tamilnadu

கார்பெண்டர் கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கடலூர், அக்.20- கோயில் விழாவில் கார்பெண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 7 பேருக்கு 13 மாதம் சிறை தண்டனையும் விதித்து கடலூர் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில்,“ கடலூர் மாவட்டம்  முது நகருக்கு அருகிலுள்ள பச்சையாங்கு ப்பத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் கமலவேல் (45), கார்பெண்டர். கடந்த 2012 ஆம் ஆண்டு அப்பகுதியிலுள்ள கோயிலில் திருவிழா நடைபெற்ற போது பாட்டுக்கு ஆடியது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 11-6-2012 அன்று கொய்யாத்தோப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற கமலவேலை ஒரு குழுவினர் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர்” என்றனர். இந்த வழக்கின் விசாரணை கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் நீதிபதி செந்தில்குமார் சனிக்கிழமை தீர்ப்பு கூறினார். அதில், கமலவேலை கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன்கள் பூபதி (55), சேகர் (51), சேகரின் மகன் மணிகண்டன் (27) ஆகிய 3  பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.3500 அபராதமும் விதித்தார். கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக அதேப்பகுதி யைச் சேர்ந்த சா.நாகராஜ் (61), அவரது மகன்கள் ஆனந்த் (35), சிவக்குமார் (26), ரா.பாலு (52), சாமிநாதன் மகன் விஸ்வநாதன் (34), முருகன் மகன் புவனகிரிஆனந்த் (28), அ.முருகானந்தம் (50) ஆகியோருக்கு தலா  13 மாதம் சிறை  தண்டனையும் தலா ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்புக்கூறினார்.