மோடி அரசுக்கு தொழிலாளர்கள் எச்சரிக்கை
சென்னை, அக்.15 - இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றும் உலகப்புகழ்பெற்ற ரயில்பெட்டி தொழிற்சாலையுமான சென்னை பெரம்பூர் ஐசிஎப் (இன்டக்ரல் கோச் பேக்டரி) ஆலையை தனியார்மய மாக்கும் நோக்கத்துடன் ‘கார்ப்ப ரேசனாக’ மாற்றும் முடிவை கைவிடக்கோரி ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் செவ் வாயன்று (அக் 15) ஐசிஎப் ஷெல் ஸ்டோர் கேட் அருகில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஐசிஎப் பர்னிஷிங் பகுதியில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் வேலைகளில் அதிகரித்து வரும் ஒப்பந்தப்பணியை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும்; ஐசிஎப்-பின் நிரந்தரத் தன்மையுள்ள அடிப் படை உற்பத்தி பகுதிகளில் ஒப்பந்தப்பணிகளை அனுமதிப் பதை திரும்பப்பெற வேண்டும்; அத்துக்கூலி தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதை தடுக்க வேண்டும்; ஐசிஎப்பில் பயிற்சி முடித்த ஆக்ட் அப்ரண்டீஸ்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண் டும், ஐசிஎப் உள்ளிட்ட 7 உற்பத்தி கேந்திரங்களையும், பெரம்பூர் கேரேஜ், லோகோ போன்ற 44 ஒர்க் ஷாப்புகளையும் இந்தியன் ரயில்வே ரோலிங் ஸ்டாக் கம்பெனி என்ற பெயரில் கார்ப்பரேசனாக மாற்றும் முடிவை திரும்பப்பெற வேண்டும்; பிஎஸ்என்எல் நிறு வனத்தை கார்ப்பரேசனாக மாற்றி சீரழிப்பதை போல் ஐசிஎப் நிர்வா கத்தை சீரழிக்கும் முயற்சியை கைவிடவேண்டும், 30 ஆண்டுகள் பணி முடித்த அல்லது 55 வயது நிறைவடைந்த தொழி லாளர்களுக்கு கட்டாயப் பணி ஓய்வு பெற வேண்டும் என்ற மிரட்டலை கைவிடவேண்டும், 150பயணிகள் ரயிலை இயக்கவும், 400 ரயில்நிலை யங்களை நிர்வகிக்கவுமான பணியை தனியார் முதலாளி களின் நலனுக்காக தாரை வார்க்கப்படுவதை தடுக்கவேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் இந்த தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்திற்கு ஐசிஎப் யுனெடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் எஸ்.ராமலிங்கம் தலை மை தாங்கினார். போராட்டத்தை சிஐடியு மாநிலத்துணைத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன் துவக்கி வைத்து பேசினார். ஆர்சிஎப் ஒர்க்கர்ஸ் யூனியன் கபூர்தலா பொதுச் செயலாளர் சர்வஜூத் சிங், சிஐடியு மாநிலப்பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், டிஆர்இயூ செயல் தலைவர் அ.ஜானகிராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். ஐசிஎப் சிஐடியு பொதுச்செயலாளர் பா.ராஜா ராம், நிர்வாகிகள் வி.எம்.கிருஷ்ண குமார், வி.மோகன், வி.சுரேஷ், என்.வி.கே.ராவ், சி.சத்தியமூர்த்தி, ஐஆர்டிஎஸ்ஏ மண்டல செய லாளர் கோபிநாத், பிற்படுத்தப்பட் டோர் நலசங்க பொதுச்செயலாளர் இராமமூர்த்தி, ஏஐடியுசி தலைவர் ராஜேந்திரன், ஐஇயூ நிர்வாகி திருநாவுக்கரசு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மணிமேகலை, டிஆர் இயு நிர்வாகி பேபி சகிலா, ஆகி யோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.
சர்வஜித் சிங்
பஞ்சாப் மாநிலம் கபூர்தலா வில் உள்ள ஆர்.சி.எப் ஒர்க்கர்ஸ் யூனியன் - கபூர்தலா பொதுச் செயலாளர் சர்வஜூத்சிங் பேசுகை யில், “தொழிலாளர்களைப் பாது காக்கவேண்டிய ஐசிஎப் நிர்வா கம், முதலாளிகளின் உத்தர வுக்கு செவிசாய்க்கும் மத்திய அரசின் தலையாட்டி பொம்மை யாக செயல்படுகிறது. ஓய்வூதியத் தொகைகளை பங்குச் சந்தையில் போடும் அபாயம் உள்ளது. ஐசிஎப் பில் அந்நியநேரடி முதலீடும், தனியார்மயமும் வரும்போது எதை எதிர்ப்பது என்ற குழப்பம் தொழி லாளர்கள் மத்தியில் இருந்தது. இரண்டுமே தொழிலாளர்களுக்கு எதிரானது தான், ஒன்றோடு ஒன்று சம்மந்தப்பட்டது என்பது இப்பொ ழுது எல்லோருக்கும் புரிந்திருக் கும்” என விளக்கினார்.
வரலாறு தெரியாதவர்கள்
மேலும் அவர் கூறியதாவது: வளர்ந்த நாடுகளில் உள்ளது போன்று ‘லெவல்கிராசிங்’ நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றப் படும் என்று கூறுவது ஏமாற்று வேலையாகும், ஜப்பான், அமெரி க்கா, இங்கிலாந்து நாடுகளில் கூட இன்னும் மனிதர்களால் இயக்கப் படும் லெவல்கிராசிங் இருக்கிறது. ரயில்வே துறையில் கிடைக்கும் லாபத்தை மறைத்து நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய அரசு பொய்யுரைக்கிறது. நஷ்டத்தில் இயங்கும் துறையை எந்த தனியார் நிறுவனமாவது வாங்க முற்படுமா? இவர்களின் பித்தலாட்டத்தை தொழிலாளர்களிடம் விளக்க முற்படும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்யப் படுகிறது; நிர்வாக ரீதியாக நட வடிக்கை எடுக்கப்படுகிறது. எங்க ளது போராட்டம் பாஜக தலைவர் கள் போல் குளு குளு அறையில் நடத்தப்படுவதல்ல. தொழிலாளர் களை ஒன்று திரட்டி களத்தில் போரா டுவது. பிரதமர் மோடிக்கு போராட் டம் குறித்தும், போராடும் தொழிலா ளர்களின் வலி பற்றியும் தெரியாது. ஏனெனில் அவர் சார்ந்துள்ள பாஜகவிற்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு தெரியாது. சுதந்திரத்தில் பங்கேற்காதவர்கள். தொழிலாளர்களை பிரித்தாளும் மத்திய அரசை புறக்கணிப்போம், போராடிபெற்ற பென்சன் உரிமை யை அடைந்தே தீருவோம். இவ்வாறு அவர் கூறினார்.