tamilnadu

தொழிலாளி கேட்பது என்ன?

ஐந்தாண்டு காலம் மோடி அரசால் வஞ்சிக்கப்பட்ட இந்திய தொழிலாளி வர்க்கம் கடந்த மார்ச் 5 அன்று தில்லியில் கூடியது. சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் சிறப்பு மாநாட்டில், கோரிக்கை சாசனத்தை நிறைவேற்றியது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சாசனத்தை அரசியல் கட்சிகளிடம் முன்வைத்திருக்கிறது இந்திய உழைக்கும் வர்க்கம்.


15வது இந்திய தொழிலாளர் மாநாடு பரிந்துரைகள் மற்றும் ரேப்டகாஸ் & பிரெட் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், 45, 46வது இந்தியத் தொழிலாளர் மாநாடுகளில் திரும்பவும் வலியுறுத்தப்பட்டது போல் தேசிய குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்!


நிரந்தரத் தன்மையுள்ள, தொடர்ச்சியான பணிகளில் காண்ட்ராக்ட் முறை ஒழித்திடு! அதுவரை நிரந்தரத் தொழிலாளர் செய்யும் அதே சம வேலையை செய்யும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு படி சமமான ஊதியம் மற்றும் பலன்களை வழங்கிடு!


ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவரும் அத்தியாவசிய பண்டங்களின் விலைகளை கட்டுப்படுத்த திட்டவட்டமான நடவடிக்கைகளை உடனே எடு! அத்தியாவசிய பண்டங்களின் யூக வாணிபத்தை தடுத்து நிறுத்து! பொது வினியோக முறையை விரிவாக்கி பலப்படுத்து! பொது வினியோக சேவையில் ஆதாரை கட்டாயப்படுத்தி திணிக்காதே!


பல்வேறு மத்திய அரசின் திட்டங்களில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர், தேசிய சுகாதார திட்டத்தில் பணிபுரியும் ஆஷா மற்றும் இதர ஊழியர், கிராமப்புற காவல்காரர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து குறைந்தபட்ச ஊதியம், பென்சன் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு பயன்களை வழங்கிடு!


பணிகளை வெளியிடங்களுக்கு மாற்றாதே! தொடர்ச்சியான, நிரந்தரமான பணியிடங்களில் காண்ட்ராக்ட் முறையை புகுத்தாதே!


பாதுகாப்பு துறை உற்பத்தி தனியார்மயம் கைவிடு! பாதுகாப்பு துறை உற்பத்தி நிறுவனங்களை மூடாதே! பாதுகாப்பு துறையில் சுயசார்பு அடைய, அரசு பொதுத்துறை பாதுகாப்பு தொழிலை விரிவாக்கு!


பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஊதிய உயர்வு அமலாக்கு! நிறுவனங்களின் நிலைமைகளை காரணம் காட்டாதே!


26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய பிரசவ விடுமுறையை அமலாக்கு! பெண் தொழிலாளர்க்கு பிரசவ நிதி, குழந்தைகள் காப்பக வசதிகளை ஏற்படுத்து! அரசு முன்மொழிந்தவாறு பிரசவ பயன் சட்டதிருத்தம் அமலாக்காத வேலை அளிப்போருக்கு ஊக்கதொகை வழங்காதே!


பணியிடங்களில் பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தை கறாராக அமலாக்கு! பெண்களின் அரசியல் பங்கேற்பை உயர்த்தும் வகையில், சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33சதவீதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கிடு!


இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும், உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ள படியும் பெண்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் கறாராக வழங்குவதை அமலாக்கு!


சுவாமிநாதன் குழு பரிந்துரைகள் படி விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானித்திடு! அரசு கொள்முதலை பலப்படுத்து!


விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்! சிறு மற்றும் நலிந்த விவசாயிகளுக்கு நிறுவன கடன்களை வழங்கிடு!


விவசாயத் தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள் குறித்து ஒருங்கிணைந்த சட்டம் இயற்று!


குறைந்தபட்ச பென்சன் ரூ.6000 ஆகவும், விலைவாசி புள்ளியுடன் இணைக்கப்பட்ட பென்சனாகவும் வழங்குவதை உறுதிப்படுத்து!


இந்திய அரசு அங்கீகரித்துள்ள ஐ.எல்.ஓ கோட்பாடு எண் 204க்கு முரணாக உள்ள ‘குறிப்பிட்ட கால வேலை‘ நடைமுறையை உடனடியாக ரத்துசெய்!


பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை, தனியார் மயத்தை கைவிடு! பொதுநலன் கருதி, முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களை புனரமைக்கும் திட்டங்களை உருவாக்கிடு!


ரயில்வே, பாதுகாப்புத்துறை, துறைமுகங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிலக்கரி சுரங்கங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடு! நிலக்கரி சுரங்கங்களை வர்த்தக ரீதியாக பயன்படுத்தும் முடிவை கைவிடு!


சங்கம் சேரும் உரிமை குறித்த ஐஎல்ஓ கோட்பாடு எண் 87, கூட்டுபேர உரிமை குறித்த ஐ.எல்.ஓ கோட்பாடு எண்.98, வீட்டுவேலை செய்யும் தொழிலாளர் குறித்த ஐஎல்ஓ கோட்பாடு எண்-189ஐ மத்திய அரசே ஏற்றிடு!


100 நாள் வேலைத் திட்டத்தை 300நாள் வேலைத் திட்டமாக உறுதிப்படுத்து! நகரப்புறங்களுக்கும் இத்திட்டத்தை விரிவாக்கு! மாநில அரசு நிர்ணயித்துள்ள விகிதத்திற்கு குறையாமல் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்திடு!


மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமையை தடுத்து நிறுத்த கறாரான நடவடிக்கை எடு! சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது இறந்துபோகும் துப்புரவு தொழிலாளர் குடும்பத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நட்ட ஈடு வழங்கிடு!


தலித்/பழங்குடி மக்களுக்கான பின்னடைவு காலி பணியிடங்களை பூர்த்தி செய்! தனியார் துறையிலும் தலித்/பழங்குடி மக்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கிடு!


மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா, 2017, மின்சார திருத்த மசோதா, 2018 வாபஸ் வாங்கு!


குடியிருப்புகளிலிருந்து ஆதிவாசிமக்களை வெளியேற்றாதே! ஆதிவாசி மக்களின் வன உரிமை சட்டம் கறாராக அமலாக்கு!


தலித்/பழங்குடி மக்கள் மீதான வன்முறை தடுப்பு சட்டம் கறாராக அமலாக்கு!


7வது ஊதியக்குழு பரிந்துரைகள் சம்பந்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்த்துவை!


புதிய பென்சன் திட்டத்தை வாபஸ் வாங்கு! பழைய பென்சன் திட்டத்தை திரும்ப அமலாக்கு!


தொழிலாளர்களை அதிக அளவில் ஈடுபடுத்தும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் கொள்கைகளை அமலாக்கி, வேலையின்மை வளர்வதை தடுத்து நிறுத்து! இந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்க, நிறுவனங்களுக்கு நிதி உதவி, ஊக்கத்தொகை, சலுகைகள் வழங்குவதுடன் இணைக்க வேண்டும்! அரசுத் துறையில் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்! வேலை நியமன தடை சட்டத்தை நீக்கு! அரசு பணியிடங்களின் எண்ணிக்கையில் ஆண்டுதோறும் 3 சதவீதம் ஒழிப்பதை கைவிடு!


வங்கிகளில் வராக்கடனை வசூலிக்க கறாரான நடவடிக்கை எடு! வேண்டுமென்றே கடன்களை திருப்பிச் செலுத்த மறுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடு! வராக்கடன்களின் சுமைகளை, சாமான்ய மக்கள் மீது அபராதம், சேவைக் கட்டண உயர்வு மூலம் சுமத்தாதே! பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையை கைவிடு! வங்கி கிளைகளை மூடாதே! பணவீக்க உயர்வை ஈடுகட்ட, வங்கி டெபாசிட்கள் மீது வட்டி விகிதம் உயர்த்திடுக!


ஒரே சட்டத்தொகுப்பில் 13 சட்டங்களை இணைப்பதன் மூலம் பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நல சலுகைகளை நீர்த்துப் போகச் செய்வதை கைவிடு! தற்போதுள்ள சட்டங்களை கறாராக அமலாக்கு! பேக்டரி ஆய்வாளர்கள், சுரங்க ஆய்வாளர்கள், பணியிடங்களை பூர்த்தி செய்! பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த ஐஎல்ஓ கோட்பாடு எண் 155, 164-ஐ ஏற்றிடுக! விபத்தினால் ஏற்படும் மனித உயிர் மற்றும் நிதி நஷ்டம் குறித்து முத்தரப்பு தணிக்கையை சட்டப்பூர்வமாக்கு!


பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்கள் மீது வன்முறை புரிவோர் கறாராக தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்து! இத்தகைய குற்றச்செயல்களை ‘அரிதிலும் அரிதானதாக‘ கருதி தூக்கு தண்டனை வழங்குவது மூலம் பெண்களின் பாதுகாப்பை சகலவிதத்திலும் உறுதிப்படுத்து.


மக்கள் ஒற்றுமை, சகோதரத்துவ உணர்வு, மத, மொழி, வட்டார, பிரிவு ரீதியான கலாச்சார வேற்றுமைகளை அங்கீகரிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 51A-ஐ திறம்பட அமலாக்குவதை உறுதிப்படுத்து!


அனைத்து குழந்தைகளுக்கும் தொழில் நுட்பக் கல்வியுடன் இலவச கல்வி வழங்கிடு! கல்விக்காக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10சதவீதம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்!


அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கிடு! பொது சுகாதார உட்கட்டமைப்புகளை, குறிப்பாக, கிராமப்புற, பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் பலப்படுத்து! மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5சதவீதம் சுகாதாரத்திற்காக அரசே நிதி ஒதுக்கீடு செய்!


பெண்கள் அதிகமாக பணிபுரியும் வீடுசார் தொழில்களில் உள்ளோரின் நலன்களை பாதுகாத்திட, ஐஎல்ஓ கோட்பாடு எண்-177ஐ அரசே ஏற்றிடு!


அனைத்து ஊடக அமைப்புகளை சார்ந்த பத்திரிகையாளர் மற்றும் தொழிலாளர்க்கான பத்திரிகையாளர் சட்டத்தை திருத்தி கண்ணியமான ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்து! ஊடக அமைப்புகளில் அச்சு, எலக்ட்ரானிக் மற்றும் டிஜிட்டல் மீடியாவில் பணிபுரியும் பத்திரிகையளர்களுக்கான புதிய ஊதியக்குழு அமைத்து ஊதியம் உயர்த்திடுக!


சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்து! மாநில அரசுகள் அதற்கேற்ப விதிகளை உருவாக்க வேண்டும்!


அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கிடு!


நகரங்களில் அனைத்து மட்டங்களிலும், திடக்கழிவு மறுசுழற்சிக்கான விதிகளை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்!


இருதரப்பு மற்றும் முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை பலப்படுத்து; ஒவ்வொரு நிறுவனத்திலும் நிர்வாகம் தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பதை சட்டப்பூர்வமாக்கிடு! தொழிற்சங்கங்க ளுடன் கலந்து விவாதித்து ஒருமித்த கருத்து எட்டாமல் தொழிலாளர் குறித்த எந்த முடிவும் மேற்கொள்ளாதே! தொழிலாளர் பிரதிநிதிகளுடன் முறையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடைபெறுவதை உறுதிப்படுத்து!


கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்களை வெட்டிடு!


அரசியல் சட்டத்தை திருத்தி வேலை உரிமையை அடிப்படை உரிமையாக்கு!


நலிவுற்ற சணல் ஆலைகள், தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை கேள்விக்குறியாகியுள்ளது. இவர்கள் மிகவும் துயரத்தில் உள்ளனர்; சத்தான உணவு இன்றி உள்ளனர்; ஆலை மூடலால் பலர் இறந்து விடுகின்றனர். எனவே இவற்றை புதுப்பிக்கவும், மூடிய ஆலைகளை திறக்கவும் நடவடிக்கை எடு!


தொழிலாளர் விரோத, முதலாளி ஆதரவு தொழிலாளர் சட்ட திருத்தங் களை மேற்கொள்ளாதே! தற்போ துள்ள தொழிலாளர் சட்டங்களை கறாராக அமலாக்கு!


சாதி மற்றும் மத மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ளும் மணமக்களை பாதுகாக்க சட்டமியற்று! ஆணவக் கொலைகள் தூண்டுவோர், நிகழ்த்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்து!


அனைத்து நல வாரியங்களிலும் தொழிலாளர்களின் செயல்பூர்வமான பங்களிப்பை உறுதிப்படுத்து! கட்டிட, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் வசூலிக்கப்பட்ட நல வரியை, அவர்களது நலன்களுக்காக மட்டும் செலவிடு! நலவாரியங்களில் தொழிலாளர் பிரதிநிதிகள் உரிய முறையில் இடம் பெற வேண்டும்! நல வாரியங்களில் செயல்பாட்டை பலப்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களை பதிவு செய்வது, நலத்திட்ட பணப்பயன்களை வழங்குவது தங்கு தடையின்றி நடத்திடு!



;