tamilnadu

img

குலக் கல்வியையே முறியடித்த தமிழகம்: அருணன்

திருச்சி, ஆக.24- திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய மாநாட்டில் உரையாற்றிய பேராசிரியர் அருணன், “காஷ்மீரில் நடைபெறுகிற அராஜகங்களுக்கும், கல்வியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எதிராகவும் துடித்தெழுபவர்கள் தமிழர்கள் தான். இந்தியா முழுவதும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கல்விக் கொள்கையை ஒரு போதும் ஏற்க மாட்டோம் என்று முதல் குரல் கொடுப்பது தமிழகம் தான். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி, கல்விக் கொள்கைக்கு எதிராக பங்கேற்ற மாநாடும் இது தான்” என்றார். இந்த கல்வி வரைவறிக்கையை நாம் நமது ஊனக் கண்ணால் பார்த்தால் தெரியாது. ஞானக் கண்ணால் பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். ஒரு குழந்தைக்கு 3 வயதில் தான் அறிவு வளர்ச்சி ஏற்படுவதாக ஆய்வு கூறுகிறதாம். அதனால் ஒரு குழந்தை குறைந்தபட்சம் 3 மொழியை கற்க வேண்டும் என்கிறது இந்த கல்விக் கொள்கை என்றும்  ராஜாஜி, தமிழகத்தில் குலக்கல்வி முறையை கொண்டு வந்தார். அதனை தமிழகம் கடுமையாக எதிர்த்து முறியடித்தது. அதே போல தேசிய கல்விக் கொள்கையையும் எதிர்த்து முறியடிப்போம் என்றும் அருணன் தெரிவித்தார். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “இந்த மாநாடு ஒட்டுமொத்த சமூகத்திற்கான குரலாக விளங்கப் போகிறது. நாட்டில் அரசியல் சாசனத்தில் 246-வது பிரிவு மத்திய மாநில அரசுகள் செயல்பாடுகள் குறித்து அம்பேத்கர் தெளிவாக வரையறுத்துள்ளார்” என்றார். ஆனால் இந்த கல்வி வரைவு அறிக்கை மாநில அரசுகளின் உரிமைகளை மீறுகிறது. ஒரு பல்கலைக்கழகம் நடத்துவது மாநில அரசின் உரிமையாகும். அதையும் மத்திய அரசு மறுக்கிறது. கல்வி, மாநில பொதுப்பட்டியலில் இருந்து மத்திய பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவும் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனவும் குறிப்பிட்டார்.

ஒரிசா பல்கலை.துணைவேந்தர் ஜவஹர்நேசன், “அமெரிக்காவில் உள்ளவர்களில் 45 சதவீதமானவர்கள் இந்த பூவுலகம் உருவாகி 10 ஆயிரம் ஆண்டு தான் ஆகிறது என்று நம்பிக் கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால் இந்த பூவுலகம் உருவாகி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன என அறிவியல் கூறுகிறது. அறிவியலுக்கு புறம்பான கட்டுக் கதைகளை கூறி ஒரு அடக்குமுறை கருவியை நம்மில் காலம் காலமாக திணித்து வந்துள்ளார்கள். மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து டார்வின் தனது பரிணாமவாத தத்துவத்தில் குறிப்பிடுகிறார். இது தான் அறிவியல் உலகம். இதை மறுப்பதும் அதற்கான கல்வியை திணிப்பதும் தான் ஒடுக்குமுறை கல்வி. ஒரு தேசத்தில் தேசியம் என்பது மக்களுக்காக உருவாகி இருக்க வேண்டும். ஆனால் இங்கு அதிகாரத்தில் இருந்து கொண்டு உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்துவதற்காக ஒரு சிறு குழுக்களால் உருவாக்கப்பட்டது தேசியமாக சொல்லப்படுகிறது” என்றார். தேசியக் கல்விக் கொள்கை-2019 பின்னணியின் மர்மங்கள் என்ற நூலை டாக்டர் கோவிந்தராஜ் வர்தனன் வெளியிட, அதை பனானா லீப் ரெஸ்டாரண்ட் மனோகரன் பெற்றுக் கொண்டார். பின்னர் கோவிந்தராஜ் வர்தனன் பேசும் போது, “நான் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து எனது நண்பரிடம் பேசும் போது உனக்கும் இந்த மாநாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார். அவருக்கு சொல்வேன். நான் ஒரு புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர், சிகிச்சை அளிக்கும் போது நோயின் தன்மை குறித்து முதலில் ஆய்வு செய்வோம். ஸ்கேன் செய்து ரிப்போர்ட் தருவோம். பின்னர் நோய்க்கான மருந்து கொடுப்போம். அப்படி தான் இந்த வரைவறிக்கை குறித்து ஆய்வு செய்து அதற்கான தீர்வை இந்த புத்தகத்தில் வழங்கி உள்ளோம் என்றார்.

;