சீனாவிலிருந்து 6.5 லட்சம் மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைப்பு
புதுதில்லி,ஏப்.16- கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான 6.5 லட்சம் மருத்துவ உபகரணங்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்க ப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயி ரத்தை தாண்டியுள்ளது. இதைத்தொடர்ந்து மக்களிடையே கொரோனா பாதிப்பு பற்றி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.ஆனால் உடனடியாக முடிவுகள் தெரிவதற்கு போதிய மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவில் இல்லை. இதனால் உபகரணங்கள் வாங்குவதற்கு சீனாவிடம் இந்தியா ஆர்டர் கொடுத்தது. முதற்கட்டத்தில் தயாராக இருந்த உபகரணங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுவிட்டன என்று கூறப்பட்டது. இதனால் இந்தியாவுக்கு உபகரணங்கள் வர காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் வியாழனன்று கூறுகையில், ஆன்டிபாடி பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஆர்.என்.ஏ. பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்ட கொரோனா பரிசோதனைக்கு தேவையான 6.5 லட்சம் மருத்துவ உபகரணங்கள், சீனாவின் குவாங்சூ விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார்.