tamilnadu

img

கடலூரில் பயிர்ச் சேதம்.... கணக்கெடுக்க 1500 பேர் கொண்ட குழு அமைப்பு....

கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பயிர்ச்சேதங்களை கணக்கெடுக்க 1500 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் கடலூர் மாவட்டத்தை வியாழக்கிழமை அதிகாலையில் கடந்தது. அப்போது வீசிய காற்றினால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததோடு, மழை நீர் தேங்கி நிற்பதால் வேளாண் பயிர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி  செய்தியாளர்களிடம் கூறியது:-

கடலூர் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளன.தற்போது தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள், வேளாண்மைத்துறையினர் ஈடுப் பட்டு வருகின்றனர். தண்ணீர் வடிய வைக்க முடியாத பகுதியைச் சேர்ந்த சுமார் 900 ஏக்கர் பாதிக்கப்படலாம் என்று முதற் கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் சுமார் 800 ஏக்கரில் நாற்று நடப்பட்ட நிலையில் உள்ள நெல், மணிலா, உளுந்து  போன்ற பயிர்களையும் தண்ணீர் மூழ்கடித்துள்ளது. இவற்றின் பாதிப்பினை தெரிந்துக் கொள்ள சுமார் 1 வாரங்கள் வரையில் ஆகும். எனவே, முழுமையான பாதிப்புகளை தெரிந்து கொள்வதற்காக வேளாண்மை, தோட்டக்கலைத்துறையைச் சேர்ந்த 300 பேர், வருவாய்த்துறையினர் 1200 பேர் களத்தில் உள்ளனர். இவர்கள், தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களின் விபரம், சேதம் குறித்து கணக்கெடுப்பார்கள்.விவசாயிகள் உடனடியாக தங்களது பயிர்களை காப்பீடு செய்துக் கொள்ள வேண்டும். இதனால், பயிர்கள் பாதிக்கப்பட்டால் பயிர்க்காப்பீட்டுத்திட்டத்திலும், தேசிய நிவாரண நிதியிலிருந்தும்  நிவாரணம் பெற முடியும். இது விவசாயிகளை இழப்பிலிருந்து காக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்டத்தில், 150 ஏக்கரில் வாழை மரங்கள் காற்றினால் சரிந்து விழுந்து சேதமடைந்ததாக வேளாண்மைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மரவள்ளி 23 ஏக்கரிலும், பன்னீர் கரும்பு  470 ஏக்கரிலும் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் தெரிவிக்கப் பட்டது.

;