உளுந்தூர்பேட்டை, ஆக. 31- கொரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் மூடிக்கிடக்கும் நிலையில் அரசின் தளர்வுகளால் பல்வேறு தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கைபேசி தேவையான நேரத்தில் கிடைக்காமல் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மேட்டுநன்னாவரத்தை சேர்ந்தவர் ஏ.ஆறுமுகம். இவரது மனைவி சுமதி. இவர்களது மகள்கள் நித்யஸ்ரீ, சுபா, காவியா. திருச்சியில் உள்ள தனி யார் கல்லூரியில் மருத்து வம் தொடர்பான படிப்பில் நித்யஸ்ரீ படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆன்லைன் வகுப்பு தொடங்கின. நித்யஸ்ரீ தனக்கு கைப்பேசி வேண்டும் என தந்தையிடம் கேட்டுள்ளார். அதேபோல் 12ஆம் வகுப்பு பயிலும் சுபாவும், 11ஆம் வகுப்பு பயிலும் காவியா வும் தங்களுக்கும் ஆன்லைன் வகுப்பு நடைபெறுவதால் கைபேசி வேண்டுமென கேட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் மூன்று கைபேசி வாங்கித்தர வசதி இல்லாத காரணத்தினால் ஒரு கைபேசியை வாங்கி மூவரிடமும் கொடுத்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தந்தை கூறியுள்ளார். ஆனால் பல நேரங்களில் ஆன்லைன் வகுப்புகள் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், மாணவிகள் மூவருக்கும் இடையே சிறுசிறு சச்சரவுகள் இருந்துள்ளன. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில் ஆறுமுகம் மாணவிகளை “சண்டை போடாமல் இருக்க மாட்டீங்களா” என கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் படிப்பில் சுட்டியான சுபஸ்ரீ மன தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை நித்யஸ்ரீ உயிரிழந்தார். ஆன்லைன் வகுப்பு என அனைத்து மாணவர்களையும் நிர்ப்பந்திப்பதும், கட்டாயம் வகுப்பில் பங்கேற்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதும் கிராமப்புற மாணவர்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. மேலும் கிராமப்புறங்க ளில் சிக்னல் மற்றும் டவர் கிடைக்காத சூழலிலும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத சூழல் ஏற்படுகிறது. எனவே ஆன்லைன் வகுப்பு என்று மாணவர்களின் உயிரை பறிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.