ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு வாலிபர் சங்கம் கண்டனம்
ஈரோடு, ஜூன் 6-மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு காவல்துறை அனுமதி மறுத்ததற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.அரசு பள்ளிகளில் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த 5 ஆம் தேதி மாநில முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக ஈரோடு சூரம்பட்டி 2 ஆம் நம்பர் பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டது. இதற்காக ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது.இந்நிலையில், 30(2) காவல் சட்டம் அமலில் உள்ளது. அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். பொதுமக்கள் அமைதிக்கு இடையூறு ஏற்படும். அனுமதி மறுக்கப்பட்ட பின்னரும் ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைக்கும் விதிமீறலுக்கு, முன்நின்று நடத்துபவர்கள் மீது சட்டப்பூர்வமாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர். இந்தி ஆதிக்கத்தை எதிர்த்தும், மாணவர்களுக்காக, அரசு பள்ளிகளுக்காகப் போராடினாலும் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்று கூறும் ஈரோடு மாவட்ட காவல்துறை, தொடர்ச்சியாக ஜனநாயக முறையில் நடத்தப்படும் இயக்கங்களுக்கு தடை விதித்து வருகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆகவே இச்செயலுக்கு கடும்கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர்வி.ஏ.விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் எம்.சசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்
ஈரோடு, ஜூன் 6-ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடத்துவது குறித்த ஆலோசணைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் ஆக. 22 முதல் செப். 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், நாமக்கல், தேனி ஆகிய 11 மாவட்டங்களிலிருந்து தலா 25 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முகாம்நடக்கும் அனைத்து நாட்களிலும், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் பூங்காவில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளவும், தற்காலிக கழிப்பறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் தடையின்றி குடிநீர் வழங்கப்படும்.வட்டார போக்குவரத்து துறை மூலம் முகாமில் பங்கேற்போருக்குப் பாதுகாப்பானத் தடுப்புஅமைக்கப்படும். காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்குவார்கள். சுகாதாரத்துறை சார்பில், இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள் உடன் முதலுதவி பெட்டி, 108 ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் இருக்கும். தீயணைப்பு வாகனம் நிறுத்தப்படும். இம்முகாமை முன்னிட்டு ஆக. 21 முதல் செப்.2 ஆம் தேதி வரை 11 மாவட்டங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஆள் சேர்ப்பு முகாம் தொடர்பாக, விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரணி, புகைப்பட கண்காட்சி போன்றவை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு இயக்குனர் கர்னல் ஆர்.ஜே.ரானே உட்பட பலர் பங்கேற்றனர்.