சின்னசேலம், அக்.20- விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் 50,000 ரூபாய் கட்டினால் 100 நாட்களில் 1,00,000 ரூபாயாக பணத்தை திருப்பித் தருவதாக பலரிடம் வசூல் செய்துவிட்டு இரவோடு இரவாக வசூல் செய்தவர் தலைமறைவானதால் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சியடந்தனர். பணமோசடி செய்தவர் மீது சின்னசேலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் மேட்டுத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராம்குமார் (33) என்பவர் சின்னசேலம் காவல்துறையிடம் கொடுத்த புகாரில்; சின்ன சேலம் நகரில் லஷ்மி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஒரு சூப்பர் மார்க்கெட் நடைபெற்று வருகிறது. அதில் 50,000 ரூபாய் பணம் கட்டினால் 100 நாட்களில் 1,00,000 ரூபாயாக பணம் திருப்பித் தருவதாகவும், அதேபோல் எவ்வளவு பணம் கட்டுகிறோமோ அதை 100 நாட்களில் 2 மடங்காக திருப்பித் தருவதாக வும் அறிவிப்பு செய்திருந்தனர். இதன்பேரில் நான் உள்ளிட்ட பலர் அதில் பணம் கட்டி வந்தோம்.
ஆனால் திடீரென்று லஷ்மி ஸ்டோர் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது மேலும் அதன் உரிமையாளர் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தால் கைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. எனவே பணம் கட்டிய அனைவரையும் ஏமாற்றி விட்டு அவர் தலைமறைவாகியுள்ளார். எனவே பலகோடி ரூபாய் மோசடி செய்து விட்டு அவர் தலைமறைவாக உள்ளதாக தெரி கிறது. அவரை கைது செய்து எங்களது பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என சின்னசேலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் ஏராளமான பணம் இரட்டிப்பு பண மோசடியில் சூறையாடப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.