tamilnadu

img

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

கொரோனா பெருந்தொற்று காலத்தில் எத்திசையிலும் ஓங்கி ஒலிக்கும் குரல் “அனைவருக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் விலையின்றி உணவுப்பொருள் வழங்கு” என்பதுதான். இந்த உணவுக்கு வித்திட்டு விளைவித்து களஞ்சியங்களை நிரப்பி இருப்பவர்கள் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும்தானே!

“உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்பது பழமொழி. அதனால்தான் உற்பத்திசெய்த பொருள்களுக்குக் கட்டுப்படியாகும் விலைகொடு என காலம் காலமாக அரசுகளிடம் அவர்கள் கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆளும் வர்க்கத்தின் செவிகள் திறக்காவிட்டாலும் வேளாண் தொழிலை விட்டு விலகி விடாமல் கட்டிக் காத்து வருகிறார்கள்.

மத்திய அரசின் உணவுக்  கழகத்தில் 7 லட்சம் டன் (ஒரு டன்னுக்கு ஆயிரம் கிலோ என்பதைக் கொண்டு பெருக்கிப் பாருங்கள். அப்போதுதான் இதன் பிரம்மாண்டம் புரியும்) உணவு தானியங்கள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றில் ஒரு பகுதியை ஏழை எளிய மக்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும்  விலையின்றி வழங்குங்கள் என்று அரசுகளிடம் கேட்க முடிகிறது. இவ்வளவு தானியங்களை விளைவித்து வழங்கிய விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதும் பாராட்டுவதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தது தமிழ்நிலம்; உணர்ந்திருந்தனர் புலவர் பெருமக்கள். அவர்களில் உச்சிமேல் வைத்து மெச்சத் தகுந்தவர் திருவள்ளுவர். 1330 குறள்கள் இயற்றினார் என்றாலும் எக்காலத்திற்கும் பொருந்துவதாக பல குறள்கள் இருக்கின்றன. அவற்றில் “உழவு” என்ற அதிகாரத்தில் அவர் கூறியுள்ள 10 குறள்கள் மிகவும் முக்கியமானவை .“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை” என்ற முதல் குறளிலேயே அவர் விவசாயிகளை வீறார்ந்து நிற்கச் செய்துள்ளார். எரின் பின்னால் உழவர்கள் செல்வார்கள்; அவர்களின் பின்னால்தான் உலகம் சென்றாக வேண்டும் .  அதனால் அவர்கள் செய்யும் உழவுத் தொழிலே அனைத்துக்கும் தலையாயது என்ற சொல்லை வெல்லும் சொல் இல்லை அல்லவா?

இன்னும் ஒருபடி மேலே சென்று உழவர்களின் பணியை, சேவையை எண்ணிப் பார்க்கிறார் வள்ளுவர். எவர் வாழ்கிறவர்? எவர் வாழவைக்கிறவர்? இரண்டிலுமே முன்னுக்கு நிற்பவர்கள் உழவர்கள்தான். தாங்கள் வாழ்வதோடு மற்றவர்களையும் வாழவைப்பதற்காக பாடுபடுகின்ற உழவர் களை வணங்க வேண்டும். அதுவும் மிகுந்த மரியாதையோடு கைகூப்பி வணங்க வேண்டும் என்று வள்ளுவர் நினைக்கிறார். அந்த நினைப்பை வேறு ஒரு வடிவத்தில் குறளாக்குகிறார்.“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்தொழுதுண்டு பின் செல்பவர்”

அக்காலத்து அரசவையில் இருந்தும் இக்காலத்து நாடாளுமன்ற அவைகளில் இருந்தும் ஆட்சி செய்யலாம். அவர்களின் ஆட்சிக் கட்டில் ஆட்டம் காணாமல் இருக்க உழவர்கள்தான் காரணம். பசிப்பிணி போக்காவிட்டால் மக்கள் என்னாவார்கள்?  மன்னர்கள் என்னாவார்கள்? மக்களாட்சியில் ஆள்வோரும் என்னாவார்கள்? நிலைகுலைந்து போவார்கள்; தலைகுப்புற வீழ்வார்கள்.அனைவரையும் காப்பாற்றுகின்ற ஆற்றல் கொண்டவர்கள் உழவர்கள். ஒரு பெரும் மரத்தின் நீடித்த, நிலைத்த வாழ்வுக்கு எப்படி ஆணிவேர் முக்கியமோ அப்படி அகிலம் நீடித்து நிலைக்க ஆணிவேராக இருப்பவர்கள் உழவர்கள்.

“உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்ற குறள்வரி அதைத்தான் உணர்த்துகிறது.

கோடிக் கணக்கான உயிர்களை உள்ளடக்கிய உலகப் பெருந்தேர் உருள்வதற்கு அச்சாணியாக  இருப்பவர்கள் உழவர்கள். இந்த நன்றி உணர்வை சங்க இலக்கியத்தின் புறநானூற்றுப் புலவர் குடபுலவியனார்“உண்டி முதற்றே உணவின் பிண்டம்;உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். இதன் தொடர்ச்சியை,   “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று பாடிய முண்டாசுக்கவி பாரதி வரை பார்க்கிறோம்.மனித சமூகத்தில் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதை உறுதிசெய்யும் புரட்சிப் பெரும் படையின் பிரிக்கமுடியாத அங்கங்களில் ஒன்றாக விவசாய வர்க்கத்தை மார்க்ஸியம் முன்வைத்தது; அவர்களின் உற்பத்திக் கருவியான அரிவாளை அடையாளச் சின்னங்களில் ஒன்றாக்கியது. மனிதகுலத்தின் வாழ்க்கையை உறுதி செய்வதற்காக கொரோனா கொடுங்காலத்திலும் உழவுப் பணியை மேற்கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் சேவைக்கு நன்றி, பாராட்டு என்பது காலம் கருதிய முன்னெடுப்பு. ஞாலம் கருதினும் அவர்களுக்குக் கைகூடும்.

====மயிலைபாலு====

;