சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிஎஸ்என்எல் நிர்வாகம் சிபிஎம் கண்டனம்
நாகர்கோவில், நவ.5- பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சம்பளமே இல்லாமல் வேலை பார்க்கும் ஊழியர்களை வேலையை விட்டு விரட்டும் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குமரி மாவட்டத்தில் தொலை தொடர்பு சேவையில் அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் முதல் இடம் வகிக்கிறது. 45 தொலைபேசி நிலையங்களும் , 52000 தரைவழி தொலைபேசி இணைப்புகளும் , 25000 பிராட்பேண்ட் இணைப்புகளும் , 275 டவர்களும் , 9 லட்சம் மொபைல் இணைப்புகளும் உள்ளன. நாட்டில் பல இடங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டாலும், குமரி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது. குமரி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிர்வகிக்க தற்போது 250 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு துணையாக 250 ஒப்பந்த ஊழியர்கள் இருக்கின்றனர். இவர்கள் துப்புரவு பணி முதல் செக்யூரிட்டி, எழுத்தர் பணி , தொலைபேசி நிலை யங்கள் பராமரிப்பு , டவர் பராமரிப்பு , கேபிள் பராம ரிப்பு என மிக முக்கிய பணி களில் ஒப்பந்தப் பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். மாதாமா தம் பல நிரந்தர ஊழியர்கள் பணி ஓய்வு பெற்று வரு கின்றனர். தற்போது பிஎஸ்என் எல்லில் விருப்ப ஓய்வு திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நிரந்தர ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்று வரும்போது பிஎஸ்என்எல் நிர்வாகத்தை நடத்தும் பொறுப்பு ஒப்பந்த தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. மிக குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வந்துள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சுமார் 10 மாத காலம் சம்பள பாக்கி ஏற்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்லில் டெல்லி தலைமையகம் போதுமான நிதி ஒதுக்காததால் சம்பளமே இல்லாமல் வேலை பார்க்க ஒப்பந்த ஊழியர்கள் நிர்ப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் . தற்போது பத்துமாத சம்பளம் கொடுக்காமல் ஒப்பந்த ஊழியர்களை பணி செய்ய வைத்துவிட்டு, பல ஒப்பந்த ஊழியர்களையும் வேலை நீக்கம் செய்து பிஎஸ்என்எல் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சம்பளமே இல்லாமல் பத்து மாதம் வேலைப் பார்த்த ஊழியர்களை வேலையை விட்டு விரட்டும் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். பட்டினி கிடக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பளம் கிடைக்க பிஎஸ்என்எல் தில்லி தலைமையகமும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் பிஎஸ்என்எல் சேவையை சீரழிக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குடிமக்களை மிரட்டும் கரூர் ஆட்சியர் : சிபிஎம் கண்டனம் கரூர், நவ.05- கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அராஜகப் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 04.11.2019 அன்று கரூர் மாவட்ட ஆட்சி தலைவரிடம் நவம்பர் 4 திங்களன்று குறைதீர் நாள் முகாமில், மாட்டு வண்டியில் உள்ளூர் தேவைக்கு மணல் அள்ள அனுமதி வேண்டி மனு அளிக்க சென்ற மாட்டு வண்டி தொழிற்சங்கத்தினரை அவ மரியாதையாக நடத்தியதோடு மேலும், அதிகாரத்தை பயன்படுத்தி காவல் துறையினரை வைத்து நான்கு தொழிலாளர்களையும் குண்டுக் கட்டாக தூக்கி காவல் துறை வாகனத்தில் ஏற்றிச் சென்று, பின்னர் மாலையில் விடுவித்துள்ளனர். ஆட்சியரின் இச்செயல் பொது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செம்பியநத்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூடப்படாமல் இருப்பதை மாவட்ட ஆட்சியரிடம் அலைபேசியில் பேசிய உரையாடலும் அதில் ஆட்சியர் பதிலளித்த விதமும், சாதாரண குடி மகன் ஆட்சியாளரிடம் எந்த புகாரும் தெரிவிக்க கூடாது என்ற தொனியில் உள்ளது. இது சமூக வலைத்தளங்க ளில் வைரலாகியுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அராஜகப் போக்கை அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டிக்க முன்வர வேண்டும், தமிழக அரசு இதன் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.