உவகம் முழுவதும் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் தமிழகத்திலும் இத்தொற்று பரவி வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தொற்று தடுப்பு மையங்களை ஏற்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. தற்போது புதியதாக 1500க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் 500 மருத்துவர்கள் 1000 செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள நியமிக்கப்பட உள்ளனர்.
அதேநேரத்தில், மருத்துவத்துறையில் மிக முக்கியப் பணியாக கருதப்பட்டு வருவது மருந்தாளுநர்களின் பணியுமாகும். இவர்கள் தான் மருத்துவர்கள் எழுதித் தரும் மாத்திரை மற்றும் மருந்துகளை நோயாளிகளுக்கு சரியாக எடுத்து வழங்குவார்கள். மேலும், அதை எந்தெந்த நேரங்களில் உண்ண வேண்டும் எனவும் கூறி அனுப்புவார்கள். இதைவிட உடல் கூராய்வு செய்யும் நேரத்தில் மருத்துவர்களுடன் சேர்ந்து பணிபுரிவார்கள்.
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சாகாதர நிலையங்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்தாளுநர் காலிப் பணியிடங்கள் உள்ளன.
இதனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சீட்டு பதிபவர்கள் மற்றும் செவிலியர்கள் மூலம் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மாத்திரைகள் மாற்றி வழங்கப்பட்டால் நோயாளியின் நிலை அதோ கதி தான். மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பப்படாதது, தமிழக அரசு, சாதாரண, ஏழை, எளிய நோயாளிகளின் உயிருடன் விளையாடுவதற்கு சமம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக இக்காலிப் பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படமால் உள்ளன.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வரும் சூழலில், தற்போது, கொரனோ தொற்று பரவி வரும் நிலையில், இப்பணியிடங்களை நிரப்பிட தமிழக அரசு உடனடியாக காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.