பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி, ஹரியாணாவைச் சேர்ந்த பெண் ஒருவரை விரைவில் திருமணம் முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் வீரர் ஷோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதை தொடர்ந்து, தற்போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஷாமியா அர்ஜூ என்ற பெண்ணை திருமணம் முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது ஷாமியாவின் பெற்றோர் துபாயில் வசிக்கின்ற நிலையில், ஹசன் அலி குடும்பத்தினரும், ஷாமியா அர்ஜு குடும்பத்தினரும் துபாயில் சந்தித்துப் பேசிவிட்டதாகவும், ஆகஸ்ட் 20-ஆம் தேதி துபாயில் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலியிடம் நிருபர்கள் கேட்டபோது, " என்னுடைய திருமணம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது உண்மை தான். ஆனால், இப்போது எதையும் உறுதியாக கூறமாட்டேன். இரு குடும்பத்தினரும் இன்னும் முறைப்படி சந்திக்கவில்லை. விரைவில் உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்" எனத் தெரிவித்தார்.