பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைத்தை காவிரி கரையில் அமைக்க எதிர்ப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
ஈரோடு, டிச. 2- பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை காவிரி கரையில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். இம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு பகுதியில் உள்ள அனைத்து சாய, சலவை, பிரிண்டிங் ஆலைகளின் கழிவுகளை சுத்திகரிப்பு செய்ய, ஈரோடு பி.பி.அக்ரஹாரம் காவிரி கரையில், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு அமைக்கப்பட்டால், ஆலை கழிவுகள் காவிரி ஆற்றில் திறந்துவிடும் சூழல் ஏற்படும். நீர் நிலைகளுக்கு அருகே, இதுபோன்ற கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, எந்த சூழலிலும் அனுமதி வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்கினால், அவ்விடத்தில் உள்ள விவசாய நிலங்கள், நிலத்தடி நீர், குடிநீர் போன்றவை முற்றிலும் மாசுபடும். எனவே நீர் நிலைகள் மாசுபடாதவாறு பெருந்துறை சிப் காட் தொழிற்பேட்டை வளாகத்தில், சுத்திகரிப்பு நிலை யத்தை அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பொது கழிப்பறையை திறக்க வேண்டுகோள்
தருமபுரி, டிச. 2- தருமபுரி நகராட்சி சார்பில் புதுப்பிக்கப்பட்ட பொது கழிப்பறையை திறக்க வேண்டுமென பயணிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தருமபுரி நகராட்சியில் புறநகர் மற்றும் நகர் பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, சேலம், ஈரோடு, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்ல நாள்தோறும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பறை, இலவச கழிப்பறைகள் உள்ளது. மூன்று மாதத்துக்கு முன், நகராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வராததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில தனியார் கழிப்பறைகளில் ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேருந்து நிலை யம் வரும் பயணிகள் திறந்த வெளியிலேயே, இயற்கை உபாதைகள் கழிப்பதால் கடும் துர்நாற்றம், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் பொதுக்கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.