tamilnadu

என்னை தோற்கடிக்க ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம்: திருமாவளவன் குற்றச்சாட்டு

சிதம்பரம், ஏப்.7-  சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க அதிமுக - பாஜக ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர் என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார்.சிதம்பரம்(தனி) மக்களவைதொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர், பரங்கிப்பேட்டை ஒன்றிய கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தமிழகம் முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க சதி திட்டம் தீட்டுகின்றனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் யாரும் மக்களவைக்குள் நுழையக் கூடாது என்று பாஜக-வினர் நினைக்கின்றனர். இதனால் என்னை தோற்கடிக்க அதிமுகவும்-பாஜகவும் சிதம்பரம் தொகுதியில் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.


திருச்சியில் எங்கள் கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் காரை சோதனையிட்டு அவர் தொழிலுக்காக வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து அந்த சம்பவத்தை தேர்தலோடும் என்னோடும் முடிச்சு போட்டு வேண்டுமென்றே என் மீது களங்கத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினர் முயற்சி செய்கின்றனர். அவர் அந்த பணத்தை தொழிலுக்காக எடுத்துச் செல்கிறேன் எனக் கூறியுள்ளார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலே தொழில் அதிபர்கள் இருக்கக் கூடாதா? ஆளுங் கட்சியை சேர்ந்தவர்கள் எவரிடமாவது இது வரை சோதனை நடந்துள்ளதா? அவர்கள் தேர்தல் விதி முறைகளுக்கு உட்பட்டுதான் செலவு செய்கிறார்களா?அதிமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் தேர்தல் செலவுகளுக்கு உட்பட்டுதான் செலவு செய்கின்றனர் என வருவாய்த்துறை அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்களா? எத்தனை களங்கத்தை சுமத்த நினைத்தாலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.இவ்வாறு திருமாவளவன் கூறினார். 

;