நாகர்கோவில்:
மீனவர் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் ரூ.1000 நிவாரண நிதியுடன் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் தகுதி வாய்ந்த அனைத்து மீனவர்களுக்கும் வழங்குமாறு தமிழக முதல்வரை சிஐடியு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்க (சிஐடியு) மாநில செயலாளர் எல்.அந்தோணி அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மீனவர் வாரியத்தில் உறுப்பினர் பதிவை புதுப்பித்தவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு முடிவு செய்திருப்பது சரியல்ல. ஏராளமானோர் புதுப்பிக்க முடியாத நிலைமையை உருவாக்கியது மீன்வளத்துறையே. மீன்துறையின் ஊழியர் பற்றாகுறையினால் உறுப்பினர் புதுப்பித்தலுக்கு வாய்ப்பளிக்காமல் மீனவர்களை திருப்பி அனுப்பி வந்தனர். சுமார் ஏழு வருடங்களாக புதியதாக வாரியத்தில் மீனவர்களை பதிவு செய்வதற்கு மீன்துறையினர் விண்ணப்பங்களை வாங்கியும் வாரிய உறுப்பினர்களாக ஆக்கவில்லை. வாரியத்தில் உறுப்பினராக இருந்தவர்களை 60 வயது என காரணம் காட்டி புதிப்பிக்கவும் இல்லை ஒய் வூதியம் கூட வழங்கவில்லை. இச்சூழ் நிலையில் பசியும், பட்டினியுமாக வாழ்ந்து வரும் மீனவர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.