tamilnadu

img

இந்தியாவின் வரலாறு காவி நிறமா?

செப்டம்பர் மாதம் 14ம் தேதி ஆறு பா.ஜ.கஉறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலமான பதிலளித்த கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல்  இந்தியாவின் 12ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை கலாச்சாரம் குறித்தும் அது உலகின் ஏனைய கலாச்சாரங்களுடன் கொண்டிருந்ததொடர்புகள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனின் நாடாளுமன்ற உரை பலமான ஆதரவையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பரவலான விமர்சனம் உருவாக்கியநிர்ப்பந்தம் காரணமாக தமிழக முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த குழுவில் மாற்றம் செய்யப்படலாம் என சில செய்திகள் வெளிவந்துள்ளன. 

இந்த குழு 2016ம் ஆண்டே உருவாக்கப்பட்டது. 2018ம்ஆண்டு மார்ச் மாதம் ‘ராய்ட்டர்’ இதழ் இது குறித்து நீண்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்ட பின்னர்தான் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்தியாவின் கலாச்சாரம் என்றைக்குமே ஒற்றைத் தன்மையுடன் இருந்தது இல்லை. அது பன்மைத் தன்மை கொண்டது. ஆனால் இக்குழு இந்த பன்முகத்தன்மையை வெளிக்கொணருமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

12000 வருடம் ஏன்?
12,000 வருடம் என்பதன் அடிப்படை என்ன? இராமர் கி.மு. 5100ம் ஆண்டில் பிறந்தார் எனவும் அவருக்கு முன்பு63 மன்னர்கள் ஆண்டனர் எனவும் ஒரு கணக்கு முன்வைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அல்லது மகாபாரதம் அடிப்படையில் 12,000ஆண்டுகள் என கணக்கிடப்படலாம்! இராமாயணமும் மகாபாரதமும் இந்த தேசத்தின் இதிகாசங்கள்! பெரும்பான்மை இந்துக்களால் போற்றப்படுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் நவீனகாலத்தில் எந்த ஒரு தேசத்தின் வரலாறும் புனித நூல்கள்அல்லது இதிகாசங்கள் அடிப்படையில் உருவாக்கப்படுவது பொருத்தமற்றது.இந்தியாவின் வரலாற்றில் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வேட்டையாடுதலும் மேய்ச்சலையும் தொழிலாக கொண்டிருந்தனர். பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்தனர். உபரி உற்பத்தி இல்லாத காரணத்தால்சுரண்டல் இல்லை. கிடைத்ததை தமக்குள் பகிர்ந்து கொண்டனர். அரசு அல்லது குடும்பம் உருவாகியிருக்கவில்லை. ஏற்றத்தாழ்வுகளும் ஆண் பெண் பேதமும் இல்லை. இயற்கையை புரிந்து கொள்ள இயலாத அவர்கள் இயற்கையை வழிபட்டனர். மதம் எனும் அமைப்பு உருவாகியிருக்கவில்லை. இதற்கு பின்னர் சிந்து சமவெளி நாகரிகம் உருவானது. இந்த நாகரிகம் எகிப்து அல்லது சுமேரிய நாகரிகத்தைவிட வளமாக இருந்தது என ஹரப்பா/ மொகஞ்சதாரோ போன்ற பல இடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. இந்திய துணைக்கண்டத்தில் உருவான முதல் நகர நாகரிகம் இது! இதற்கு பின்பு இதே போல ஒரு சிறந்த நாகரிகம் தமிழகத்தில் உருவானது என்பதை ஆதிச்சநல்லூர்/ கொற்கை/ கீழடியில் நடந்த தொல்லியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்த நாகரிகங்களில் வழிபாடு இருந்தது; ஆனால் பெரு மதங்கள் இல்லை. மதங்களே உருவாகாத இந்த காலகட்டத்தை இந்து மத வரலாற்றின் ஒரு பகுதி என கட்டமைக்க முயல்வது பெரும் முரண்பாடு அல்லவா?

வேதங்களும் எதிர் சவால்களும்
இந்த நாகரிகங்கள் மறையத் தொடங்கிய காலத்தில் வேத நாகரிகம் தொடங்கியது. இதுவே ஆரியர்களின் வருகைக்கான காலமாகவும் இருந்தது. மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உருவானது. சிறிது சிறிதாக உபரி உற்பத்தியும் நிகழ்ந்தது. எனவே சுரண்டல்/ அரசு/ஏற்றத்தாழ்வுகள் உருவாயின. இவற்றை நியாயப்படுத்தவும் நிறுவனமயமாக்கவும் ஒரு சித்தாந்தம் தேவைப்பட்டது. அதுவே வர்ணாசிரமம்! பிராமணர்களும் சத்திரியர்களும் ஆளும் வர்க்கத்தின் பிரிக்க முடியாத பிரிவினராக உருவான அதே சமயத்தில் உபரி உற்பத்தியை உருவாக்கும் பிரிவாக சூத்திரர்கள் கட்டமைக்கப்பட்டனர். வைசியர்கள் இந்த இரண்டுக்கும் இடையே வைக்கப்பட்டனர். எவ்வித பொருளாதார மற்றும் சமூக உரிமைகளும் இல்லாதஇழிவு படுத்தப்பட்ட பிரிவாக சூத்திரர்கள் உருவாக்கப்பட்டனர். உலகில் எங்குமே இல்லாத ஒரு சமூக பரிமாணம் இது! மற்ற தேசங்களிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆனால் சமூக ஏற்றத்தாழ்வுகள் அதுவும் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடுகள் இந்தியாவின் மோசமான தனித்தன்மையாக அமைந்தது. வர்ணாசிரமத்தில் பெண்களின் நிலையும் தாழ்ந்து போனது. இந்த வரலாற்றுஉண்மையை குழு ஏற்குமா?

வர்ணாசிரமத்தை நியாயப்படுத்திய ஸ்ருதி எனப்படும்வேதங்களும் ஸ்மிருதி எனப்படும் சட்டக் கோட்பாடுகளும் கேள்விக்கு அப்பாற்பட்டவையாக வைக்கப்பட்டன; இதனைவிமர்சிக்கும் எவர் ஒருவருக்கும் மிகக்கடுமையான தண்டனை காத்திருந்தது! எனினும் கேள்விகள் கேட்கப்பட்டன; பவுத்தமும் சமணமும் வேதக் கோட்பாடுகளை விமர்சித்தன. வர்ணாசிரமத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிரிவினர் பவுத்தம் சமணத்தால் ஈர்க்கப்பட்டனர். வேத கோட்பாடுகளுக்கு சாங்கியம்/நியாயம்/வைசேசிகம் ஆகிய கோட்பாடுகளும் பல கோணங்களிலிருந்து சவால் விட்டன. இவைகாலப்போக்கில் வேதங்களில் கரைந்து போயின. எனினும் சமரசம் இல்லாமல் வேதக்கோட்பாடுகளுடன் வீரச்சமர் புரிந்த ஒரு கோட்பாடு இருந்தது. அது சாருவாகம் அல்லதுலோகாயதம் எனும் கடவுள் மறுப்பு/ பொருள் முதல்வாதக்கொள்கை ஆகும். லோகாயதத்தின் சவாலை சந்திக்க இயலாதவர்கள் அதனை அழிக்க முனைந்தனர். லோகாயதமும் லோகாயதவாதிகளும் வேட்டையாடப்பட்டனர்.  இந்த வரலாற்று உண்மைகளை இந்த குழு அங்கீகரிக்குமா?

\வேதகால நாகரிகத்தின் சாதகமான அம்சம் விவசாய உற்பத்தி முறையின் முன்னேற்றம் எனில் உபரி உற்பத்தியை அபகரிக்க உருவான வர்ணாசிரமம் மிகப்பெரிய பாதகமான அம்சம். வர்ணாசிரமத்தின் சில நடைமுறைகள் இந்திய சமூக வளர்ச்சியை தடுத்தது. உதாரணத்திற்கு 19ம்நூற்றாண்டின் 300 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாஒரு குறிப்பிடத்தக்க அறிவியல்/ தொழில்நுட்ப கண்டுபிடிப்பை கூட நிகழ்த்தவில்லை. விவசாய உற்பத்திமுறையின் அடுத்த நகர்வான முதலாளித்துவ உற்பத்திமுறை ஆங்கிலேயர்களால் அவர்களின் சுயநலனுக்காக இந்தியாவில் புகுத்தப்பட்டது. வானவியல் உட்பட அறிவியலில் முன்னேறி இருந்த இந்தியா ஏன் பின்தங்கியது?ஐரோப்பாவில் நிகழ்ந்த தொழில் புரட்சி ஏன் இந்தியாவில் நிகழவில்லை? வர்ணாசிரமத்தின் நீட்சியாக ஏன் சாதியம் உருவானது? இத்தகைய கேள்விகளுக்கு இந்த குழு பதில் தருமா? வேத நாகரிகம் உருவாக்கிய முரண்பாடின் இரண்டு அம்சங்களையும் அங்கீகரிக்க மறுக்கும் எந்த வரலாறும் உண்மையான வரலாறாக இருக்க இயலாது.

இந்தியா ஒரே தேசமாக இருந்ததா?

பண்டைய காலத்தில் இந்தியா ஒரே தேசமாக இருக்கவில்லை. பல்வேறு இனத்தவர் பல பகுதிகளை ஆண்டனர். பேரரசுகள் உருவாயின; அவை சிதறுண்டவும் செய்தன. வடக்கே மவுரிய / குப்த பேரரசுகள் மட்டுமல்ல; பாலா/ இராஷ்ட்ராகுடா/பிரதியாரா என பல இனங்கள் ஆண்டன. தெற்கே பல்லவர்கள்/ சாளுக்கியர்கள்/ சேரர்/சோழர்/பாண்டியர் என பல வம்சங்கள் ஆண்டன. கிரேக்கர்கள்/குஷானர்கள்/ஹுன்/சாகா/மங்கோலியர்கள் என பலரும் படையெடுத்தனர். சிலர் திரும்பினர்; சிலர் இங்கேயேதங்கினர். இந்த மன்னர்கள் காலத்தில் இந்து மதம் மட்டுமல்ல; பவுத்தமும் வலுவான ஆதரவை பெற்றிருந்தது. பல்வேறு வம்சங்கள் ஆண்ட காரணத்தால் பல கலாச்சாரங்களும் உருவாயின. இவையெல்லாம் இஸ்லாம் மற்றும்கிறித்துவத்தின் வருகைக்கு முன்பு.

தனக்கு சவால்விட்ட பவுத்தம்/சமணம்/லோகாயதம்ஆகிய கோட்பாடுகளை வீழ்த்திய வேத கோட்பாடுகளுக்கு இஸ்லாம்/ சீக்கியம்/கிறித்துவத்தின் வடிவில் புதிய சவால்கள் முளைத்தன. இந்த சமயங்கள் முரண்பாடுகளை தோற்றுவித்தன என்பது உண்மையே! எனினும் கலாச்சார ஒற்றுமைகளையும் இவை உருவாக்கின. கங்கையின் புனிதத்தை முலிம் மன்னர்களும் ஏற்றுக்கொண்டனர். இஸ்லாமிய இளவரசர்கள் இந்து அரசகுடும்ப பெண்களை மணப்பது பரவலாக நடந்தது. மதமாற்றம் சில சமயங்களில் கத்தி முனையிலும் பல சமயங்களில் பொருளாதார/ஆன்மீக காரணங்களுக்காகவும் நடந்தது. எனினும் இந்து மதத்தினரின் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாத்தை தழுவிவிடவில்லை. 

எனவே இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களை பகைத்துகொள்ளாமல் ஆட்சிபுரிய முனைந்தனர். வர்ணாசிரமத்தை இஸ்லாம் மன்னர்கள் கேள்வி கேட்கவில்லை. அக்பர் சக்கரவர்த்தி உடன் கட்டை ஏறுதலை மறுபரிசீலனை செய்யக் கூடாதா என வேண்டுகோள்தான் வைத்தார்; அதனை தடை செய்ய முன்வரவில்லை. இந்து  - இஸ்லாம்ஆகிய பெரு மதங்களின் பொதுத் தன்மைகளை ஒன்றிணைக்க அக்பர்/கபீர்தாசர்/அவுரங்கசீப்பின் சகோதரர் தாராகேஷூ ஆகியோர் முயன்றனர். இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் சீக்கியம் உருவானது. ஒரு பிரிவு மக்களை அது ஈர்த்தது. இஸ்லாம் அளவுக்கு  கிறித்துவம் பரவவில்லை. வடகிழக்கு பகுதிகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களிடையேயும் சிறிதளவு கிறித்துவம் பரவியது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய பொழுதுதான் இந்தியா/ இந்தியர் எனும் அரசியல் உணர்வு உருவானது. விடுதலை போராட்டம் ஒருபுறத்தில் மக்களை இணைக்க முயன்றது. மறுபுறத்தில் இந்து மதவாதமும் முஸ்லிம் மதவாதமும் மக்களை பிளவுபடுத்த முனைந்தன. விளைவு? தேசம் விடுதலை அடைந்தாலும் தேசப்பிரிவினை எனும் கொடுமை அரங்கேறியது. விடுதலை போராட்டத்தில் பங்கேற்காத பிரிவு எனில் அது சங்பரிவாரம்தான்! இதனைஇந்த குழு பதிவு செய்யும் என நாம் நம்பினால் அதைவிட ஏதாவது முட்டாள்தனம் இருக்குமா? விடுதலை அடைந்தபாகிஸ்தான் மதத்தின் திசையில் பயணிக்க, இந்தியா மதச்சார்பின்மை திசையில் பயணித்தது. எனினும் ஏற்கெனவே பலவீனமாக இருந்த இந்திய மதச்சார்பின்மை மீது இன்றுசங்பரிவாரம் கடும் தாக்குதலை தொடுத்துள்ளது. இதன் ஒருமுக்கிய நகர்வாக 12 ஆயிரம் கால வரலாறு முழுமைக்கும் காவிநிறத்தை பூச கடும் முயற்சிகள் நடக்கின்றன.

தமிழகத்தின் தனித்துவம்
தென்னிந்தியா குறிப்பாக தமிழகம் சில தனித்துவ குணங்களை பெற்றிருந்தது. வர்ணாசிரமம் தாமதமாகவே தமிழகம் வந்தடைந்தது; ஆனாலும் வந்தது. இங்கு வலுவாக நிலவிய ஆசிவகம்/ பவுத்தம்/ சமணம் அவ்வளவு எளிதாக வர்ணாசிரமத்துக்கு இடம் கொடுக்கவில்லை. எதிர்சமர்புரிந்தன. குண்டலகேசி/ நீலகேசி/ ஒரு பிரிவு சித்தர்களின்படைப்புகள் இதற்கு சாட்சி. வர்ணாசிரமம் வர்ணபேதத்தைமுன்வைத்தது எனில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”என வள்ளுவர் கூறினார். உயர் வர்ணங்கள் ஏனைய வர்ணங்களை அடிபணிய வேண்டும் என்றபொழுது “எலும்பிலும் தோலிலும் இலக்கம் இட்டு இருக்கோ?” என சித்தர்கள்எதிர்குரல் கொடுத்தனர். பவுத்தத்தை ஆதரித்து பிராமணியத்தை ஒடுக்க முற்பட்ட களப்பிரர்களின் ஆட்சி திட்டமிட்டுஇருண்ட காலம் என மறைக்கப்பட்டது. பவுத்தமும் சமணமும் வேட்டையாடப்பட்டன. எனினும் பிராமணியத்துக்கு எதிரான எதிர்வினை நிற்கவில்லை. வள்ளலார் ஆன்மீககோணத்திலிருந்து எதிர்வினையாற்றினார். வர்ணாசிரமத்தின் நீட்சியாக சாதியம் உருவாகி ஒரு பிரிவினரை தள்ளிவைத்த பொழுது அய்யா வைகுண்டர் சமத்துவ கிணறுகளைநிறுவினார். 

கிறித்துவம் முதலில் உயர்வகுப்பினரிடையே பரவ முயன்று தோல்வி கண்டது. ஒடுக்கப்பட்டவர்களை அணுகியபொழுது அதனை ஒரு பிரிவு மக்கள் அரவணைத்தனர். பவுத்தம்/சமணம் மறைந்த பின்னர் முதல் முறையாகஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வி கிடைத்தது. அயோத்திதாசரும் ரெட்டைமலை சீனிவாசனும் அடக்கப்பட்டவர்களின் குரலாக முன்வந்தனர். இந்த பரிணாமத்தின் ஒரு முக்கியகட்டமாக பெரியார் களத்துக்கு வந்தார். அண்டை மாநிலங்களில் அய்யன் காளி/ நாராயண குரு/ ஜோதிபா பூலே/ பசவண்ணா ஆகியோரின் பங்கும் மிகமுக்கியமானது. இதே காலகட்டத்தில் கேரளா/ ஆந்திரா/ தஞ்சை தரணி உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களை சமூககொடுமை, பொருளாதார சுரண்டல் இரண்டுக்கும் எதிராகபொதுவுடமை இயக்கம் அணிதிரட்டியது. இந்த நீரோட்டங்களின் ஒட்டுமொத்த சூழல் தமிழகத்துக்கும் தென்னிந்தியாவுக்கும் தனித்துவத்தை உருவாக்கியது.

தமிழகம் உட்பட்ட தென்னிந்திய வரலாற்றின் முக்கிய அம்சங்களை மத்திய அரசின் குழு அங்கீகரிக்குமா? இதுவே மில்லியன் டாலர் கேள்வி. இந்த குழுவின் நோக்கம்என்ன? ராய்ட்டர் செய்தி நிறுவனம் தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் பேட்டிகள் அடிப்படையில் கூறுகிறது:

1. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் வாழ்ந்த மூத்த குடிமக்களின் நேரடி வாரிசுகள்தான் இந்துக்கள் என்பதை நிலைநாட்டுவது. அதற்காக தொல்லியல் மற்றும் மரபணு தரவுகளை தேடுவது.

2. வேதங்கள்/ இராமாயணம்/மகாபாரதம் போன்ற புனித நூல்கள் புனைவுகள் அல்ல; அவை வரலாற்று உண்மைகளை உள்ளடக்கியது என நிலை நாட்டுவது. 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மோகன் வைத்யா கூறுகிறார்: 

“இந்திய வரலாற்றின் உண்மையான நிறம் காவிதான்! இதற்கு ஏற்றவாறு வரலாற்றை திருத்தி எழுத வேண்டியுள்ளது.”மதச்சார்பின்மை மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு இந்த குழுவின் அறிக்கை ஒரு பெரும் சவாலை உருவாக்கும். அது மட்டும் சர்வ நிச்சயம். 

===அ.அன்வர் உசேன்===

;