tamilnadu

img

இந்நாள் அக்டோபர் 12 இதற்கு முன்னால்

1810 - பீர் திருவிழாகளின் முன்னோடியும், உலகின் மிகப்பெரிய பீர் திருவிழாவு மான அக்டோப ர்ஃபெஸ்ட், முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது. பின்னாளில் பவேரியாவின் அரசரான முதலாம் லுத்விக் இளவரசராக இருந்தநிலையில், அவருக்கும், சேக்ஸ்-ஹில்ட்பர்காவ்சென்-னின் இளவரசியான தெரேசா-வுக்கும் இந்நாளில் நடைபெற்ற திருமணத்தின் ஒரு பகுதியாக இவ்விழா நடத்தப்பட்டது. கோட்டையின் வாயிற்பகுதியில் தெரசீன்வீஸ்(தெரேசாவின் திடல்) என்ற பெயரில் மிகப்பெரிய புல்வெளி அமைக்கப்பட்டு, முனீச் நகர குடிமக்கள் அனைவரையும் அழைத்து, அக்காலத்தில் விழாக்களில் இடம்பெறும் குதிரைப் பந்தயம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்தத் திடல் இன்றும் அதே பெயரில், சுருக்கமாக வீசன் என்று அழைக்கப்படுகிறது. விருந்தினராக வந்திருந்த குடிமக்களுக்கு ஏராளமான பீரும், ஒயினும் வழங்கப்பட்டன. இவ்விழா ஏற்படுத்திய மகிழ்ச்சியைத் தொடர 1811இல் மீண்டும் நடத்தப்பட்டது. அப்போது, பவேரியாவின் விவசாயத்திற்கு முக்கியத்துவமளிக்கும் விழாவாக இது மாறியது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் என்பதாலேயே பீரும், ஒயினும் முக்கிய இடம்பெற்றன. 1812இல் பவேரியாவின் அரசர் முதலாம் மேக்மிலியன் ஜோசஃப், ஸ்ட்ராவ்பிங் நகரில் கவ்ஃபோடென்ஃபோக்ஸ்ஃபெஸ்ட் என்ற விவசாயத்திற்கான பீர் திருவிழாவை நடத்தினார். இவ்விழாக்களில் நடன நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறலாயின. 1850களில், பாரம்பரிய உடையுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பேரணியும் முக்கிய அங்கமாகியது.

ஆண்டுதோறும் முனீச்சில் செப்டம்பர் இறுதியில் தொடங்கி, அக்டோபர் முதல் ஞாயிறுவரை நடைபெறும் இவ்விழா, ஐரோப்பா முழுவதும் பரவி, பீர் திருவிழாவாக மாறுபட்ட தேதிகளில் நடத்தப்படுகிறது. 2013இல் 16 நாட்கள் நடைபெற்ற முனீச் விழாவில் மட்டும் 77 லட்சம் லிட்டர் பீர் அருந்தப்பட்டுள்ளது. ஜப்பான், சீனா, சிங்கப்பூர், ஜார்ஜியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வட அமெரிக்க நாடுகளிலும், அர்ஜெண்ட்டினா, பிரேசில், சிலி, ஈக்வெடார், கொலம்பியா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளிலும் பீர் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நண்பர்களுடன் பீரின் சுவையைக் கொண்டாடுதல், பீரின் உற்பத்தியாளர்களான விவசாயிகள், காய்ச்சுபவர்கள் ஆகியோரை மரியாதை செய்தல், பீரின் பெயரால் உலகை ஒன்றுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், 2007இல் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட பன்னாட்டு பீர் தினம், தற்போது 80 நாடுகளால், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டு, கொண்டாடப்படுகிறது.

-அறிவுக்கடல்

;