tamilnadu

img

மீண்டும் உங்கள் கைகளில் தீக்கதிர் - கே.பாலகிருஷ்ணன்

அன்பிற்கு இனிய தோழர்களே, வணக்கம். கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் தீக்கதிர் நாளிதழை அச்சு வடிவில் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், மார்ச் 25 ஆம் தேதியிலிருந்து அச்சுப் பதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். 

தீக்கதிர் விநியோகம் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தை சார்ந்தே இருந்ததால் விநியோகிக்க இயலவில்லை. எனினும், ‘தீக்கதிர் செயலி’, இ-பேப்பர், டிஜிட்டல் பதிப்பு வழியாக ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான வாசகர்களை தீக்கதிர் சந்தித்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் வாசகர்களுடன் உரையாடிக் கொண்டே இருந்தது. 

எனினும், அச்சுப் பதிப்பை இயன்ற அளவு விரைவில் கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்கும் தீக்கதிர் நிர்வாகத்திற்கும் தொடர்ந்து வேண்டுகோள்கள் வந்த வண்ணம் இருந்தன. தீக்கதிர் மீது வாசகர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்துவதாக இது அமைந்தது. ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுப் போக்குவரத்தும் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. 

எனினும், சகோதர பத்திரிகை நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் மதுரை, கோவை, திருச்சி பதிப்புகளில் அச்சு வடிவிலான தீக்கதிர் விநியோகத்தை 6.5.2020 தேதியிலிருந்து துவக்குகிறோம். சென்னை பதிப்பிற்கு உட்பட்ட மாவட்ட வாசகர்கள் கரங்களிலும் தீக்கதிரை இயன்ற வரை விரைவில் கொண்டு வந்து சேர்ப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவில் செயல்படும் அனைத்து பத்திரிகைகளும் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. தீக்கதிர் மட்டுமின்றி பல பெரிய பத்திரிகைகளும் கூட தங்கள் அச்சுப் பதிப்பை இந்தக் காலத்தில் நிறுத்தியிருக்கின்றன. தீக்கதிர் துவக்கப்பட்டதிலும் அது தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. 

தீக்கதிர் தொடர்ந்து வெளிவர வாசகர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் அனைவரும் பேராதரவு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எத்தனையோ அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், பொருளாதார பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் தீக்கதிர் தனது பயணத்தை நிறுத்தியது இல்லை. தற்போது ஏற்பட்ட நெருக்கடி தவிர்க்க முடியாததாக அமைந்து விட்டது.தீக்கதிர் தன்னுடைய பயணத்தை உங்களின் ஆதரவுடனும் பங்கேற்புடனும் மீண்டும் தொடங்குகிறது. 

ஊடக உலகில் உண்மையின் பேரொளியாக சுடரும் தீக்கதிர் முழுமையாக அனைவரது கைகளிலும் தவழ்வது நம்முடைய கைகளிலேயே இருக்கிறது.