tamilnadu

img

இந்நாள்  இதற்கு முன்னால்... செப்டம்பர்  07

1923- குற்றங்களைத் தடுப்பதில் உலக நாடுகளின் காவல் துறைகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும் பன்னாட்டுக் காவல் அமைப்பான இண்ட்டர்ப்போல் தொடங்கப்பட்டது. நாட்டை அந்நியர்களிடமிருந்து காக்கும் ராணுவத்திலிருந்து மாறுபட்டு, உள்நாட்டுக்குள் குற்றங்களைத்தடுத்து மக்களுக்குப் பாதுகாக்கும் அமைப்புகள் பண்டைய சீனா தொடங்கி வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும் உருவாகியிருந்தாலும், தற்போதைய வடிவிலான உலகின் முதல் காவல்துறை 1829இல் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது(இத்தொடரில் 2018 ஜூன் 19). படிப்படியாக உலகின் பல நாடுகளிலும் நவீன காவல்துறைகள் உருவானாலும், நாடுகளுக்கிடையே பயணிப்பதில் தற்போதிருப்பதுபோன்ற கட்டுப்பாடுகள் அக்காலத்தில் இல்லாததால், நாடுகடந்து தப்பித்துவிடும் குற்றவாளிகளைப் பிடிப்பதிலும், மற்றொரு நாட்டிலிருந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோரைத் தடுப்பதிலும் ஏராளமான சிக்கல்கள் நிலவின. 1914இல் மொனாக்கோவில் 24 நாடுகளின் சட்ட வல்லுனர்களாலும், அலுவலர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் பன்னாட்டுக் குற்றவியல் காவல்துறை மாநாடு, காவல்துறையின் பங்கேற்பின்மையால் தோல்வியில் முடிந்தது. 1922இல் நியூயார்க்கில் நடைபெற்ற முதல் பன்னாட்டுக் காவல்துறை மாநாடு, நாடுகளின் கவனத்தை ஈர்க்காமல் தோல்வியுற்றது. 1923இல் வியன்னாவில் 20 நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இரண்டாவது பன்னாட்டுக் குற்றவியல் காவல்துறை மாநாட்டில் ‘பன்னாட்டுக் குற்றவியல் காவல்துறை ஆணையம்’ உருவாக்கப்பட்டது. 1938இல் ஆஸ்திரியாவை ஜெர்மெனி கைப்பற்றியதைத் தொடர்ந்து, இந்த ஆணையமும் நாஜிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. தலைமையிடம் பெர்லினுக்கு மாற்றப்பட்டதுடன், நாஜிகளின் அடியாள்படையான சுட்ஸ்டாஃபல்(எஸ்எஸ்) படையின் தளபதிகளே இதன் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டதால், பெரும்பாலான உறுப்பினர் நாடுகள் தங்கள் ஒத்துழைப்பை நிறுத்திக்கொண்டன. இரண்டாம் உலகப்போருக்குப்பின் 1946இல் ‘பன்னாட்டுக் குற்றவியல் காவல்துறை அமைப்பு’ என்ற பெயரில் புத்துயிரூட்டப்பட்டு, தலைமையகம் பாரிசுக்கு மாற்றப்பட்டது. அப்போது இதன் தந்திக்குறியீடாகப் பயன்படுத்தப்பட்ட இண்ட்டர்ப்போல் என்பதே, 1956இல் இதன் பெயராக மாற்றப்பட்டது. தலைமையிடம் தற்போதுள்ள லியான்(ஃப்ரான்ஸ்)க்கு 1989இல் மாற்றப்பட்டது. தற்போது 194 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இண்ட்டர்ப்போலின் ஆண்டுச் செலவுகள் சுமார் ரூ. ஒரு லட்சம் கோடி! நாடுகடந்த தீவிரவாதம், கணினிக் குற்றங்கள், ஒருங்கிணைந்த குழுக்குற்றங்கள் என்று மூன்று முக்கியப் பிரிவுகளிலான குற்றங்களைத் தடுப்பதை நோக்கமாகக் குறிப்பிட்டாலும், அனைத்துவகைக் குற்றங்களையும் கையாளும் இண்ட்டர்ப்போல், குற்றங்கள் குறித்த தரவுகளை அளிப்பதன்மூலமும் உலக நாடுகளுக்கு உதவுகிறது.
 

;