மத்திய அரசு தொடங்கிய பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையை, தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
கொரோனா நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் என்ற பிரத்யேக நிவாரண நிதியம் ‘பப்ளிக் அதாரிட்டி’ அல்ல. எனவே ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது என்று கூறி ஆர்டிஐ விண்ணப்பதாரர் ஸ்ரீ ஹர்ஷா கந்துகுரி என்பவர் கேட்டிருந்த விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.
அதில், “பிஎம் கேர்ஸ் நிதியம் தகவலுரிமைச் சட்டம், 2005 பிரிவு 2 ஹெச்-ன் படி பொது அதிகாரத்தின் கீழ் வராது. இது தொடர்பான விவரங்களை pmcares.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டு விவரங்களை அளிக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிபிசிஎல் எனும் தனியார் தொண்டு நிறுவனம் பிஎம் கேர்ஸ் நிதி அனைத்தையும் தேசிய பேரிடர் நிதிக்குக் கொண்டு வரக் கோரி பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.கே.கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, அடுத்த இரு வாரங்களுக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.