tamilnadu

img

வீதிகளில் அலை மோதிய கூட்டம் காய்கறி விலை கிடு கிடு உயர்வு

விருதுநகர், மார்ச்.24- கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக தமிழக அரசு செவ்வாயன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு  அமல்படுத்தியது. இதையடுத்து, கடை வீதிகளில் பொது மக்கள் கூட்டம் அதி கரித்தது. இதனால்  வியாபாரிகள் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலையை தங்களது இஷ்டத்திற்கு உயர்த்தினர். கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.30க்கும், 20 ரூபாய்க்கு விற்ற புடலங்காய் 60 க்கும், ரூ.30 முதல் 40க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.80க்கும், ரூ.60க்கு விற்பனையான பீன்ஸ் ரூ.160க்கும், ரூ.20க்கே விற்கப்பட்ட மாங்காய் கிலோ ரூ.100க்கும், ரூ.20க்கு விற்கப்பட்ட சவ் சவ் காய் ரூ.60க்கும் விற்கப்பட்டன. 

போக்குவரத்து நெருக்கடி : சிறிய அளவிலான விருதுநகர் மெயின் பஜாரில் போக்குவரத்து போலீசார் கடந்த சில மாதங்களாக பேருந்துகளை ஒரு வழிப்பாதையில் அனுமதித்துள்ளனர். இதனால், அங்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திங்களன்றும், செவ்வாயன்றும் பொது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதும், போக்குவரத்து போலீசார், பஜார் வழியே பேருந்துகளை இயக்க அனுமதித்தனர். இதனால், மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. மேலும், மெயின் பஜாரை ஒட்டியுள்ள பெ.சி.சி தெரு, சந்திக்கூடத் தெரு, பழக்கடை சந்து, சுலோசன் தெரு, தெப்பம் வடக்கு, மேற்கு, தெற்கு அனைத்து பகுதிகளிலும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டன. இதனால், மாற்றுப் பாதையில் கூட வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

தனியார் கொரியர் சேவை ரத்து

144 தடை உத்தரவையடுத்து, விருதுநகரில் உள்ள தனியார் கொரியர் சேவை நிறுவனங்கள் அனைத்தும், மார்ச்.,24 இல் கடிதங்கள் மற்றும் பார்சல் சேவைகளை நிறுத்தியது. இதனால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அத்தியாவசியப் பணிகளாக தபால் சேவைகள்  உள்ளதால் அதற்கு 144 தடை உத்தரவில் இருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.