாபம் பெறு வதற்குத்தான் இச்சட்டம் வழிவகுக்கும்.

அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்தச்சட்டம் 2020
மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையில்லாமல் கிடைப்பதற்கும் தாறுமாறாக விலையை உயர்த்தி விற்பதை தடுக்கும் வகையிலும் 1955ல் கொண்டுவரப்பட்டது அத்தியாவசிய பொருட்கள் சட்டம். இச்சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருகிறோம் என்ற பெயரில் விவசாய உற்பத்தி பொருட்களாக உள்ள அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு வகைகள், உருளைகிழங்கு, வெங்காயம் உட்பட உணவுப்பொருட்கள் இதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது ஆபத்தானது. இதனால் உணவு தானியங்களின் விலை பல மடங்குஉயரும். இந்த விலை உயர்வால், உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயி களுக்கு எந்த பலனும் ஏற்படாது. மாறாக பெரும் வியாபாரிகளும், இடைத்தரகர்களும், கார்ப்பரேட் கம்பெனிகள் தான் பலன் பெறுவார்கள், உணவுப் பொருட்கள் விலை பல மடங்கு உயரும்.

வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்பாட்டு மற்றும் உறுதி செய்து கொடுத்தல்) அவசரச் சட்டம் 2020
இச்சட்டத்தின் முழக்கமே ஒரே நாடு, ஒரே சந்தை என்று மத்திய அரசு தம்பட்டம் அடிக்கிறது. நாட்டில் எந்த மூலையில் உற்பத்தியாகும் வேளாண் விளை பொருட்களையும் கொள்முதல் செய்யலாம், இதற்காக எந்த அனுமதியும் தேவையில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களை நாட்டில் எந்த மாநிலத்தில் விலை கூடுதலாக கிடைக்கிறதோ அங்கு விற்கலாம் என சொல்வது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. ஏனென்றால் இந்தியாவில் 80 சதவீதத்திற்கு மேல் உள்ள சிறு,குறு நடுத்தர விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்க முடியாது. எனவே,  இச்சட்டமும் ஏற்கனவே சந்தையில் உள்ள பெறும் வணிக நிறுவனங்களுக்குத்தான் பயன்தரும், விவசாயிகளுக்கு பெரியளவில் எந்த பலனும் ஏற்படாது.

விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020
விவசாயிகள் சாகுபடி செய்யும் முன்னரே கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இச்சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தால் எதிர்காலத்தில் விவசாயி தான் விரும்பிய பயிரை சாகுபடி செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த பயிரை சாகுபடி செய்ய நினைக்கிறதோ அதைத்தான் விவசாயி சாகுபடி செய்ய முடியும். குறிப்பாக உலகில் எந்த உணவுப் பொருட்கள் தேவைப்படுகிறது (அல்லது) எந்தப்பொருட்களுக்கான தட்டுப்பாடுஅதிகம் உள்ளதோ அதைத்தான் நிறுவனங்கள்,சாகுபடி செய்ய விவசாயிகளை நிர்பந்திக்கும், உள்நாட்டில் மக்களுக்கான உணவு தானியங்களை உற்பத்தி செய்வதில் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் விவசாயிகளுக்கு கொள்முதலுக்கான விலை கொடுக்கவில்லை என்றால் சமரச குழுவின் மூலம் பேசி தீர்வு காணலாம் என இச்சட்டத்தில் உள்ளது. இது நடைமுறையில் சாத்தியமில்லை.எனவே விவசாயத்தை நாசமாக்கும் இந்த 4 அவசரச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டங்களை அகில இந்திய விவசாயிகள் சங்கம் அங்கம் வகிக்கக்கூடிய அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாடு தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஒரு கோடி கையெழுத்து இயக்கம்
மத்திய அரசாங்கத்தின் 4 அவசரச் சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் விவசாயிகள், பொதுமக்களை சந்தித்து ஒரு கோடிகையெழுத்துக்களை பெறுவதற்கான இயக்கம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்பட்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. இந்த இயக்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் பொதுதுவக்க நிகழ்ச்சியாக நடைபெற்றுள்ளது. இதில் முன்னால் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வணிகர் அமைப்புகளின் தலைவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமம் தோறும் கையெழுத்து இயக்கம் துவங்கியுள்ளது. இந்த இயக்கத்தை ஆகஸ்ட் இறுதி வரை வெற்றிகரமாக செயல்படுத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் களப்பணி ஆற்றி வருகிறது.

;