tamilnadu

img

காஷ்மீர் முதல் குமரி வரை மோடிக்கு எதிராக அலை வீசுகிறது

சிதம்பரம், ஏப்.1-


மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்குகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பில் பரங்கிப்பேட்டையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமை வகித்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று பானை சின்னத்திற்கு வாக்குகள் கோரி உரையாற்றுகையில், ‘‘இந்தத் தேர்தல் மிக முக்கியமான தாகும். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய பாஜகவும் மாநில அதிமுகவும் எதிர்க்கட்சிகளை முடக்கப் பார்க்கிறது’’ என்றார். எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்தால் வரும் 3 ஆம் தேதி கோவையில் ஸ்டாலின் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தக் கூடிய சூழல் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.


முதலமைச்சர் எடப்பாடி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களின் மீது ஊழல் பட்டியல் தயார் செய்து ஆளுநரிடம் கொடுத்த மருத்துவர் ராமதாஸ், இந்த தேர்தலில் பேரம் முடிந்து சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளதால், மாநில முதல்வர்களில் மிகச் சிறந்தவர் எடப்பாடி தான் என்றும் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது என்றும் கூறுகிறார். அவரது நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும். துரோகி என்று கூறியவரைக்கூட தியாகி என்கிறார். தூத்துக்குடியில் 15 பேரை சுட்டுக் கொன்றவரும் தியாகியாயிருக்கிறார் என்றும் கே. பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடிக்கு எதிராக அலை வீசுகிறது என்றும் கூறினார்.இந்த தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் பன்முகத்தன்மை கொண்ட தலைவர். ஆகவே ஏழை, எளிய மக்களின் கோரிக்கை மக்களவையில் ஒலிக்க திருமாவளவனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், பரங்கிப்பேட்டை நகரச் செயலாளர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் செல்லப்பன், திமுக ஒன்றியச் செயலாளர் முத்து பெருமாள், காங்கிரஸ் நகரச் செயலாளர் பக்கிரி உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

;