tamilnadu

img

செபி,சிபிஐ, அமலாக்கப்பிரிவு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கு:
 

சென்னை,அக்.11- தேசிய பங்குச் சந்தை முறைகேடு தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், நவம்பர் 11 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேசிய பங்குச் சந்தை, செபி , சிபிஐ, அமலாக்கப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை, குறிப்பிட்ட சில நிறுவனங்கள் சட்டவிரோதமாக பெறுவதற்கு தேசிய பங்குச் சந்தை அதிகாரிகள் அனுமதியளித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி-க்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த செபி, தேசிய பங்குச் சந்தைக்கு சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதித்தது. மேலும், புதிய பங்குகளை அறிமுகம் செய்யவும் தடை விதித்தது. இது தொடர்பாக செபி மட்டுமின்றி, சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆனால், நாட்டிலேயே மிகப்பெரிய முறைகேடாக கருதப்படும் பங்குச்சந்தை முறைகேட்டை முழுமையாக வெளிக்கொண்டு வர செபியும், சிபிஐயும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை நிதிச் சந்தை மற்றும் பொறுப்புடைமை என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த முறைகேட்டினால், பல நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷாயி அடங்கிய அமர்வு, மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை, செபி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு, தேசிய பங்குச் சந்தை ஆகியவை நவம்பர் 11 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

;