பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2010-ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் முகமது ஆமிர், முகமது ஆசிப், சல்மான் பட் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகியது. இந்த விவகாரத்தைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையாக விசாரிக்காததால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அதிரடியாக விசாரணையில் களமிறங்கி முகமது ஆமிருக்கு 5 வருட தடையும், முகமது ஆசிப், சல்மான் பட் ஆகியோருக்கு 10 வருட தடையும் விதித்தது. இந்நிலையில், நடந்து முடிந்த இந்த விவகாரத்தைப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் முகமது ரஸாக் மீண்டும் கிளறிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,”லார்ட்ஸ் டெஸ்ட் சூதாட்ட பிரச்சனை குறித்து அப்போதைய கேப்டன் அப்ரிடி, ஆமீரிடம் தனியாக அழைத்து உண்மையைக் கூறுமாறு கேட்டுள்ளார். ஆமீர் இதற்குப் பதில் அளிக்காமல் மவுனமாக இருக்க ஆவேசமடைந்த அப்ரிடி, ஆமிரின் கன்னத்தில் அறைந்ததும் சூதாட்டம் நடந்தது உண்மை என ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சர்ச்சையைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே விசாரித்து ஓராண்டு தடை விதித்திருக்கலாம். ஆனால் ஐசிசி வரை கொண்டு சென்று நாட்டின் பெயரைக் கெடுத்துவிட்டது” எனக் கூறினார். இந்த விவகாரத்தில் முக்கியமான விசயம் என்னவென்றால் அன்றைய காலகட்டத்தில் அப்ரிடிக்கு உண்மை நிலவரம் தெரிந்தும் மவுனமாக இருந்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இது பற்றி துரிதமாக விசாரிக்காததால் தான் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினரின் தீவிர விசாரணையின் விளைவாக முகமது ஆமீர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். சூதாட்டம் தொடர்பான தகவல்கள் அப்ரிடிக்கு தெரிந்தும் அதைக் கண்டுகொள்ளாதது போல் இருந்தது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.