கொரோனா வைரசால், தமிழகம் ஊரடங்கிக் கிடக்கிறது. இதில் ஏழை- எளிய மக்களும், தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து பசியும், பட்டினியுமாய், வறுமையோடு போராடி களைத்துப் போய்க் கிடக்கின்றனர். மனிதநேயம் ஆங்காங்கே தென்பட்டாலும் முற்றாய் தொலைந்து கிடக்கிறது. இதில் நாகப்பட்டினம், வெளிப்பாளையம், ஏழைப் பிள்ளையார் கோயில் அருகே உணவு விடுதிகளில் பார்சலாக உணவு வாங்கி வந்து மூடியுள்ள கடைகளின் ஓரத்தில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு, எஞ்சிய உணவை இலையோடு அருகில் இருக்கும் குப்பைத் தொட்டியில் சிலர் கொட்டிச் சென்றனர். ஒரு பெரியவர்,.. அந்தக் குப்பைத் தொட்டியையே சுற்றிச் சுற்றிப் வந்து பார்த்தார். பின்னர் அவர், திடீரெனக் குப்பைத் தொட்டிக்குள் இறங்கி எச்சிலைகளில் கிடக்கும் உணவை சாப்பிடுகிறார். மற்றொரு பசியின் கோர முகமாய்.... நாகைப் பேருந்து நிலையம் அருகே பழக்கடைகளில் அழுகிப் போன பழங்கள் கீழே கொட்டப்பட்டுள்ளன. ஒரு மனிதர், பசி தாங்காமல் அழுகிப் போன அந்தப் பழங்களைப் சாப்பிட எடுக்கும் காட்சி.… ஊரெல்லாம் ஏழை- எளிய மக்கள், ஆதரவற்றோருக்கு இலவசமாக உணவளித்துப் பசியில்லாத தமிழகமாகத் திகழ்வதாக ஆட்சியாளர்கள் எந்த குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்போதும் போல் இப்போதும்... தொடர்கிறது ஆட்சியாளர்களின் பிடில் இசை....