3 மணிநேரம் நடைபெறும் டி-20 தொடர் வருகையால் 5 நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் சுவாரஸ்யம் நாளுக்கு நாள் தேய்பிறை போல தேய்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கும் ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, வங்க தேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, விண்டீஸ் ஆகிய 9 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 71 டெஸ்ட் ஆட்ட ங்கள் (27 தொடர்) நடைபெறவுள்ளன. இந்த 71 ஆட்டங்கள் லீக் ஆட்டங்களாக கணக்கில் கொள்ளப்படும். லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளை பெறும் இரு அணிகள் 2021 ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்தும்.இதில் வெல்லும் அணி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும். ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்படும். ஒரு தொடரின் டெஸ்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். 2 டெஸ்டுகள் உள்ள தொடரில் ஒரு வெற்றிக்கு 60 புள்ளிகளும், 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் ஒரு வெற்றிக்கு 24 புள்ளிகளும் கிடைக்கும். டிரா ஆனால் 8 முதல் 20 புள்ளிகள் வரை கிடைக்கும். இந்த சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியின் லீக் ஆட்ட தொடர்கள் விண்டீஸ் தொடருடன் (ஆகஸ்ட் 22) துவங்குகிறது. இந்திய அணி உள்ளூரில் 3 தொடர்களும், வெளிநாடுகளில் 3 தொடர்களும் என 6 தொடர்களில் பங்கேற்கிறது.
இந்தியாவின் தொடர்கள் :
1. விண்டீஸ் - 2 டெஸ்டுகள்
(ஆகஸ்ட் - வெளிநாடு)
2. தென் ஆப்பிரிக்கா - 3 டெஸ்டுகள் (அக்டோபர் - உள்ளூர்)
3. வங்கதேசம் - 2 டெஸ்டுகள்
(நவம்பர் - உள்ளூர்)
4. நியூஸிலாந்து - 2 டெஸ்டுகள்
(பிப்ரவரி (2020) - வெளிநாடு)
5. ஆஸ்திரேலியா - 4 டெஸ்டுகள் (டிசம்பர் - வெளிநாடு)
6. இங்கிலாந்து - 5 டெஸ்டுகள் (ஜனவரி (2022) - உள்ளூர்)