tamilnadu

img

மாடல் இல்லாமலே காந்தி சிலை வடித்த சிற்பி தனபால்

காமராஜரை சிலையாக வடிக்க நினைத்தபோது அவருடைய குருவும் எனக்குத் திருமணம் செய்து வைத்தவருமான நித்யானந்தா அடிகள் உதவிக்கு வந்தார். என்னைக் காமராஜருக்கு அறிமுகம் செய்து வைத்தார். “அதுக்கென்ன தாராளமா செய்துட்டுப் போகட்டுமே” என்றார் காமராஜர். பிறகு அவரைச் சந்திக்கும் போது, “சில பெரிய தலைவர்களின் சிலைகள் அவ்வளவு நன்றாக வடிவமைக்கப்பட வில்லையே ஏன்” என்று என்னிடம் கேட்டார் காமராஜர். “அரசியல்வாதிகள் படைப்பாளிகள் அல்ல... ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இரண்டாம், மூன்றாம் தர சிலைகளைக் கட்டுப்படுத்தும் செல்வாக்கு என்னவோ அவர்களிடத்தில் தானே உள்ளது. நன்றாக இல்லாத சிலைகளை உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் ஏன் அனுமதிக்க வேண்டும்!” என்று அவரிடம் கேட்டேன்.அவர் சற்றே தர்மசங்கடமாக சிரித்தார்.“நீங்கள் நாளையிலிருந்து உங்கள் சிற்ப வேலைகளைத் துவங்கலாம்” என்றார் சிரித்துக்கொண்டே. தினமும் காலையில் எட்டு மணிக்குப் போய் விடுவேன். அவர் ரெடியாக இருப்பார்.“உங்களது சட்டையைக் கழற்ற முடியுமா? உங்களை ‘பேர்பாடி’ ஆக சிலைவடிக்க விருப்பம்.” என்றேன். தயங்காமல் சட்டையைக் கழட்டிவிட்டு உட்கார்ந்தார்.  ஒரு வாரம் இப்படியே ஓடியது. தினமும் எனக்கென ஒன்றிரண்டு மணி நேரம் ஒதுக்கினார். இதற்கிடையே, ‘எனது நண்பர் ஒருவர் உங்களை ஓவியமாகத் தீட்ட ஆசைப்படுகிறார்’ என்றேன். “அவரையும் வரச் சொல்லுங்களேன்” என்றார் பெருந்தன்மையாக. இதன்பின், நண்பர் பணிக்கரும் என்னுடன் வந்திருந்து அவரை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தார்.

மூன்று வார காலத்தில் எங்கள் இருவரின் பணிகளும் முடிந்தன. காமராஜரை நேரில் இருந்து, பார்த்து, நான் வடித்த அந்தச் சிலை தற்போது கார்ப்பரேஷன் மேயர் ஹாலில் வீற்றிருக்கிறது. பெரியாரை என் முன் அமர வைத்து சிலையாக வடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தபோது தமிழறிஞரும் எழுத்தாளருமான மயிலை சீனி. வேங்கடசாமி என்நினைவுக்கு வந்தார். அவர் என்னைப்பெரியாரிடம் அழைத்துச் சென்றார்.அப்போது, மவுண்ட் ரோட்டின் பின்புறம்இருந்த தனது அலுவலகத்தில் இருந்தார் பெரியார். “எத்தனை நாள் தேவைப்படும்” என்று கேட்டார். “பதினைந்து இருபது நாளாவது வேண்டும்.தினமும் இரண்டு மணி நேரம் கிடைத்தால் போதும்.” என்றேன். “அத்தனை நாட்கள் சேர்ந்தாற்போல்நான் இங்கு இருக்கிறதில்லையே. ஒன்றுசெய்யுங்கள் திருச்சியில் அரசியல் வகுப்பு எடுப்பதற்காக முப்பது நாள்கேம்ப் போடப்போறேன். முடிஞ்சா நீங்கஅங்கே வந்துடுங்க. உங்க வேலையை அங்கே வச்சு முடிச்சுடலாம்” என்றார் பெரியார். திருச்சிவரை ரோலிங் ஸ்டாண்ட், களிமண் போன்ற எனது சிற்ப உபகரணங்களை கிலோ கணக்கான வெயிட்டில் எடுத்துக் கொண்டு செல்வது ரொம்பவும் கடினமான விஷயம்தான். இருப்பினும் கிடைத்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதால் உடனடியாக திருச்சிக்கு வருவதாக ஒப்புக் கொண்டேன்.  அடுத்த சில தினங்களில் திருச்சிக்குஅறுபது கிலோ லக்கேஜூடன் புறப்பட்டேன். பெரியார் மிகுந்த அன்போடு ஒத்துழைத்தார். மணிக்கணக்கில் ஓரிடத்தில் ஒரே கோணத்தில் அமர்ந்திருப்பது பற்றி துளியும் அவர் எரிச்சல் படவில்லை.

பெரியாரது அலை அலையான கூந்தல் கடற்கரை அலைகளை நினைவுபடுத்தியது. அவரது கழுத்து அமைப்பைப் பார்க்கும் போது எனக்கு பீரங்கிதான் நினைவுக்கு வரும். அவரைப் போன்ற உருவ அமைப்பு உள்ளவரை சிலையாக செய்வதென்றால் எந்த சிற்பிக்குமே குதூகலம் வரும். அப்படி ஒரு பெர்சனாலிட்டி அவர். பெரியாரின் சிலை பிரமிக்கத்தக்க வகையில் உருவானது. பெரியாருக்கும் சிலை பிடித்திருந்தது. கவிஞர்பாரதிதாசன் அந்த சிலையை வைத்தகண் வாங்காமல் நெடுநேரம் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டி ஒரு கவிதைஎழுதித் தந்தார். ஓவியர்கள் சிற்பிகள் மத்தியிலும் எனக்குப் பெரும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்ததில் இந்தக் கலைப்படைப்புக்கும் முக்கியப் பங்குண்டு. அந்தப் பெரியார் சிலை இப்போது எங்கே இருக்கிறது? நியாயமான கேள்விதான். நான் நேரில் பார்க்காமல், பார்க்க வாய்ப்பு கிடைக்காமல், ஆனாலும் செய்தே தீரவேண்டும் என்கிற வெறியோடு செய்த தலைவர்களும் உண்டு. மகாத்மாவின் சிலையை வடிக்கும் எண்ணம் எனக்கு வந்தபோது காலம் கடந்துவிட்டிருந்தது. ‘கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் ஒரு மகாத்மாவை மனதால் உணர்ந்து சிலைவடிக்க முடியாதா?’ எனும் கேள்விஎன்னுள் எழும்பியதும் உத்வேகம் பிறந்தது. மகாத்மாவைப் பற்றி ‘தேசிய வெளியீட்டுக் கழகம்’ அவருடைய அரிய படங்களுடன் கூடிய புத்தகம் ஒன்றை அப்போது வெளியிட்டிருந்தது. அந்தப் புத்தகத்தில் இருந்த புகைப்படங்களை முதல் வேலையாகக் கத்தரித்து வைத்துக்கொண்டேன். காந்தியுடன் நான் மேற்கொண்ட பயணத்தில் எனக்கு வெற்றிதான்!காந்தி, இறைவனை நோக்கியபிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறாற்போன்ற தோற்றம் எனக்குள் இருந்த கலைக்கதவைத் திறக்க .... அதுவேசிலையாயிற்று. என் நினைவில் உள்ளுறைந்து கரங்கள் மூலம் வெளிப்பட்ட ‘காந்தி’ சிலை, பலரது பாராட்டுகளையும் பெற்றுவெற்றியடைந்தது . காந்தியை நான் வடித்திருக்கிறேன் என்று காமராஜர் கேள்விப்பட்டதும், வீடு தேடி வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போனார். தேவதாஸ் காந்தி, சென்னைக்கு வந்தபோது அவரையும் சிலை பார்ப்பதற்காக என் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்சிலையைப் பார்த்ததும், தேவதாஸ் சில நிமிடங்கள் யாருடனும் எதுவும் பேசவில்லை. பல கோணங்களிலும்  நின்றுபார்த்தவர், இறுதியில் பெருமூச்செறிந்தார். என் கைகளைப் பிடித்து அழுத்தி, “ரொம்ப நன்றாகச்செய்திருக்கிறீர்கள் ! என் அப்பாவைநேரில் பார்த்தது போலவே இருக்கிறது!” என்றார். சொல்லும்போதே குரல்தழுதழுத்தது. கண்ணீர்த் திவலைகள் எட்டிப் பார்த்தன . (சிற்பி தனபால் நூற்றாண்டை யொட்டி ‘விகடன் தடம்’ வெளியிட்ட சுயசரிதையின் சில பகுதிகள்)

;