சத்திய சோதனையின் முதல் பாகத்தில் "உயர்நிலைப்பள்ளியில்" என்னும் தலைப்பின்கீழ் மகாத்மா காந்தி, சுமார் 94 ஆண்டுகளுக்கு முன்பு தான் பயின்ற காலத்தின் கல்வி அனுபவம் குறித்து எழுதியுள்ளார். இதை எழுதுவதற்கு சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஆரம்ப கல்வி படித்துள்ளார். ஆக 139 ஆண்டுகளுக்கு முந்தைய தனது மாணவப்பருவ கல்வி அனுபவங்களை அவரது சுயசரிதையான "சத்திய சோதனையில்" எதார்த்தமாக அழகாக அவர் பதிவு செய்துள்ளார்.காந்தியின் பள்ளிப்பருவம் குறித்து வாசிக்கும்போது நாம் நம்முடைய பள்ளிப்பருவத்து நாட்களுக்கு நம்மையறியாமல் சென்று விடுகிறோம். ஒரு மாணவனுக்கு இருக்க வேண்டிய சில அடிப்படை குணாம்சங்களை காந்தி தனது சுயசரிதையில் அருமையாக குறிப்பிடுகிறார்.
முதலாவதாக ஆரம்பக்கல்வித் தடைபட முக்கிய காரணமாக இருப்பது எது? என துவக்கத்திலேயே அவர் வேதனையுடன் குறிப்பிடும் ஒரு முக்கிய விசயம் "குழந்தைத் திருமணங்கள்" தான். "எனக்கு மணமானபோது உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன் என்று முன்பே கூறியிருக்கிறேன். நாங்கள் அண்ணன் தம்பிமார் மூன்று பேரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தோம். மூத்த அண்ணன் மிகவும் மேல் வகுப்பில் படித்தார். என்னோடு விவாகமான அண்ணனோ எனக்கு ஒரு வகுப்பு மேலே படித்தார். விவாகத்தால் எங்கள் இருவருக்கும் ஓர் ஆண்டு வீணாயிற்று. இதன் பலன்தான் அண்ணனுக்கு பின்னும் மோசமானதாகவே இருந்தது. அவர் படிப்பையே முற்றும் விட்டு விட்டார். அவரைப்போல எத்தனை இளைஞர்கள் இதே கதிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை கடவுளே அறிவார். இன்றைய நமது இந்து சமூகத்தில் மட்டுமே படிப்பும் கல்யாணமும் ஏக காலத்தில் நடைபெறுகின்றன" என்று அவரின் சொந்த அனுபவத்தையே இதற்கு சாட்சியமாக பதிவு செய்கிறார்.
ஆனால் இன்றும் நம் நாட்டில் குழந்தைத் திருமணங்கள் ஒழிந்தபாடில்லை. குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் இருந்தபோதும், மக்களுக்கு போதிய கல்வியறிவும் விழிப்புணர்வும் இல்லாத காரணத்தால் காந்தியின் காலம் தாண்டியும் அது தொடர்கிறது.
இரண்டாவதாக அவர் குறிப்பிடுவது மாணவர்களின் நன்னடத்தையைப் பற்றியது, "எனது நன்னடத்தையை நான் சர்வ ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வந்தேன். இதில் ஒரு சிறிது குறை ஏற்பட்டாலும் கண்ணீர் விட்டு அழுது விடுவேன். கண்டிக்கப்பட்டாலோ, கண்டிக்கப்பட வேண்டியவன் என்று உபாத்தியாயர் (ஆசிரியர்) கருதினாலோ, என்னால் சகிக்க முடியாது" என்கிறார்.
மாணவர்கள் அடிப்படையில் நற்குணங்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கவேண்டிய நிலையில் நவீன உலகமயம், தாராளமயம் தனியார்மயத்தின் பரிசுகளாக உலகிற்கு கிடைத்துள்ள பல நவீன சாதனங்கள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் இவற்றில் இருந்து "நல்லதை போதித்து அல்லதில் இருந்து" மாணவச்சமுதாயத்தை பாதுகாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
மூன்றாவதாக அவர் தேகப்பயிற்சியை அதாவது விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை ஒவ்வொரு மாணவரும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்கிறார், "நான் தேகாப்பியாசம் (உடற்பயிற்சி) செய்ததோ, கிரிக்கெட், அல்லது கால்பந்து விளையாடியதோ இல்லை. ஒன்றிலும் சேராமல் நான் ஒதுங்கி இருந்து விட்டதற்கு எனக்கிருந்த கூச்சம் ஒரு காரணம். அப்படி இருந்து விட்டது தவறு என்பதை இப்பொழுது அறிகிறேன். படிப்புக்கும் தேகப்பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை என்ற தவறான கருத்தும் அப்பொழுது எனக்கு இருந்தது. ஆனால் இன்று பாடத்திட்டத்தில் மனப்பயிற்சிக்கு எவ்வளவு இடம் அளிக்கப்படுகிறதோ, அவ்வளவு உடற்பயிற்சிக்கும் அளிக்கபட வேண்டும் என்பதை அறிவேன்" என்று அனுபவ ரீதியாக அவர் கூறுகிறார்.
இன்றைய நிலையில் தாய்ப்பால் மறக்காத குழந்தையைக்கூட சர்வதேசக் கல்விமுறை பாடத்திட்டத்தில் சேர்த்து, பெற்றோர்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை செலவு செய்யும் "மனநிலை" திட்டமிட்டு தனியார் கல்விக் கொள்ளையர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இயந்திரகதியான வருமானத்தை நோக்கிய பொருளாதார சிந்தனையிலான கல்விமுறை என்ற சூழ்நிலையில் குழந்தைகளுக்கே இதுதான் நிலை என்றால், மேல்படிப்பு மாணவர்களின் சுதந்திரமான விளையாட்டு, உடற்பயிற்சி என்பது கல்விச்சாலையிலும், பொதுவெளியிலும் கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது என்பதே மறுக்கமுடியாத உண்மை.
தாய் தந்தை பாதுகாப்பைக் கூட காந்தி வலியுறுத்துகிறார் அவர் "பள்ளிக்கூடம் விட்டதும், நேரே அவசரமாக வீட்டுக்குப்போய் அவருக்கு (தந்தைக்கு) பணிவிடை செய்வேன்" என்று அடக்கமாக கூறுவது எவ்வளவு மகத்துவமானது.
நான்காவதாக மாணவர்களின் கையெழுத்து பற்றி அவர் கூறும்போது, "கையெழுத்து நன்றாக இருக்க வேண்டும் என்பது படிப்பில் ஒரு பகுதியல்ல என்ற கருத்து எனக்கு எங்கிருந்து உண்டாயிற்று என்று தெரியவில்லை. நான் இங்கிலாந்துக்குப் போகும் வரையில் இந்த அபிப்பிராயமே எனக்கு இருந்தது. பிறகு முக்கியமாகத் தென்னாப்பிரிக்காவில் இளம் வக்கீல்களும், தென்னாப்பிரிக்காவில் பிறந்து, அங்கேயே படித்த இளைஞர்களும் மிக அழகாக எழுதுவதைக் கண்ட போது என்னைக் குறித்து நானே வெட்கப்பட்டதோடு ஆரம்பத்தில் அசிரத்தையுடன் இருந்து விட்டதற்காக வருந்தவும் செய்தேன். கையெழுத்து நன்றாக இருக்கும்படி செய்யப் பிறகு முயன்றேன். ஆனால் அதற்குக் காலம் கடந்து போய் விட்டது. இளமையில் அசட்டையாக இருந்து விட்டதனால் ஏற்பட்ட தீமையைப் பிறகு என்றுமே நிவர்த்தி செய்து கொள்ள இயலவில்லை. ஒவ்வோர் இளைஞரும், இளம்பெண்ணும் என்னுடைய உதாரணத்தைக் கண்டாவது எச்சரிக்கையுடன் இருக்கட்டும்; கையெழுத்து நன்றாக இருக்க வேண்டியதும் படிப்பின் ஒரு பகுதி என்பதை அறியட்டும்" என காலத்தே செய்ய வேண்டியதை எப்போதும் தவறவிடக்கூடாது என்கிறார்.
குழந்தைகளுக்கு எவ்வாறு எழுதக் கற்றுக் கொடுப்பது என்றுகூட அழகாக அவர் கூறுவதை பாருங்கள், "குழதைகளுக்கு எழுத்துக்களை எழுதுவதற்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன்னால் சித்திரம் வரையக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இப்பொழுது கருதுகிறேன். பூக்கள், பறவைகள் போன்றவைகளைக் குழந்தை பார்த்தே தெரிந்து கொள்வதைப் போல எழுத்துக்களையும் அவர்கள் பார்த்தே தெரிந்து கொள்ளட்டும். பொருள்களைப் பார்த்து அவற்றை வரையக்கற்றுக் கொண்ட பிறகு எழுத்துக்களை எழுத கற்கட்டும். அப்பொழுது அக்குழந்தையின் கையெழுத்து அழகாக அமையும்" என்கிறார் காந்தி. செய்முறை கற்பித்தலின் ஊற்றுக்கண் என்பது அப்போதே அவர் உள்ளத்தில் தோன்றியுள்ளது.
ஆறுமாதம் மட்டுமே மூன்றாம் வகுப்பில் படித்த காந்தியை கோடை விடுமுறைக்கு முன் நடக்கும் தேர்வுக்குப் பிறகு நேரடியாக நான்காம் வகுப்பில் சேர்த்துள்ளார் ஆசிரியர். அப்போது அந்த வகுப்பின் பாடம் ஆங்கில வழியில் மிகக் கடினமாக இருந்துள்ளது. மீண்டும் மூன்றாம் வகுப்புக்கே திரும்பிடலாமா? என்று கூட கருதியதாக காந்தி கூறுகிறார். ஆனால் விடா முயற்சியாக படித்த அவர் "அதிக சிரமத்தின் பேரில் யூக்ளிட்டின் பதின்மூன்றாவது பாடத்திற்கு வந்த பிறகு அந்தப்பாடம் மிக எளிதானது என்று திடீரென்று எனக்குத் தோன்றியது. பகுத்தறிவின் சக்தியைக் கொண்டு மாத்திரமே கற்றுவிட முடியும், ஒரு பாடம் கஷ்டமானதாகவே இருக்க முடியாது. அச்சமயத்திலிருந்து ஷேத்திர கணிதம் (geometry) எனக்குச் சுலபமானதாகவும் சுவையானதாகவும் ஆயிற்று" என படிப்பின் மீது ஆர்வமாக படித்தால் எந்த கடின நிலையையும் வென்று முன்னேற முடியும் என்று மாணவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகள் கூறுகிறார்.
இறுதியாக அப்பகுதி முடியும் தருவாயில் அவர் கூறுவது தான் மிகவும் முக்கியமான ஒன்றாக நாம் பார்க்க வேண்டியுள்ளது, தாய்மொழிதான் "முதல்மொழி" அதன் தொடர்ச்சியாகவே பலமொழிகளும் கற்பிக்கப்பட வேண்டுமென்பதை அவர் இவ்வாறு கூறுகிறார், "இந்தியாவில் உள்ள எல்லா உயர்தர கல்வி முறையிலும் தாய்மொழியோடு ஹிந்தி, சமஸ்கிருதம், பர்ஸியமொழி, அரபு, ஆங்கிலம் ஆகிய இத்தனை மொழிகளுக்கும் இடமிருக்க வேண்டும் என்பது இப்பொழுது என் அபிப்பிராயம். இந்த பெரிய ஜாபிதாவைப் பார்த்து யாரும் பயந்துவிட வேண்டியதில்லை. நமது கல்வி சரியானமுறையில் இருந்து, அந்நிய மொழியின் மூலமே எல்லாப் பாடங்களையும் கற்க வேண்டி இருக்கும் "சுமையும்" பிள்ளைகளுக்கு இல்லாதிருப்பின், இத்தனை மொழிகளையும் கற்பது சங்கடமாயிராது. அதற்குப் பதிலாகப் பெரிதும் சந்தோசம் அளிப்பதாகவே இருக்கும் என்பது நிச்சயம். ஒரு மொழியை முறைப்படி கற்றுக்கொண்டு விட்டவர்களுக்கு மற்ற மொழிகளையும் கற்றுக்கொண்டு விடுவது எளிதாகும்" என்கிறார்.
அந்நிய மொழியின் மூலம்தான் உயர்படிப்பை படிக்க முடியும் என்ற "சுமை" நம் நாட்டு மாணவர்களுக்கு இல்லாதிருக்க வேண்டும், தாய்மொழியிலேயே உயர் படிப்பு வரை படிக்க முடியும் என்ற நிலை உருவானால் எவ்வளவு மகிழ்ச்சியானது என்று கனவு கண்டார் மகாத்மா காந்தி.
ஆனால் இன்று இந்தியும் சமஸ்கிருதமும் மட்டுமே ஊட்டி வளர்க்கப்படுவதும் நம் தாய்மொழியாம் தமிழ் உள்ளிட்ட நாட்டின் பல மொழிகளும் புறக்கணிக்கப்படுவதும் சர்வசாதாரணமாகி விட்டது. மகாத்மா கண்ட "கல்விக் கனவு" நனவாக வேண்டுமானால், அதற்கு அனைவருக்கும் சமமான காசில்லாத "உயர்கல்வி" கிடைக்கும் உரிமைப் போராட்டம் அவசியம்.