tamilnadu

img

இந்நாள் ஆகஸ்ட் 07 இதற்கு முன்னால்

1858 - ‘ஆஸ்திரேலிய விதிகள் கால்பந்து’ போட்டி முதன்முறை யாக விளையாடப்பட்டது. வழக்கமான கால்பந்து விளை யாட்டில், செவ்வக வடிவ மைதானத்தில், பந்தைக் காலால் உதைப்பது மட்டுமே அனுமதிக்கப்படுகிற நிலையில், இவ்விளையாட்டில், நீள்வட்ட மைதானத்தில், பந்தைக் காலால் உதைத்தோ, கைகளால் தட்டியோ விளையாடலாம். பந்தைக் கையால் வீசுவது தவறு என்றாலும், உதைக்கப்பட்ட பந்தை கையால் பிடிப்பதும் சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுகிறது. உலகிலேயே மிக அதிக மாறுபட்ட முறைகளில் விளையாடப்படும் விளை யாட்டு கால்பந்துதான். கி.மு.2-3ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சீன ராணுவ நூல்களில் காணப்படும் குஜு என்ற கால்பந்து விளை யாட்டு பற்றிய குறிப்பை, இவ்விளையாட்டு பற்றிய மிகப்பழைய அறிவியல்பூர்வ மான ஆதாரமாக ஃபிஃபா குறிப்பிடுகிறது. பண்டைய கிரேக்கம், ரோம், ஜப்பான் என்று உலகின் பல்வேறு பகுதிகளிலும், காலால் பந்தை உதைத்து விளையாடும் விளையாட்டு இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.

உதைக்கப்பட்ட பந்து நாவிதரிடம் மழித்துக்கொண்டிருந்த ஒருவர்மீது விழுந்து அவர் இறந்ததாக, கிமு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம  அரசியல் தலைவர் சிசெரோ குறிப்பிட்டுள்ளார். இடைக்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த கால்பந்து விளையாட்டு, தற்போது, உலகம் முழுவதும் விளையாடக்கூடியதும், ஃபிஃபா அமைப்பால் கட்டுப் படுத்தப்படுவதுமான ‘அசோசியேஷன் கால்பந்து’ (சில நாடுகளில் இதன் பெயர் சாக்கர்!), அமெரிக்கக் கால்பந்து, கனடியக் கால்பந்து ஆகியவற்றை உள்ளடக்கிய ‘க்ரிடிரோன் கால்பந்து’, ஆஸ்திரேலிய விதிகள் கால்பந்து, இங்கிலாந்திலுள்ள ரக்பி பள்ளி என்பதில் தொடங்கப்பட்ட ரக்பி கால்பந்து, கெய்லிக் கால்பந்து ஆகிய முக்கிய பிரிவுகளின்கீழ், ஏராளமான மாறுபட்ட வகைகளில், மாறுபட்ட வீரர்கள் எண்ணிக்கை, மைதானம் உட்பட மாறுபட்ட விதிகளுடன் விளையாடப்படுகிறது. அசோசியேஷன் கால்பந்தில் கோள வடிவப் பந்தும், ரக்பியில் நீள்வட்டப் பந்தும், ஆஸ்திரேலிய கால்பந்தில் முனையுடன்கூடிய நீள்வட்டப்பந்தும் பயன்படுத்தப்படுகிறது. தொடக்க காலத்தில், விலங்குகளின், குறிப்பாகப் பன்றியின், சிறுநீர்ப்பைதான்(ப்ளாடர்) காற்றடைத்து, பந்தாகப் பயன்படுத்தப்பட்டது. இவை சேதமுறுவதைத் தடுக்க தோலாலான உறைகள் பின்னாளில் சேர்க்கப்பட்டன. தற்போதுள்ள ஐங்கோண (அல்லது அறுகோண) துண்டுகளாலான மேலுறை 1970 ஃபிஃபா உலகக்கோப்பைப் போட்டியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

;