tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்... ஹோசிமின் நினைவு நாள்

அமெரிக்க வல்லரசை மண்ணைக் கௌவ வைத்த வியட்நாம் விடுதலைப்போர்த் தலைவர் தோழர் ஹோசிமின் அவர்களை “ஹோமாமா” என வியட்நாம் மக்கள் அன்புடன் அழைத்ததிலிருந்தே அம்மக்கள் அவர்மீது வைத்திருந்த அளப்பரிய அன்பையும் மதிப்பையும் உணரலாம். உலகத்தின் அசைக்க முடியாத வல்லரசுஎனக் கருதப்பட்ட அமெரிக்கா வியட்நாம் மக்களிடம் படுதோல்வியைச் சந்தித்தது. 30 லட்சம் மக்களின் உயிர்த் தியாகத்தில் வியட்நாம் வெற்றியை ஈட்டியது. அமெரிக்காவின்படையில் 58000 பேர் கொல்லப்பட்டனர். 1945ல் ஜப்பானின் ஹிரோஷிமா , நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டுகளைப் போட்டு லட்சக்கணக்கான மக்களைக்கொன்று குவித்த ரத்தவெறி பிடித்த ட்ரூமன்வழியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாம்யுத்தத்தின் போது  பல மடங்கு நாசகரமானநாபாம் குண்டுகளை வியட்நாம் மீது வீசிவியட்நாமிய மக்களை அடி பணிய முயற்சிசெய்த ஆணவத்திற்கும், அடங்காபிடாரிதனத்திற்கும் மொத்தமாக ஆப்பு வைத்து,வெறும் மூங்கில் கழிகளையும், குச்சிகளையும் வைத்தே கொரில்லா யுத்தத்தின் மூலம் பீரங்கிகளையும், விமானங்களையும், நவீன குண்டுகளையும் கொண்ட அமெரிக்காவைப் புறமுதுகிட்டு ஓட வைத்தனர் வீர வியட்நாம் மக்கள். 

தோழர் ஹோசிமின் வாழ்ந்த மூங்கில் வீடு மிகவும் எளிமையாக அமைந்துள்ளது. தென்னைமரங்களும், மூங்கில்களும், வாழைமரங்களும் அருகில் ஒரு சிறு குளமும் உள்ள ரம்மியமான இயற்கை கொஞ்சுமிடம். எங்கும் பறவைகளின் கொஞ்சும் ஒலிகள், காற்றின் சலசலப்பில் எழும் இசையில் அமைந்த இடம். செய்தி தாள்களும், புத்தகங்களும், ஒருதட்டச்சு எந்திரமும், படுக்கைக்கு பதிலாக பாய் விரிக்கப்பட்டுள்ளது. இதுதான் அவரின் வாழிடம். எந்த நேரமும் உழைப்பும், படிப்புமாக செயலாக்கத்தின் முன்மாதிரியாக இருந்துள்ளார்.இது குறித்து சோவியத்தின் நிருபர் ஒருவர்பேட்டி கண்டபோது ஹோசிமின் அன்றாடவாழ்க்கைகுறித்த கேள்விக்குப் பதில் அளிக்கையில்ஹோசிமின், “நான் அதற்குப் பழகிவிட்டேன்.

எப்போது வேண்டுமானாலும் எழுந்து கிளம்பி விடலாம், புரட்சியின் போதும், தலைமறைவு வாழ்க்கையின் போதும் இதனைக் கற்றுக் கொண்டேன்.  எழுந்து புறப்பட ஐந்துநிமிடங்களே போதுமானது’’. என பதிலளித்துள்ளார் .“ஒரு நாளைக்குஎவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள் என்று கேட்ட போது “ பறவைகளோடு நான் எழுகிறேன், வானில் நட்சத்திரங்கள் தோன்றும் போது உறங்கச் செல்கிறேன்’’ என்றார்.தோழர் ஹோசிமின் மிகக்கடுமையான உழைப்பாளி. சிறு வயது முதல் அவர் படிக்கும்காலத்தில் ரூசோவைக் கற்றபோது பிரெஞ்சுபுரட்சியின் முழக்கமான சுதந்திரம், சமத்துவம்,சகோதரத்துவம் என்பதை எப்படி முழங்கினார்.அந்த கோஷங்களின் பின்னுள்ள வரலாறு என்ன என்பதைத்தெரிந்துகொள்ள சிறுவயதிலேயே பிரான்சை நோக்கிச் சென்றார் கப்பலில். அப்போது எதுவும் தெரியாமல், உணவுக்கும், தங்கவும் என்ன செய்வாய் என்று நண்பர் கேட்டபோது “இரண்டுகைகளையும் உயர்த்தி பத்து விரல்களைக்காண்பித்து இது தான் மூலதனம்’’ என்றார்.கால்சட்டையும், சுருட்டி விடப்பட்ட மேற்சட்டையும் அணிந்து கொண்டு எங்கு போக வேண்டுமென்றாலும் நடந்தே செல்லும் பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்தார். மலைகளா? செங்குத்தான சிகரமா? வனம் அடர்ந்த காட்டுப்பாதையா ? அனைத்திலும் நடந்தே சென்றார்.

1930ல் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியைஉருவாக்கியது முதல் தனது இறுதி நாள் வரை மார்க்சிய லெனினியப் பாதையில் உறுதியாக நின்று அதுதான் அத்தனை செயல்களுக்கும் அடிப்படையான தத்துவம், வளரும் சமூக விஞ்ஞானம், பிரச்சனைகளின் தீர்வு அதில் தான் உள்ளது என்பதை உரக்கச் சொல்லி அதன் அடிப்படையில் புரட்சியின் பாதை என்ற புத்தகத்தை வியட்நாமின் புரட்சிக்கான கட்டமைப்பு குறித்து எழுதினார். அது தான் இன்று வரை வியட்நாம் கம்யூனிஸ்ட்களின் அடிப்படையான நூலாகப் போற்றப்படுகிறது.     

;