tamilnadu

img

இந்நாள் செப். 02 இதற்கு முன்னால்

1945 - இரண்டாம் உலகப்போரை முறைப்படி முடிவுக்குக்கொண்டுவந்த, ஜப்பானியப் பேரரசு சரணடைவதான ஒப்பந்தம், டோக்கியோ குடாவிலிருந்த அமெரிக்க போர்க்கப்பலில், ஜப்பான், சீனா, அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்டது. இரண்டாம்  உலகப்போர் 1939 செப்டம்பர் 1இலிருந்து, 1945 செப்டம்பர் 2வரை, ஆறாண்டுகளும் ஒரு நாளும் நடந்ததாக பொதுவாக ஏற்கப்படுகிறது. ஆசியப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த விரும்பிய ஜப்பான், 1937இலிருந்தே சீனாவுடன் போரிட்டுக்கொண்டிருந்தாலும், இரு நாடுகளுமே முறைப்படி போரை அறிவிக்கவில்லை. போலந்தின்மீது ஜெர்மனி படையெடுத்த 1939 செப்டம்பர் 1, போரின் தொடக்கமாக பொதுவாக ஏற்கப்படுகிறது.  அபிசீனியாமீது இத்தாலி படையெடுத்த 1935 அக்டோபர் 3இலிருந்தே உலகப்போர் தொடங்கியதாகவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. தொடக்கத்தில், ஐரோப்பிய அச்சு நாடுகளுக்கும், இங்கிலாந்துக்குமிடையே(அவற்றின் குடியேற்றங்கள் உட்பட) மட்டுமே பெரும்பாலுமிருந்த போர், அச்சு நாடுகள் சோவியத் ஒன்றியத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து விரிவடைந்தது. பிரெஞ்ச் இந்தோசீனப் பகுதிக்குள் ஜப்பான் புகுந்ததையடுத்து, ஜப்பானுக்கு ஏற்றுமதிசெய்துகொண்டிருந்த விமான எரிபொருள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா நிறுத்திவிட, முத்துத் துறைமுகத்தின்மீது திடீர்த் தாக்குதலை ஜப்பான் நடத்தியதைத் தொடர்ந்து பசிபிக் பகுதிக்கும் போர் பரவியது. உலகின் மிகப்பெரும்பான்மையான நிலப்பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 30 நாடுகளும், சுமார் 10 கோடி மக்களும் நேரடியாகப் பங்கேற்று, சுமார் 7-8.5 கோடிப்பேர் பலியான, மனிதகுல வரலாற்றின் மிகமோசமான நிகழ்வாக இப்போர் மாறியது. இறந்தவர்களில் பெரும்பான்மையோர், ஹிட்லரின் இனப்படுகொலை, போரின் வியூக குண்டுவீச்சுகள், உணவுப்பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் பலியான பொதுமக்களே. 1945 ஏப்ரலில் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, ஜெர்மனி சரணடைந்தது. அதைத்தொடர்ந்து, அதன் நிலைகுறித்து விவாதிக்க ஜெர்மனியின் பாட்ஸ்டம் நகரில் கூடிய நேசநாடுகள், சரணடையாவிட்டால் ஜப்பான் பேரழிவைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்தன. ஜப்பான் சரணடையாத நிலையில், ஆகஸ்ட் 6,9 தேதிகளில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின்மீது அமெரிக்கா அணுக்குண்டு வீசியதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 15இல் ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப்போரின் முடிவாக இந்த நாளும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்பட்டாலும், ஜப்பான் சரணடைந்ததற்கான ஒப்பந்தம் கையெழுத்தான செப்டம்பர் 2ஆம் தேதியே போரின் முடிவாக பெரும்பாலானவர்களால் ஏற்கப்பட்டுள்ளது.

;