tamilnadu

img

திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு ஊதியம், நிவாரண உதவிகள் வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல் 

திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் நிவாரண உதவிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய தலையீடு செய்ய வேண்டுமென அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. 
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனுக்கு புதன்கிழமை சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எம்எல்எப் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் பனியன் நிறுவனங்கள் மற்றும் அதைச்சார்ந்த தொழில்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் புலம்பெயர்ந்து திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். 

தற்போது கொரோனா வைரஸ் நோய் தாக்குதலால் உலகம் முழுவதும் அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டிலும் நாளுக்கு நாள் நோய்த் தாக்குதல் அதிகரித்து வருகிறது. எனவே திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் அன்றாட உணவுக்குக்கூட சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலை இல்லாத நாட்களுக்கு கம்பெனி நிர்வாகங்கள் தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என பிரதமரும், முதல்வரும் அறிவித்துள்ளனர். ஆனால் இன்று வரையிலும் எந்த கம்பெனி நிர்வாகமும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையிழந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.

மேலும் பல நாடுகளில் அரசு பொறுப்பேற்று தொழிலாளர்களுக்கான ஊதியத்தை வழங்கியுள்ளது. திருப்பூர் ஆண்டு ஒன்றிற்கு 45,000 கோடி ரூபாய்கள் அந்நிய செலவாணியாக மத்திய அரசுக்கு ஈட்டித் தருகிறது. அதற்கு காரணமான தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உடனடியாக வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் குடும்ப அட்டைதாரருக்கு அரிசி மற்றும் பணம் முறையாக சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் திருப்பூரில் புலம் பெயர்ந்து வந்துள்ள பிற மாநில, மற்ற மாவட்ட தொழிலாளர்கள் குடும்ப அட்டை இல்லாமல் உள்ளனர். அவர்களையும் கணக்கெடுத்து அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்க போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுத்திட தொழிற்சங்கங்கள் வற்புறுத்தி உள்ளன.
இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக்கூடிய முறையில் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

தொழில் அமைப்புகளுக்கு கோரிக்கை

மேலும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம், திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம், பின்னலாடைத் துணி உற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதில் பனியன் தொழிலாளர்களுக்கு கம்பெனி நிர்வாகங்கள் ஊதியம் வழங்க மேற்படி தொழில் அமைப்புகள் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதில் பிரதமரும், முதல்வரும் அறிவித்தபடி இன்று வரையிலும் திருப்பூரில் எந்த கம்பெனி நிர்வாகமும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. எனவே இன்று ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக்கூடிய முறையில் பனியன் தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களுக்கு சம்பளம் வழங்கும்படி தங்கள் சங்க அங்கத்தினர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
 

;