உலகின் முதல் மருத்துவர் பெண்தான். வீட்டிலுள்ளோருக்கு உடல்நிலை சரியில்லையென்றால் முதல் பரிசோதனைகூடம் அம்மாதான். அம்மாவின் கைகள்தான் ஆதி உலகின் முதல் ஸ்டெதெஸ்கோப். அவளின் அற்புதம் நிறைந்த கைவிரல்கள்தான் தெர்மாமீட்டர். இருந்தாலும், பிள்ளைகளுக்கு உடல் நெருப்பாய் கொதிக்கிறது என்றவுடன் தாயும் பரிதவித்துத்தான் போய்விடுகிறாள். இது என்ன காய்ச்சலாக இருக்குமோ, எப்போது சரியாகுமோ என்று பதறுகிறாள். உடனே பிள்ளையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடத் துவங்குகிறாள். அதனால் தான் அம்மாவின் அன்புக் கரங்களில் ஆறாவது விரலாக கூடுதலாக தெர்மாமீட்டர் ஒன்று தேவையாயிருக்கிறது.
16ம் நூற்றாண்டில் கலிலியோ கலிலீ என்பவரால் பிள்ளையர்சுளி போடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட தெர்மாமீட்டர் கண்டுபிடிப்பானது முதலில் தண்ணீரால் நிரப்பப்பட்டு அடுத்தகட்டமாக ஆல்கஹால், பாதரசம் என்று பின்வந்த அறிஞர்களால் மேம்படுத்தப்பட்டது. இறுதியாக இன்று பேட்டரியில் இயங்குகிற டிஜிட்டல் தெர்மோமீட்டர், அகச்சிவப்பு கதிர் தெர்மாமீட்டர் என்பதுவரை வளர்ந்து நிற்கிறது. 1714ல் முதன்முதலாக பாதரசத்தை தெர்மாமீட்டரில் பயன்படுத்திக் காட்டியவர் ஜெர்மனைச் சேர்ந்த டேனியல் ஃபாரன்கீட். ஆனால் தற்போது நியூயார்கில் நடந்த பாதரசம் மீதான மினமாட்டா மாநாட்டின் ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்ட பின்பு இன்னும் பத்து வருடங்களுக்குள் பாதரச பயன்பாட்டை குறைப்பதுடன், பாதரசம் உள்ள தெர்மாமீட்டரும் தடைசெய்யப்பட்டுவிடும். ஆனாலும் அவர் கண்டறிந்த ஃபாரன்கீட் அளவீடுகளீடுகளின் வழியே அவரை நாம் என்றும் மறக்கப்போவதில்லை. இன்று மருத்துவத்துறையில் பயன்படத்தக்க வகையில் தெர்மாமீட்டரை வடிவமைத்த சர் தாமஸ் ஆல்பட் அவர்களையும் இந்த கணத்தில் நாம் நன்றியுணர்வோடு நினைத்துப் பார்ப்போம்.
டிஜிட்டல் தெர்மாமீட்டர்
தண்ணீரிலிருந்து ஆரம்பித்து ஆல்கஹால், பாதரசம் என்று படிப்படியாக மண்வெட்டி பிடிக்கிற கைகளும் எளிதில் பயன்படுத்துகிற வகையில் விஞ்ஞானம் வழியே கிடைத்துதான், டிஜிட்டல் தெர்மாமீட்டர். அது நம் உடலின் வெப்பநிலையை உலோக கூர்முனையின் வழியே வாங்கிக்கொண்டு மைக்ரோசிப் மூலமாக அதை மின்சாரமாக மாற்றி நம் கண்களுக்கு வெப்பநிலையாக திரையில் காட்டுகிறது. இன்று சர்வசாதாரணமாக அனைத்து மருந்து கடைகளிலும் தெர்மாமீட்டர்கள் ரூபாய் 160லிருந்து கிடைக்கின்றன. தெர்மாமீட்டரை வாங்கும்போதே கடையில் வைத்து பரிசோதித்துப் பார்த்து வாங்கிக் கொள்வது நல்லது. மேலும் தெர்மாமீட்டர் அட்டைப் பெட்டியினுள்ளும் அதனைப் பயன்படுத்துகிற முறையைப் பற்றி உங்களுக்கு எளிதாக படம் போட்டு காட்டியிருப்பார்கள். கூடவே தெர்மாமீட்டரை சுத்தம் செய்வதற்குத் தேவையான ஸ்பிரிட் பாட்டிலையும் வாங்கி குழந்தைகளின் கண்ணில் படாதவாறு பத்திரப்படுத்திக் கொள்வதும் அவசியம்.
தெர்மாமீட்டர் வழியே பரிசோதனை
பிள்ளைகள் காலையில் எழுந்து, அம்மா காய்ச்சலடிக்குதுமா! என்று சொன்னவுடன், என்னடா! வீட்டுப்பாடம் எழுதலயா? என்று கேட்பதை விட்டுவிட்டு வீட்டிலிருக்கிற தெர்மாமீட்டரை எடுத்து ஒருமுறை பரிசோதித்துப் பாருங்கள். ஏனென்றால் தெர்மாமீட்டரை வைத்து நம் பிள்ளையின் வெப்பநிலை எவ்வளவு என்று தெரிந்து கொண்டால்தான் உண்மையாகவே அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா, அவர்களை பள்ளிக்கு விடுமுறை எடுக்கச் சொல்லி ஓய்வெடுக்கச் செய்யலாமா, உறங்க வைத்து ஈரத்துணி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாமா, மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டுமா என்பதை யோசித்து முடிவெடுக்க முடியும். முதலில் தெர்மாமீட்டரை எடுத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆன் பட்டனை அழுத்தி சரியாக வேலை செய்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். தெர்மாமீட்டரின் திரையில் எண்கள் வந்தவுடன் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையெல்லாம் திரையில் ஓடி இறுதியில் பூஜ்ஜியத்தில் வந்து நிற்கும். இந்த சமயத்தில் ஸ்பிரிட் வைத்து தெர்மாமீட்டரின் முனையில் துடைத்துவிட்டு சிறிது குளிர்ந்த தண்ணீரால் கழுவி அப்படியே கொஞ்ச நேரம் உலரவிட வேண்டும். ஏனென்றால் சுடு தண்ணியினால் உலோக முனையை துடைத்தால் தெர்மாமீட்டரினுடைய வெப்பநிலையை அளவிடும் திறன் பாதிக்கப்படலாம் என்பதால்தான் இந்த குளிர்ந்த தண்ணீர்.
குழந்தைகளைத் தயார் செய்தல்
தெர்மாமீட்டர் மூலம் பரிசோதிப்பதற்கு முன்பு நம் குழந்தைகளை முதலில் தயார் செய்ய வேண்டும். தெர்மாமீட்டர்ரை எடுத்து வைத்தோமா, திரையில் தெரிகிற ரிப்போர்ட்டை வைத்து காய்ச்சலா இல்லையா என்று பார்த்தோமா என்றில்லாமல் குழந்தையை எதற்கு தேவையில்லாமல் தயார்படுத்த வேண்டும் என்றுதானே யோசிக்கிறீர்கள்? உதாரணத்திற்கு, தெர்மாமீட்டரை நாக்கின் கீழே வைத்து பரிசோதிக்கப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகள், பரிசோதிப்பதற்கு முன்பாக ஏதேனும் சூடாக காப்பியோ, குளிராக ஐஸ்கிரீமோ சாப்பிட்டிருந்தால் தெர்மாமீட்டரை வைத்து வாய் பகுதியில் பரிசோதிக்கையில் வெப்பநிலை குளறுபடியால் சரியான ரிப்போர்ட் கிடைக்காமல் போகலாம். மேலும் அவர்கள் விளையாடிவிட்டோ, உடற்பயிற்சி செய்துவிட்டோ வந்திருக்கும் சமயம் பார்த்து பரிசோதித்தாலும் உடல் வெப்பநிலையை அதனால் சரியாக காண்பிக்க இயலாமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால் தான் காய்ச்சலை பரிசோதிக்கும் 15 நிமிடத்திற்கு முன்பாக எதையும் சூடாகவோ, குளிராகவோ அவர்களுக்கு குடிக்கக் கொடுக்க வேண்டாம். அவர்களை கொஞ்ச நேரம் அமைதியாக உட்காரச் சொல்லி 15 நிமிடம் கழித்து காய்ச்சலை பரிசோதித்துப் பார்க்கலாம். ஒருவேளை நம் பிள்ளைக்கு அக்குள் பகுதிக்குள் தெர்மாமீட்டரை வைத்து பரிசோதிக்கிறோம் என்றாலும் குழந்தைகளின் அக்குள் பகுதியில் வியர்வை ஏதும் இல்லாதவாறு துணியை வைத்து துடைத்து எடுத்துவிட்டு பரிசோதிக்க வேண்டும். ஏனென்றால் தெர்மாமீட்டர் பரிசோதனையை உடலின் ஈரப்பதம்கூட மாற்றிவிட வாய்ப்பிருக்கிறது.
தெர்மாமீட்டர் மூலம் அளவிடுதல்..
சரி, டிஜிட்டல் தெர்மாமீட்டரை வாங்கிவிட்டோம். அதை எந்த இடத்தில் வைத்து பரிசோதிப்பது என்று குழம்ப வேண்டாம். உடலின் உள்மைய வெப்பநிலையை நாக்கிற்கு கீழ், அக்குள் பகுதி, மலத்துவாரம், காது, முன்நெத்தி, தலையின் பக்கவாட்டுப் பகுதி என்று பல இடங்களில் வெவ்வேறு விதமான தெர்மாமீட்டரை வைத்து பரிசோதித்துப் பார்க்கிறார்கள். ஆனால் நம் குழந்தைகளை வீட்டில் வைத்துப் பரிசோதிப்பதற்கு வாய்ப் பகுதி அல்லது அக்குள் பகுதியில் டிஜிட்டல் தெர்மாமீட்டர் வைத்து பயன்படுத்துவதே போதுமானது. குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்டு கடைப்படிப்பவராக இருந்தால் மட்டும் வாய்ப்பகுதியில் வைத்து பரிசோதிக்கலாம். ஒருவேளை பச்சைக் குழந்தையாகவோ, குழந்தைகள் நாம் சொல்வதை கேட்காமல் அடம்பிடிப்பவர்களாகவோ அல்லது வாய்ப்பகுதியில் வைத்துப் பரிசோதிப்பதில் தயக்கம் கொண்டவராக பெற்றோர்களே இருந்தாலோ அக்குள் பகுதியையே தேர்வு செய்து கொள்ளலாம். குழந்தைகளிடம் பரிசோதிக்கும் முன்பே, குட்டிமா! இந்த குச்சிய நாக்குக்கு கீழே வைக்கப்போறேன். கொஞ்ச நேரம் அமைதியாக வாய்க்குள்ள வச்சுக்கிடனும். இதை கடிச்சிடக் கூடாது, சரியா? என்று சொல்லிவிட்டு ஆரம்பிக்க வேண்டும். குழந்தைகளை ‘ஆ’ சொல்லச் சொல்லி தெர்மாமீட்டரின் கூர்முனையை நாக்கின் அடியில் கத்தி போன்ற நடு சவ்வுக்கு வலது புறமோ அல்லது இடதுபுறமோ ஏதாவது ஒரு பக்கமாக அடிநாக்கு மற்றும் ஜவ்வுக்கு இடையே ஒட்டி இருக்குமாறு வைக்க வேண்டும். தெர்மாமீட்டர் முனையை பற்களின் ஓரமாகவோ, உதடு மற்றும் பற்களுக்கு இடையிலோ, நாக்கின் மேலேயோ, தெர்மாமீட்டரை உள்நாக்குவரை சென்று இடிக்குமாறோ வைத்துவிடக் கூடாது. அது குழந்தைகளுக்கு அசௌகரியமாகவும் இருக்கும், அதனால் வெப்பநிலையையும் சரியாக கணக்கிடவும் முடியாது. பின்பு குழந்தைகளின் வாய்ப்பகுதியை அப்படியே மூடி வைத்துக் கொள்ள செய்ய வேண்டும். ஏனென்றால், குழந்தைகள் வாய்ப்பகுதியைத் திறந்திருந்தால் வெளியிருந்து வருகிற குளிர், வெப்ப காற்றால் ரிப்போர்ட் மாறிவிடும் அல்லவா, அதற்காகத்தான். தொடர்ச்சி அடுத்த வாரம்
-டாக்டர் இடங்கர் பாவலன்
idangarpavalan@gmail.com