tamilnadu

img

மானுட உயிர்ப்பின் உறைவிடம் மார்க்ஸ் - ச.லெனின்

“கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது”

- கம்யூனிஸ்ட் அறிக்கையில் வரும் இவ்வாக்கியத்தின் உண்மையான சாட்சியமாகவே மார்க்சின் வாழ்க்கை இருந்தது. குழந்தைக்குப் பாலூட்டும் அளவிற்குக் கூட உடலில் சக்தியற்ற நிலையில்தான் மார்க்சின் மனைவி ஜென்னி இருந்தார். மார்க்சின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அவர் நினைத்திருந்தால் ஏகத்திற்கும் சம்பாதித்திருக்க முடியும். ஆனால் அவருக்குத் தனிப்பட்ட நலனைவிட சமூக நலனே முதன்மையாக இருந்தது.

உண்மைக்கு முகமூடி கிடையாது

தொழிலாளர்களைச் சுரண்டும் முதலாளித்துவத்தின் உண்மை (கோர) முகத்தையும், அவர்களின் பிரதிநிதியான ஆளும் அரசின் செயல்பாட்டையும் மார்க்சின் எழுத்துக்கள் அம்பலப்படுத்தியன. இதுவே அவரை ஒரு இடத்திலும் நிலையாக இருக்கவிடாமல், நாடு விட்டு நாடு துரத்துவதற்கு ஆளும் வர்க்கத்திற்கு போதுமானதாக இருந்தது. இடம்பெயர்ந்து வெளிநாடுகளிலிருந்த போதும் அரசுகளின் நெருக்கடிகள் நின்றபாடில்லை. “பிரஷ்ய அரசாங்கத்தின் விடாப்பிடியான கோரிக்கையின் பேரில் மார்க்ஸ் ஓர் ஆபத்தான புரட்சியாளர்” என்று 1845ல் பாரீஸ் நகரிலிருந்து நாடு கடத்தப்பட்டார். அவர் லண்டன் வந்து சேரும் வரை இத்தகைய நெருக்கடி, விரட்டல், சோதனையோட்டம் தொடர்ந்தது.  

இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்கு ஆளும் வர்க்கத்தை ஆதரித்து அவர் எழுதியிருக்க வேண்டுமென்பதல்ல, அவர்களை எதிர்த்து எழுதாமல் இருந்திருந்தாலே போதும். உண்மையைத் தவிர்த்து வேறெந்த முகமூடியையும் அணிய முடியாத மார்க்சிற்கு அது சாத்தியப்படவில்லை.

ஆகவேதான், “கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடி மறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்ட்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்” என்று உலகத் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பிரகடனமான கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்சும் ஏங்கெல்சும் முழங்கினர்.

“கம்யூனிஸ்ட் அறிக்கை” வெளியானபோது மார்க்சின் வயது முப்பதுதான். ஆனால் அதன் ஒவ்வொரு வார்த்தைகளும் காத்திரமானவை. “உள்ளத்தில் தெளிவுண்டாயின் வாக்கினில் தெளிவுண்டாம்” என்ற பாரதியின் வாக்கினைப் போல் மார்க்சின் வார்த்தைகள் தெளிவானவை. எவ்வித ஒளிவு மறைவுமற்ற நேரடியான  வார்த்தைகள் அவை. லண்டனில் மார்க்ஸ் இருந்த காலத்தில் அவருடன் நெருக்கமாக இருந்த கார்ல் லீப்னெஹ்ட் “மிகச் சிறிய இடத்தில் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு விஷயங்களை (மார்க்ஸ்) திணித்துவிடுவார்” என்கிறார். அதாவது மிகச்சுருக்கமாகவும் அதேநேரம் கூர்மையாகவும் அவை இருக்கும் என்கிறார்.

வெறும் சொல்லடுக்குள் அல்ல

மார்க்சின் வார்த்தைகள் வெறும் சொல்லடுக்குள் அல்ல, அவை உயிர்த்தன்மை கொண்டவையாகும். இதையே “மார்க்சியத்தில் மானுட அறிவின் ஆக்கப்பூர்வமான சாதனைகள் அனைத்தும் ஒன்று திரட்டப்பட்டு பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்திற்கான போர்க் கருவியாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளன என்றார் லெனின்.

பதினைந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட நவீன அறிவியலின் வளர்ச்சி மற்றும் அக்காலத்தில் பங்காற்றியவர்கள் குறித்தும் ஏங்கெல்ஸ் எழுதியுள்ள விஷயங்கள் மார்க்சை மேலும் புரிந்துகொள்ள உதவக்கூடும். இக்காலத்தை ஜெர்மானியர்கள் சீர்திருத்தம் என்றும், பிரெஞ்சுக்காரர்கள் மறுமலர்ச்சி என்றும், இத்தாலியர்கள் புனர்வாழ்வு என்றும் அழைத்தனர். ஆனால் இவ்வார்த்தைகள் எதுவுமே அந்த சகாப்தத்தை விளக்கிட முடியாது என்கிறார் ஏங்கெல்ஸ்.

சிந்தனை ஆற்றல், வேட்கைகள், பண்பு, அனைத்தையும் தழுவும் பார்வை, கற்றறிதல் ஆகியவற்றில் மாபெரும் சிந்தனைகள் படைத்த மாமனிதர்கள் தோன்றினர். இவர்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டனர். பல  மொழிகளை அறிந்திருந்தனர். பல்வேறு துறைகளில் சிறப்புப் பெற்றிருந்தனர். லியனார்டோ டாவின்சி ஓவியர் மட்டுமல்ல மாபெரும் கணிதவியலாளரும், பொறியாளருமாவார். மாக்கியவெல்லி ராஜதந்திரி மட்டுமல்ல. கவிஞர், வரலாற்றறிஞர், ராணுவ கலை குறித்து முதன் முதலில் எழுதியவருமாவார். அவர்களின் வழித்தோன்றல்களிடம் பெரிதும் காணப்படுவது போன்று வரம்புக்குட்பட்ட ஒருதலைச்சார்பான போக்கு இவர்களிடம் இல்லை. ஏனெனில் இவர்கள் உழைப்பு பிரிவினைக்கு அடிமைபட்டிருக்கவில்லை என்கிறார் ஏங்கெல்ஸ்.

முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு பல்வேறுதுறை சார்ந்த அறிவுஜீவிகளின் ஆற்றலும் அறிவும் தேவை. தொழிற்சாலைகளில் உள்ள வேலைப் பிரிவினையைப் போலவே அறிவுத்துறையிலும் துறைசார் நிபுணர்கள் என்கிற பாணியில்  வேலைப்பிரிவினையை உருவாக்கிவிட்டது முதலாளித்துவம். இந்த அறிவுஜீவிகளின் ஆற்றல் முழுவதும் முதலாளிகளின் லாபத்தை அதிகப்படுத்த மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படும். சமூகப் பயன்பாடு, சமூக அக்கறை என்பது இவற்றில் மிகக் குறைவே.

“செயல்பாட்டுப் பாணியின் அடிப்படையில் அறிவுஜீவிகள் இருவகைப்படுவர். ‘மரபு ரீதியான, தொழில் ரீதியான அறிவுஜீவிகள்’ ஒருவகை. இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளின் அறிவுஜீவிகளான இவர்களின் சமூக நிலைகளில் வர்க்கத்திடைப்பட்ட நுட்பமான வெளிப்பாடு இருக்கும்: ‘உயிரோட்டமான அறிவுஜீவிகள்’ என்பது மற்றொருவகை. ஒரு குறிப்பிட்ட அடிப்படை சமூக வர்க்கத்தை அணிதிரட்டும் அம்சமாக அவர்கள் இருப்பார்கள்” என்கிறார் கிராம்ஷி. அத்தகைய உயிரோட்டமான அறிவுஜீவிகளின் முன்னோடியாக மார்க்ஸ் திகழ்கிறார். குறிப்பிட்ட வட்டத்துக்குள் மார்க்சை அடைக்க முடியாது. அவருடைய சமூக வேட்கை அவரை முதலாளித்துவ பாணியிலான எந்த வேலைப்பிரிவினையிலும் முடக்க முடியவில்லை. எனவேதான் பல்துறை களஞ்சியமாக அவர் இருந்தார். முதலாளித்துவம் தனது சுயலாபத்திற்காகத் திரட்டி வைத்திருந்த எல்லா அறிவுச் செல்வங்களையும் உழைக்கும் மக்களுக்கான கோட்பாட்டை உருவாக்க அள்ளி எடுத்துக் கொண்டார்.  

தேங்கிக் கிடப்பதல்ல... முன்னேறுகிறது

பதினைந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பங்காற்றியவர்கள் - “ஏறத்தாழ அனைவருமே தமது சமகாலத்திய இயக்கங்களிலும் நடைமுறை போராட்டங்களிலும் தமது வாழ்க்கையைக் கழிக்கவும் தமது செயற்பாடுகளை மேற்கொள்ளவும் செய்தனர். பலர் தங்களது எழுத்து மற்றும் ஆயுதம் என இரண்டையும் பயன்படுத்தினர்” என்று மேலும் ஒரு முக்கியமான அம்சத்தை ஏங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். முதலாளித்துவ சமூக அமைப்பு அறிவுஜீவிகளை மேட்டுக்குடிகளைப் போல் உணரவைத்து அவர்களை மக்களிடமிருந்து விலக்கியே வைத்துக்கொண்டது. மக்களின் குரலாகப் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் வேறு சிலரோ தங்களை மேசை புரட்சியாளர்களாகவோ அல்லது நவீன விசைப்பலகை (கீபோர்டு) புரட்சியாளர்களாகவோ நிறுத்திக் கொள்கின்றனர்.  

மார்க்சும் எங்கெல்சும் அவர்கள் காலத்தில் நடந்த பெரும்பான்மையான எழுச்சிகளில் நேரடியாக பங்கேற்றனர். கம்யூனிஸ்ட் அகிலத்தைத் துவக்கியது, அதன் செயல்பாட்டிற்கான வழிமுறைகளையும், கோட்பாடுகளையும் உருவாக்குவது உள்ளிட்டவைகளில் அவர்களின் பங்கு ஈடு இணையற்றதாகும்.

தத்துவம் மற்றும் நடைமுறை எனும் புதிய தொழிலாளி வர்க்கக் கலாச்சாரத்திற்கு அவர்கள் வித்திட்டனர். இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை அடிப்படையாக கொண்ட மார்க்சியம், நடைமுறை அனுபவங்களில் இருந்து கோட்பாடுகளை உருவாக்குகிறது. அறிவியல் கண்ணோட்டத்தோடு இக்கோட்பாடுகள் களத்தில் பரிசோதிக்கப்படுகிறது. நடைமுறை அனுபவங்களிலிருந்து கோட்பாடு மேம்படுத்தப்படுகிறது. இதுவே மார்க்சிய அணுகுமுறையாகும். எனவேதான் மார்க்ஸ் உண்மையல்லாத அனைத்தையும் நிராகரித்தார்.

மார்க்சியத்தின் அனுபவம் வாய்ந்த செயல்வடிவமாகத் திகழ்ந்த லெனின், நடைமுறையில் செயலாற்றும் போது “தவறு ஏற்பட்டால் திருத்திக் கொள்வோம். முடியாவிட்டால் கற்றுக் கொள்வோம்“  என்றார்.

இயற்கை எப்படி ஒருபோதும் தேங்கிக் கிடந்ததில்லையோ அதேபோல் இயற்கையின் ஒருபகுதியான மனிதனும் அவன் வாழும் சமூகமும் எப்போதும் தேங்கிக் கிடந்ததில்லை. ஏனெனில் இயக்கம்தான் நம்மை இடைவிடாது இயக்குகிறது. மேலும் மேலும் புதுப்பித்துக் கொண்டேயுள்ளது. அதுவே நம்மை அடுத்தடுத்த நிலைக்கு நகர்த்துகிறது.

நெருப்புப் பந்தாக இருந்த பூமிப் பந்தில் பலப் பல காலம் கடந்து ஒருசெல் உயிரினம் ஒன்று தோன்றியதே அதுவே இயற்கையிலிருந்த ஒரு உயர்த்தன்மை. அந்த உயிர்த் தன்மையின் நீட்சியே மனித சமூகம். இந்த மனித சமூகம் எட்ட வேண்டிய உயரிய சமூக பரிணாமத்தின் உயிர்த் தன்மையே மார்க்சியமாகும். அந்த உயிர்த் தன்மையின் உறைவிடமே மார்க்ஸ்.

 மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் 1818 மே 05 

 

 

;