tamilnadu

img

காவிரிப் படுகையை நாசமாக்கும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையை திரும்பப்பெறுக...

சென்னை:
இந்திய வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி படுகையை நாசமாக்கும்வகையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவுஅறிவிக்கை 2020-ஐ மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.

இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பூமிப்பந்தில் உள்ள காற்று, நீர், கடல், காடு பல்லுயிர்ச்சூழல், மண்வளம், நிலத்தடி நீர், ஆகாயம், வளிமண்டலம் உள்ளிட்டவை இயற்கை மூலதனம் என்று சொல்லுவார்கள். எந்த ஒரு தொழில் தொடங்கினாலும் அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்காது. எனவேதான், ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு முன்பாக இந்த தொழிலின் சுற்றுச்சூழல் தாக்கம் எப்படி இருக்கும் என்று ஒரு மதிப்பீடு செய்யப்படுகிறது . அந்த மதிப்பீட்டின் அடிப்படையில்தான்  தொழிலைத் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை -2020 இன் படி தொழிற்சாலை தொடங்குவதற்கு முன்பாக சுற்றுச்சூழல் அனுமதியை பெற வேண்டும் என்று இருந்ததை தற்போது தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலே துவங்கிய பிறகு அனுமதிக்காக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மிகச் சமீபத்தில்தான் கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு விபத்து நடந்த பாலிமர் தொழிற்சாலை சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. இத்தகைய சூழலில்தான் தற்போதைய சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையானது அதை சட்டரீதியாக அனுமதிப்பது மட்டுமல்லாமல், இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்ந்தால் அபராதம் மட்டும் செலுத்தி விட்டால் போதும் என்கிறது அறிக்கை. இந்த புதிய அறிவிக்கை அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. 

ஒவ்வொரு நபருக்கும் சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கான கடமை இருப்பதாக அரசமைப்புச்சட்டம் வலியுறுத்துகிறது. நாம் சுற்றுச்சூழல் குறித்தகேள்வி கேட்க, தகவல் பெற, புகார் அளிக்கஉரிமை அளிக்கிறது. ஆனால் 2020 அறிவிக்கை யின்படி, பொதுக் கருத்துகேட்பிலும் அனைவரும்கலந்து கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. தகவல்களை கேட்டுப் பெற முடியாது நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாது. எந்த ஒரு சுற்றுச் சூழல் பாதிப்பையும் கேள்வி கேட்கும் உரிமையை அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்குகிறது. ஆனால் இந்த அறிவிக்கை அதை மறுக்கிறது. மேலும் சிலவகையான தொழிற்சாலைகளுக்குச்  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடே தேவையில்லை என்று 2020 வரைவு அறிக்கை கூறுகிறது2020 அறிவிக்கையின்படி  பி-2 பிரிவில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடும், பொதுமக்கள் கருத்து கேட்பும் தேவை இல்லை. இந்த பிரிவுக்கு கீழ் கிட்டத்தட்ட ஐம்பது தொழிற்சாலைகள் வருகின்றன. இவற்றில் மிக முக்கியமான ஒரே ஒரு உதாரணம் எண்ணெய் மற்றும் எரிவாயு சோதனை திட்டங்கள் பி-2  பிரிவில் வருகின்றன.

தமிழகத்தில் ஏற்கனவே ஓஎன்ஜிசி வேதாந்தா நிறுவனங்களுக்கு நிறைய எண்ணெய் ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எண்ணெய்க் கிணறு என்றால் மீத்தேன், ஷேல் எரிவாயு, இயற்கை எரிவாயு எல்லாவற்றுக்கும் ஹைட்ரோகார்பன் என்ற பெயரில் ஒரேஉரிமம் தான். அதை வைத்து நீங்கள் 34 கிலோ மீட்டர் ஆழத்துக்கு குழி வெட்டலாம், பக்கவாட்டில் போர் போடலாம் உண்மையிலேயே எண்ணெய்யோ எரிவாயுவோ எடுத்தால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு கட்டாயம் தேவை. இப்படி குழி தோண்டுவது ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தும். காவிரிப் படுகையில் 100 கிணறுகள் போட்டால் போதும் அங்கே இருக்கும் நீர் ஆதாரம் முழுக்க வெளியே வந்துவிடும். கடல் தண்ணீர் உள்ளே வரும், உப்பு கலக்கும், தண்ணீரை எடுத்து வெளியே விடும்போது ஏராளமான ரசாயனங்கள் செலுத்தப்பட்டு அவை வெளியே வரும் அதை எல்லாம் எப்படி சரிசெய்யப் போகிறார்கள். 

எனவே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை 2020-ஐ முழுக்க முழுக்க நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக இந்தியாவின் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நலனுக்காக, வளங்களை சூறையாடுவதற்கு கதவுகளை அகலத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடாகவே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பார்க்கிறது. மேலும் நாடே பெரும் தொற்றில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற போது அவசர அவசரமாக இப்போது இதை விவாதத்திற்கு விடுவதற்கான நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உடனடியாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை 2020-ஐ திரும்பப்பெற வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழுவின் சார்பாககேட்டுக்கொள்கிறோம். ஆகஸ்ட் 11 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை 202-0க்கான ஆலோசனை களுக்கான கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரிதமிழ்நாடு முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தின் சார்பாக மத்திய அரசிற்கு மின்-அஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.