tamilnadu

img

புதின உருவில் வரலாற்று ஆளுமைகள்

ஆர். எஸ். மணியின் நெஞ்சிருக்கும்வரை என்றபுத்தகத்தை கையிலெடுத்தவுடன் நெஞ்சை அள்ளும் ஒரு புதினம் உள்ளே இருக்கிறது என்றே தோன்றும்.எதார்த்த மானுட உறவு, ஒரு புதினத்தின் கற்பனை மாந்தர் உலாவை விட விநோதமானது மட்டுமல்ல. நெஞ்சை தொடுவதிலும் விஞ்சி நிற்கும் என்பதை புத்தகத்தை படித்து முடித்தவுடன் உணர முடிகிறது.ஒரு புதினத்தில் வருகிற கதாபாத்திரங்கள். இடம், எல்லாமே எதார்த்தமல்ல. யாரையும் குறிப்பிடவில்லை என்று எழுதியே வாசகனின் நெஞ்சை தொடவைக்கும். இந்தபுத்தகம் எதார்த்த மானுடத்தை எழுதி நெஞ்சை நெகிழ வைக்கிறது. இந்த புத்தகத்தை படித்தவுடன் என் மனதில் தோன்றியதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். மானுடம் என்பது சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டுகால் பிராணிகளாக வாழ்ந்தன. காலப் போக்கில் உருவாக்கி கொண்ட உறவு வகைகளால் தனி ஆணோ. பெண்ணோ தனித்துவ ஆளுமை பெற்றவர்களாக ஆகிறார்கள் என்ற உண்மையை உணரவைக்கிறது. ஒருதலைவனோ, தத்துவ ஞானியோ பிறப்பதில்லை. அவதார புருஷர்களாக அவதரிப்பதில்லை. மானுட உறவுகளால் உருவாகிறார்கள் என்பதே இதைப் படித்தவுடன் மனதிலே தோன்றியது.ஒரு ஆணோ, பெண்ணோ அவர்களது ஆளுமைகளை உருவாக்குவது பிறர்களோடு அவர்கள் கொண்டிருக்கும் உறவுகளே. அந்த உறவுகளை கழித்துவிட்டால் அவனோ, அவளோ இரண்டுகால் பிராணி ஆகிவிடுவர் என்ற உண்மையையும் உணர வைக்கிறது..ஆர்.எஸ்.மணி, தான் உறவாடிய 30 ஆளுமைகளை படம் பிடித்துள்ளார். இவர்கள் அனைவரும் தமக்கென முயலா நோன்தாள்,பிறர்க்கென முயலுநர் உண்மையானேஎன்ற சங்க கால கவிதை வரிகளுக்கு உயிரும் உடலும் கொடுத்தவர்கள். இந்த 30 ஆளுமைகளோடு உறவாடியதாலேயே ஆர். எஸ்.மணி வங்கி வேலையை நேசிக்கத் தொடங்கினார். சங்கத்திலும், இயக்கங்களிலும் ஈடுபட்டார்.நெப்போலியன் என்றபெயரைக் கேட்டவுடன் சர்வாதிகார ஆளுமையே மனத்திரையில் ஓடும். ஆனால் ஆர்.எஸ்.மணி சந்தித்த நெப்போலியன் கூட்டல், கழித்தல் கணக்கில் புலி.கனிவான மனம்; கம்பீரமான உடல்வாகு. சங்கத்தின் முன்னோடி. அவர் பற்றியகுறிப்பு நம் நெஞ்சை நெகிழவைக்கிறது.இந்தப் புத்தகம் சிலரது வாழ்க்கை வரலாற்றை கூறவில்லை. நம்மில் பலர் அறிந்த கி.ராஜ நாராயணன், வண்ணதாசன், மேலாண்மை பொன்னுச்சாமி, அருணன், தமிழ்ச் செல்வன், குன்றக்குடி அடிகளார், தொழிற்சங்க மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியில் இயங்குபவர்கள், முன்னோடிகள் ஆகியோரின் ஆளுமைகளை சொற்களால் சித்தரித்துள்ளார். இந்த எழுத்தைப்பற்றி முனைவர் மா வள்ளலார், இ.ஆ.ப “ அறியப்பட்ட ஆளுமைகளின் அறியப்படாத தகவல்களை சுவைபட பதிவாக்கியுள்ளது” என்று கூறுவது மிகப் பொருத்தமே. இந்த எழுத்து நெஞ்சை அள்ளும் புதினத்தின் சாயலுடன் “உண்மை கற்பனையைவிட விநோதமானது ” என்று கூறியதையும் மார்க் ட்வைன் நிரூபிக்கிறது.

;