tamilnadu

img

விவசாயிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத் தீர்ப்பு - க.ஆனந்தன்

விவசாயிகளுக்கு நிலத்தின் மீதான உரிமையை தட்டிப் பறிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த மார்ச் 6ல் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. தொழிற்சாலைகள் அமைக்க, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த என பல்வேறு வகைக ளில் நிலம் தேவைப்படுகிறது. அவ்வாறு ஒரு திட்டத்தை அமல்படுத்தும் போது அரசு நிலம் மட்டுமல்லாமல், தனியார் விவசாயிகளின் நிலங்களையும் அரசு கையகப்படுத்தும். இவ்வாறு  பொதுப் பயன்பாட்டிற்கு நிலம் கையகப் படுத்த ஆங்கிலேய அரசு 1894ஆம் ஆண்டு கொண்டு வந்த ‘நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1894’ன் பிரிவு 11 பயன்படுத்தப்பட்டு வந்தது.

பல்வேறு திட்டங்களில் நிலத்தை விவசாயிகள் தர மறுத்தால், அவர்கள் மீது அரசு வன்முறையை ஏவி, அவர்களை ஒடுக்கி, இந்த 1894ஆம் ஆண்டு சட்டத்தைப் பயன்படுத்தி விவசாயிகளிடமிருந்து  நிலத்தை அரசு வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி வருகிறது.  இதனை எதிர்த்து விவசாய இயக்கங்கள் பல்வேறு வீரஞ்சொறிந்த போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதன் விளைவாக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நிலம் கையகப்படுத்தலில் நியாயமான இழப்பீட்டு உரிமை மற்றும் வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டம் 2013 (Right to fair compensation and Transparency in Land Acquisition Rehabilitation and Resettlement Act 2013) நிறைவேற்றியது. 

2013ஆம் ஆண்டு சட்டம் - பிரிவு 24

-1894ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் நிலம் கைய கப்படுத்தி, அதற்கான இழப்பீடு வழங்கப்பட்டிருக்காவிடில் இந்த புதிய சட்டத்தின்  பிரிவு 24 உபபிரிவு 1ஏ படி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

1 பி-யின்படி நிலத்தை கையகப்படுத்தி, அதற்கான இழப்பீட்டை 1894ஆம் ஆண்டு சட்டத்தின்படி நில உரிமை யாளருக்கு வழங்கப்பட்டிருப்பின், 1894ஆம் ஆண்டு சட்டத்தின்படி நிலத்தை ஆர்ஜிதம் செய்ய நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும். 

24(2)  உபபிரிவு 1ல் சொல்லப்பட்டிருப்பவை இருந்தா லும், 1894 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அந்த சட்டத்தின் பிரிவு 11ன் படி, அதற்கான இழப்பீடு இந்த சட்டம் அமலுக்கு வந்து 5 ஆண்டுகள் அல்லது அதற்கு முன் வெளியிடப்பட்டு, ஆனால், நிலம் அரசின் பாத்தியத்திற்குள் வராமல் இருந்தாலோ அல்லது இழப்பீடு வழங்கப்படாமல் இருந்தாலோ அந்த நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டதாக கொள்ளப்படும்; சம்பந்தப்பட்ட அரசுகள் விரும்பினால், இந்த சட்டத்தின்படி புதிதாக நிலம் கையகப்படுத்த நட வடிக்கை எடுக்கலாம்.  அதாவது ஏற்கனவே நிலம் கையகப்படுத்தி அதற்கான இழப்பீடு வழங்கப்பட்டும், 5 ஆண்டுகளாக அந்த நிலம் விவசாயி பாத்தியத்தில் இருந்தால், இந்த சட்டத்தின் படி, கையகப்படுத்தப்பட்ட நிலம் மீண்டும் பழைய உரி மையாளருக்கே சொந்தம்.  மேலும், இழப்பீடு வழங்கப்ப டாமல் இருந்தாலும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டது செல்லாது. புதிய சட்டத்தின்படி மீண்டும் நிலம் கையகப் படுத்துதல் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலம் பழைய உடைமையாளருக்கு சொந்தம். 

விவசாயிகளின் உரிமைகளை நிலை நாட்ட, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் இந்த மாற்றங்களை அன்றைய ஐக்கிய முற்போக்கு அரசு, இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் காரணமாக கொண்டு வந்தது. இந்த சட்டம் 2014 முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி நிலத்தை திரும்பப் பெற உரிமை உள்ள விவசாயிகள், நீதிமன்றங்க ளை அணுகி தங்களுக்கு நிவாரணம் பெற்றனர். 

ரிலையன்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு நிலம்

இந்நிலையில், குஜராத்தில் நரேந்திர மோடி முதல மைச்சராக இருந்த போது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஜாம் நகரில் இந்தியாவிலேயே மிகப்பெரிய சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த ஆணை பிறப்பிக்கிறார். 

இதற்கு விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்புகிறது. பல விவ சாயிகள், நிலங்களை அவர்களது பாத்தியத்தில் வைத்தி ருக்கிறார்கள். பல விவசாயிகள், இழப்பீட்டை வாங்க வில்லை. சிலருக்கு இழப்பீடு அரசு கருவூலத்தில் அரசு ஒதுக்கி வைத்திருந்தது. பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக நிலம் கைய கப்படுத்தப்பட முடியவில்லை.  பழைய 1894ஆம் ஆண்டு  சட்டத்தின் படி நிலம் ரிலை யன்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கையகப் படுத்தப்பட்டதற்கு எதிராக குஜராத் உயர்நீதி மன்றத்திற்கு வழக்கு செல்கிறது.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மாற்றும் அரசு முயற்சிகள் தோல்வி

இந்நிலையில், 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் 2013 சட்டத்தின் 24(2) நீக்க மோடி அரசு அவசரச் சட்டம் போடுகிறது. பின்னர், அதனை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க அரசு முயல்கிறது. போதுமான பலமில்லாததால் அரசு முயற்சிகள் தோல்வியைத் தழுவுகிறது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம்,  மேற்படி நிலம் கையகப்படுத்துதலை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ள முடிவெடுக்கிறது. இப்போது ரிலையன்ஸ் நிறுவனம், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013 பிரிவு 24(2) தனி யார்  திட்டங்களுக்கு கையகப்படுத்தும்போது பொருந்தாது என எதிர் மனு ஒன்றை குஜராத்  உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது.  ரிலையன்ஸ் மனுவை ஏற்றுக் கொண்ட குஜராத் உயர்நீதிமன்றம், விவசாயிகளது மனுக்களை தள்ளுபடி செய்கிறது. விவசாயிகள் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகுகிறார்கள். 

2014 உச்சநீதிமன்றத் தீர்ப்பு 

புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகு, புனே மாநகராட்சி பழைய சட்டத்தின் படி நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தின் 3 பேர்  கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது.  2013ஆம் ஆண்டு சட்டம் வந்துள்ள நிலையில், அதன் 24(2)ன் படி உள்ள வழக்கு களுக்கு, 1894 சட்டத்தின் படி நிலம் கையகப்படுத்த முடியாது என்றும் புதிய சட்டத்தின் 24(2) செல்லும் என வரையறை செய்தது. 

அந்த வரையறையின் படி, நிலம் தொடர்ந்து விவசாயி யின் அனுபவத்தில் இருந்தாலோ அல்லது இழப்பீடு நேரடி யாக நில உடைமையாளருக்கு வழங்கப்படாமல், அல்லது நீதிமன்றத்தில் செலுத்தப்படாமல் கருவூலத்தில் இருந்தா லோ அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என புதிய சட்டத்தின்படி சிறு குறு நில உடைமையாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதனால் ஏராளமான நில உடைமையாளர்கள் பலன் பெற்றார்கள்.  இந்த நிலையில், குஜராத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து விவசாயிகள் உச்சநீதிமன்றத்தில் 2018ல் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் வந்தது.

இந்த வழக்கில், நீதிபதி மிஸ்ரா, ஏற்கனவே உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மாறாக, 2013 சட்டத்தின்படி 24(2) ன் படி நிவாரணம் வழங்கத் தேவையில்லை என தீர்ப்பளிக்கிறார். அந்த வழக்கின் தீர்ப்பில் அவர் 24(2) பொருந்தாது என்பதற்கு அளிக்கப்பட்ட விளக்கங்கள், ஏற்கனவே மோடி அரசு சட்டத்தின் இந்தப் பிரிவை மாற்ற  கொண்டு வந்த சட்டதிருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுடன் ஒத்திருந்தது. இந்நிலையில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணாக, நீதிபதி மிஸ்ரா வழங்கிய தீர்ப்பு இருந்த தால், நீதிபதி மதன் லோகுர் உட்பட 3 பேர் கொண்ட அமர்வு, நீதிபதி மிஸ்ரா வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கின்றனர். இந்த விஷயம் அன்றைய தலைமை நீதிபதி முன் செல்கிறது. அவர் இதனை விசாரிக்க நீதிபதி மிஸ்ரா தலைமை யிலேயே 5 பேர் கொண்ட ஒரு அரசியல் சாசன அமர்வை அமைக்கிறார். 

அது பெரும் விவாதத்தை கிளப்புகிறது. நீதிபதி மிஸ்ரா வழங்கிய தீர்ப்பின் மேல் முறையீட்டை நீதிபதி மிஸ்ராவே விசாரிக்கக் கூடாது என நீதிமன்றத்திலேயே மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். நீதிபதி தானாக விலகிக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், நீதிபதி மிஸ்ரா இந்த வழக்கிலிருந்து விலக மறுத்து விட்டார். அரசியல் சாசன அமர்விலிருந்து தான் விலக மறுத்து அதற்காக ஒரு ஆணையும் வழங்கினார்.  தற்போது அந்த வழக்கின் தீர்ப்பைத்தான் அரசியல் சாசன அமர்வு கடந்த மார்ச் 6ஆம் தேதி வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு ஏற்கனவே நீதிபதி மிஸ்ரா தலைமையில் 3  பேர் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

2013ஆம் சட்டத்தின் 24(2) பிரிவின் கீழ்  இழப்பீட்டை பெறாமல் 5 ஆண்டுகள் கடந்திருந்தாலும், அவர்களுக்கு நிலத்தில் உரிமை இல்லை என இந்த அமர்வு தீர்ப்ப ளித்தது. மேலும், விவசாயிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய  இழப்பீடு நீதிமன்றத்தில் செலுத்தப்படாமல் இருந்தாலும், கருவூலத்தில் இருந்தாலே அது இழப்பீடு வழங்கியதாக கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது. மேலும், நிலத்திற் கான இழப்பீடு வழங்கப்பட்டு, ஆனால், நிலம் கையகப் படுத்தப்படாமல், நில உடமையாளரின் பாத்தியத்தில் இருந்தாலும், அவர் 2013ஆம் ஆண்டு சட்டத்தின்படி உரிமை கோர முடியாது என தீர்ப்பளித்துள்ளனர். 

மேலும், அரசியல் சாசன அமர்வு, ஒரு முக்கிய திருத்தத்தை 2013ஆம் ஆண்டு சட்டத்தில் செய்துள்ளது. சட்டத்தில்  உள்ளது என்னவெனில், இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்தியிருந்தாலும் அல்லது இழப்பீடு வழங்கி நிலம் உரிமையாளரின் அனுபவத்தில் இருந்தா லும் 2013 ஆம் ஆண்டு  சட்டத்தின்படி நிலம் கையகப் படுத்தியதாக கொள்ள முடியாது. நிலம் கையகப்படுத்த 2013ஆம் ஆண்டு சட்டத்தின்படி மீண்டும் புதிதாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இருப்பதை மேலே காட்டியுள்ளோம்.  ஆனால், தற்போது அரசியல் சாசன அமர்வு இந்த இரண்டு நிபந்தனைகளுக்கு இடையே உள்ள ‘அல்லது’ (Or) என்பதை ‘மேலும் (And)’ என மாற்றியுள்ளது. 

இனி 24(2) என்பது 

அரசு இழப்பீடு வழங்காமலும், நிலமும் உரிமையாளர் வசம் இருந்தால் மட்டுமே நிலத்தின் உரிமையாளர் 2013 சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற முடியும். எந்த சட்டத்தை கொண்டு வர முடியாமல் மோடி திணறி னாரோ, அந்த சட்டத்தை அவருக்கு எந்த அரசியல் இழப்பும் இன்றி,  இன்று உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவாக மாற்றியுள்ளது. அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதால் இனி வரும் காலங்களில் 2013ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தாவாக்க ளை இந்த அடிப்படையிலேயே அணுக முடியும். 

நீதிமன்றத் தீர்ப்பை மாற்ற மீண்டும் நாடாளுமன்றத்தில் 24(2) சிறப்பு பாதுகாப்பு சட்ட திருத்தம் கொண்டு வர விவ சாயிகள் சங்கங்கள் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்திட வேண்டிய கட்டாயத்தை இது ஏற்படுத்தியுள்ளது. 

நீதிமன்றங்களை பல நீதிபதிகள் மக்களுக்காக பயன் படுத்தினார்கள். குறிப்பாக நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், அரசு என்பதற்கான விளக்கத்தை விரிவுபடுத்தியதன் விளைவாகவே சாதாரண மனிதர்கள் ரிட் மூலம் நீதிமன்றத்தை அணுக முடிகிறது. நீதிபதி கிருஷணய்ய ரைப் பற்றி சட்ட வல்லுனர் ஹரிஸ் சால்வே, “இந்திய உச்சநீதிமன்றத்தை அவர்  இந்தியர்களின் உச்சநீதி மன்றமாக மாற்றினர்” என்றார்.   தற்போது, நீதிபதி மிஸ்ரா பிரதமர் மோடியை, “உலக ளவில் சிந்தித்து, உள்நாட்டில் செயல்படும் மேதை” என புகழ்ந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டி யுள்ளது.



 

;